வாய்த்தர்க்கம் செய்தவரை சுட்டுக் கொன்ற காவல்துறை: அணி திரண்ட மக்கள், விசேட அதிரடிப்படை குவிப்பு

breaking
  மொரட்டுவை - லுனாவ பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டில் 39 வயதான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. குறித்து சம்பவம் இன்று அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில், ஈடுபட்டிருந்த அங்குலான பொலிஸார் மூவர் திடீர் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த நபர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதையடுத்து, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தையடுத்து பொலிஸ் அதிகாரிகளை அப் பிரதேச மக்கள் சுற்றிவளைத்துள்ளதையடுத்து அங்கு பதற்ற நிலையேற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அப் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.