திருச்சி ஈழத்தமிழர்  உறவுகளுக்கு  துயர் துடைப்புப் பணி.!

breaking
கொரோனா முடக்கம் காரணமாக ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரமும் முடங்கிப் போயுள்ளது. தொழில் நிறுவனங்கள் இயங்க முடியாமல், மக்கள் வருவாயின்றி மிகப்பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்களின் நிலையும் கவலைக்குரியதாக உள்ளது. குறிப்பாக, திருச்சி அருகிலுள்ள வாழவந்தான்போட்டை ஈழத்தமிழர் முகாமில் வாழும் மக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா மட்டுமின்றி, காவல்துறையினரின் கெடுபிடியும் அம்மக்களை முழுமையான முடக்கியுள்ளது.
இதனையடுத்து, அம்முகாமில் வாழும் 300க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்க் குடும்பங்களுக்கு கொரோனா துயர் துடைப்புப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன. கனடா வாழ் தமிழர்கள் உதவி குழும நண்பர் வட்டம் இதற்காக திரட்டிய பொருட்களை, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திருச்சி தோழர்கள் இன்று (11.07.2020) காலை நேரில் வழங்கினர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 21 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி கொண்ட பை – கொரோனா துயர் துடைப்புப் பொருட்களாக வழங்கப்பட்டன. கனடா வாழ் தமிழர்கள் இப்பெரும் பணிக்கான தொகையை வழங்கி உதவினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன், பொதுக்குழு தோழர் மூ.த. கவித்துவன், தோழர் மு. தியாகராசன் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா. வைகறை, க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர்கள் பி. தென்னவன், தீந்தமிழன், இனியன், வெள்ளம்மாள், தோழர்கள் வே.பூ. இராமராசு, இராகுல், பாசுகர், முனியப்பன், சுரேந்தர், பாரி, அழகர், கபாருதீன் உள்ளிட்டோரும், அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. தேவராசன், முகாம் செயலாளர் திரு மோகன் உள்ளிட்டோரும் பங்கேற்று, துயர் துடைப்புப் பொருட்களை தனிமனித இடைவெளியுடன் பெற்றுச் செல்ல உரிய ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்திச் செய்தனர்.
மார்வாடி - குசராத்தி - மலையாளி - தெலுங்கர் என வந்தவனெல்லாம் தமிழ்நாட்டில் சொகுசாக வாழ்ந்து கொண்டுள்ள நிலையில், நம் தொப்புள்கொடி உறவுத் தமிழ் மக்கள், தமிழ் மண்ணிலேயே தமிழ்நாடு அரசின் காவல்துறையினரால் குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுவதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அல்லல்படுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது! எனவே, தமிழ்நாடு அரசு, வாழவந்தான்கோட்டை முகாமில் வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துத் தர வேண்டும்.
அம்முகாமில் கெடுபிடிகளைத் தளர்த்தி, அம்மக்கள் தமிழ்நாட்டுத் தமிழர் போலவே இயல்பாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என நிகழ்வை ஒருங்கிணைத்த த.தே.பே. திருச்சி செயலாளர் தோழர் வே.க. இலக்குவன் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம்