பாதாள உலக குழு உறுப்பினரின் சகாவிடம் கைத்தொலைபேசியும் கைக்குண்டும் மீட்பு

breaking
    பாதாள உலகக் குழு உறுப்பினர் கொஸ்கொட தாரகவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர் என சந்தேகிக்கப்படும் முத்தெட்டுவட்ட ஓப்பநாயக்க என்பவரிடமிருந்து கையடக்கத்தொலைபேசியொன்றும் கையெறி குண்டொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கொஸ்கொட தாரகவின் சகாவான களு மல்லி எனப்படும் ரோஹான் பிரதீப் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, தொலைபேசியையும், கைக்குண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேக நபரான முத்தெட்டுவட்ட ஓப்பநாயக்க என்பவரின் சகோதரியுடைய இல்லத்தில் பின்னால் புதைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த கைக்குண்டும் தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொஸ்கொட தாரகவுடன் போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ரோஹான் பிரதீப் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்பதை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அதன் பின்னர் அவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 40 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இருந்துள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மீட்டியாகொட மற்றும் கஹாவாவில பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்குமாறும் பலபிட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.