முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்பட்ட கொரொனாவால் இறந்தவரின் உடல்

breaking
  உலகம் முழுவதும் கொரோனா பேரிடர் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் பொதுமக்களும், மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவில் கொரோனா பிரேதங்களை அலட்சியமாக குழிக்குள் தூக்கி வீசப்படும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நபரின் உடல் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. கடந்த வெள்ளி அன்று நடந்ததாக கூறப்படும் சம்பவம் அடுத்த நாள் தான் வெளியே தெரியவந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் சேனல்களிலும் வைரலானதை அடுத்து விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த புகைப்படத்தில் ஆட்டோவின் பின்புறம் பயணிகள் கால் வைக்கும் இடத்தில் பிரேதத்தை வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆட்டோவின் வெளியே இருபுறமும் உடல் நீட்டிக் கொண்டிருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உடலை எடுத்துச் செல்லும் ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் ஆகியோர் முழு உடல் பாதுகாப்பு கவசத்தை அணியவில்லை. வெறும் முகக் கவசம் மட்டுமே அணிந்து சென்றுள்ளனர். இது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அரசின் உத்தரவுப்படி கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல்களை எடுத்துச் செல்லும் நபர்கள் முழுமையான தனி நபர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாகனத்தில் கிருமி நாசினி உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.நாராயண ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் ஆட்டோவில் பிரேதத்தை கொண்டு சென்ற நகராட்சி ஊழியரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆட்சியர் கூறுகையில், நிசாம்பாத் மருத்துவமனையில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளன. இதன்மூலமே உயிரிழந்த நபர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த வெள்ளி அன்று 4 பேர் பலியாகியுள்ளனர். இதில் 3 பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தவர்கள். இந்நிலையில் இரண்டு உடல்களுடன் இரு ஆம்புலன்ஸ்களும் புறப்பட்டுச் சென்றுவிட்டன. மேலும் இரண்டு உடல்கள் நன்கு மூடப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்று உயிரிழந்தவரின் உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்கள் தங்களது ஆட்டோவில் கொண்டு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் நகராட்சி ஊழியருடன் உடலை ஆட்டோவில் கொண்டு செல்ல மருத்துவமனை ஏற்பாடு செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு மருத்துவ இயக்குநர் ரமேஷ் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.