கணவரின் காரை வழிமறித்து போராடிய மனைவி

breaking
வேறு பெண்ணை உடன் அழைத்துச் சென்ற கணவரின் காரை வழிமறித்து மனைவி போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக மும்பை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தெற்கு மும்பை பகுதியில் பெட்டர் சாலை உள்ளது. இது கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதியாகும். கடந்த சனிக்கிழமை மாலை பெட்டர்சாலையில் கருப்பு நிற ரேஞ்ச்ரோவர் கார் சென்று கொண்டிருந்தது. பின்னால் வந்த ஒரு வெள்ளை நிற கார், ரேஞ்ச் ரோவர் காரை விரட்டி சென்று பிடித்தது. வெள்ளை நிற காரில் இருந்து இறங்கிய பெண், ரேஞ்ச் ரோவர் காரை வழிமறித்து சாலை நடுவில்நின்று போராடினார். காரின் ஓட்டுநர்இருக்கையில் இருந்த நபரைவெளியே இழுக்க முயன்றார். காரின் பேனட் மீது ஏறி கூச்சலிட்டார். அந்த பெண்ணின் திடீர் போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த 3 போலீஸார் தலையிட்டு ரேஞ்ச் ரோவர் காரையும், வெள்ளை நிற காரையும் காம்தேவி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மும்பை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரவீண் பட்வால் கூறும்போது, "ரேஞ்ச் ரோவர் காரில் 30 வயதான ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இருந்தனர். வெள்ளை நிற காரில் வந்த பெண், ரேஞ்ச் ரோவர் காரில்இருந்த ஆணின் மனைவி ஆவார்.சந்தேகத்தின்பேரில் அந்த பெண்,கணவரின் காரை வழிமறித்துள்ளார். அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்து பெரும் பிரச்சினை ஏற்பட்டது.சாலையில் காரை நிறுத்திவிட்டு, மற்றொரு காரை வழிமறித்த பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை" என்று தெரிவித்தார். ரேஞ்ச் ரோவர் காரை வழிமறித்து மனைவி போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.