தமிழீழ விடுதலைப் புலிகளின் இளம் கெரில்லா வீரன் வீரவேங்கை ஆனந்

breaking
வீரவேங்கை ஆனந் இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.01.1964 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு  
தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன் உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன்.
 
நெஞ்சில் வழியும் இரத்தத்தோடுஇ ‘என்னைச் சுடு’ என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப் பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் துப்பாக்கிச் சன்னங்கள் சீலனின் தலையிலே பாய்வதைப் பார்க்கின்றான் ஆனந்த். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் சிங்களக் கூலிப்படைகளின் துப்பாக்கிச் சன்னங்கள் ஆனந்தையும் வீழ்த்துகின்றன.
 
சீலனோ அந்தக் கெரில்லாப் படைத் தலைவர் அரசபடையால் வலைவீசித் தேடப் படுபவன்இ சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தாக்குதல் சம்வபவத்தில் சீலனின் தலைமையிலே அந்தக் கெரில்லாத் தாக்குதல் நடைபெற்றது. என்பதைச் சிங்களக் கூலிப்படைகள் தெரிந்து வைத்திருந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த அங்கத்தவன் – சிங்களக் கூலிகளின் கரங்களில் அந்தக் காளை பிடிபடவே முடியாது.
 
சீலனுக்கு தன்னை மாய்த்துக் கொள்ளும் மனப்பாக்குவம் சிந்திப்பதற்கு அனுபவம் துணை புரிந்திருக்க வேண்டும். ஆனால்இ இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பியிற்சி பெற்று ஏழுமாதங்கள் கூட நிரம்பாத நிலையில்இ இயக்க ரகசியத்தைக் காத்துக் கொள்வதற்குத் தன்னையும் சுட்டுவிடுமாறு சக வீரனைப் பணித்த ஆனந்தின் இலட்சியத் தூய்மைஇ நம்மைச் சிலிர்ப்படையச் செய்கிறது.
 
விடுதலைப் புலிகளின் புரட்சிகர ஆயுதப் பாதையில் நம்பிக்கையோடும் உறுதியோடும் கால் பதித்த அந்த இளைஞன் எத்தனையோ யுத்த களங்களைக் காண ஆசைப் படிருப்பான். ஆனால் அந்தச் சாதனைகளை எல்லாம் செயலில் காட்ட அந்த வீரமகனின் சின்ன ஆயுள் இடம் கொடுக்க வில்லை. பத்தொன்பது வயதிற்குள்ளேயே ஆனந்த் சாவை அணைத்துக் கொள்ள நேர்ந்தது துரதிர்ஷ்டமே.
 
ஆனந்திற்கு வயதை மீறிய வாட்ட சாட்டமான உடம்பு. அரும்பு மீசை மேவித்தான் தலையிழப்பான். அடித் தொண்டையில்தான் கதைப்பான். யாரோடும் கோபிக்க மாட்டான். நண்பர்களோடு விட்டுக் கொடுக்கும் சுபாவமுடையவன். எந்த வேலையையும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் செய்பவன். சமையல் செய்வதிலிருந்து கிணறு வெட்டுவது வரை அலுப்பில்லாமல் எதையும் செய்ய முன்நிற்பான்.
 
மெல்லிய நீலநிறத்தில் ஆடைகள் அணிவதில் அவனுக்கு விருப்பம் அதிகம். மயிலிட்டி மண் ஈந்த வீரமைந்தன் ஆனந்த் நீர்கொழும்பில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றான். பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிஇ மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்றான். க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞானம் பயின்ற ஆனந்த் அரசியலைப் பின்னாளில் வாழ்க்கையாக வரித்துக் கொண்டான்.
 
பாடசாலைக் காலங்களில் ஆனந்த் சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தான். பாடசாலை உதைபந்தாட்ட அணியில் சிறந்த கோல் காப்பாளராகப் பிரபல்யம் பெற்றிருக்கிறான். சிறந்த கிரிக்கெட் வீரனுமாவான். கராத்தேயும் கற்றிருந்தான். சகலவிதமான வாகனங்களையும் நேர்த்தியாகச் செலுத்தும் திறமை கொண்டவன்.
 
தனது குறுகிய ஆயுதப் பயிற்சிக் காலத்திலும் ஆயுதங்களின் நுட்பங்களை நிறையத் தெரிந்து வைத்திருந்தான். வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் அவனுக்குப் போதுமான இரசாயண அறிவிருந்தது. துப்பாக்கிப் பயிற்சியின் போது மிகக் குறைந்த நேரத்தில் கூடிய இலக்குகளை குறிபார்த்து அடிக்கக் கூடியவன்.
 
சரியாக இலக்குக் குறிவைத்து அடித்துவிட்டான் என்றால்இ ‘ ஹாய்’ என்று கைகளை உயர்த்திக் குலுங்கிச் சிரிக்கும்போதுஇ ஒரு பாடசாலை சிறுவனின் பெருமிதமே வெளிப்படும். (குறி தப்பாது சுடுகின்ற ஒரு கெரில்லா வீரனின் திறமையயை சாகஸங்கள் என்று கொச்சையாக அர்த்தப் படுத்திக் கொண்டு நாம் குழம்பிக் கொள்ள வேண்டியதில்லை) பலம் மிகுந்த அடக்குமுறை இராணுவத்திற்கு எதிராகக் குறைந்த அளவு ஆயுதங்களுடன் தொடுக்கப்படுகின்ற கெரில்லாத் தாக்குதலின்போதுஇ இத்தகைய திறமை வாய்ந்த கெரில்லா வீரர்கள் தனிமுக்கியம் வகிக்கின்றார்கள்.
 
 
 
 
வடக்கில் புலிகளை அடக்கிவிட்டோம் என்று ஜே.ஆர் ஐயவர்த்தனா கொக்கரித்தபோது ஒரு கொரிலலப் போராட்டத்தினை அவ்வாறு அடக்கிவிட முடியாது என்பதை 1982 மீ மாதம் நெல்லியடியில் அரசபடையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் தொடுத்த வெற்றிகரமான தாக்குதல் தெளிவாக எடுத்துக் காட்டியது.
 
சிறீலங்கா சிங்கள அரசபடைகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலையடுத்து தமிழீழ மக்கள் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையின் நல்லதொரு வெளிப்பாடாக ஆனந் அமைந்தான்.
 
1982 ஜீன் மாத ஆரம்பத்தில் ஆனந் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டான். ஆயினும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்வதற்கு முன்னரேயே ஆனந் பிற சிடுதளைக்குழுக்களைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்பு கொண்டு அவர்களது இயக்க நடவடிக்கைகளைக் கேட்டறிந்திருக்கிறான். பலர் வாய்ச்சொல் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பலர் பொய்யான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் போலிகள் என்பதை உணர்ந்தே ஆனந் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தான். தங்களது அணியின் அங்கத்தவர்களது இலட்சியத் தூய்மை குறித்தும் அர்ப்பணிப்பு குறித்தும் எங்கள் இயக்கம் பெருமிதம் கொள்கிறது.
 
வளமான குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்தின் உள்ளத்திலே கனன்றெழுந்த புரட்சித் தீதான் அவனுக்குத் தமிழீழத்தின் போராட்ட வரலாற்றிலே நிரந்தரமான இடத்தைத் தேடிக்கொடுத்தது.
 
இரு தமக்கையரையும் இரு தமையன்மாரையும் கொண்ட ஆனந்தின் இதயம் விடுதலையை நாடி நிற்கும் லட்சக்கணக்கான மக்களுக்காக விசாலமாகத் திறந்திருந்தது.
 
 
 
 
1983 ஜீலை 5ம் திகதி காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்குள் சீலனின் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் சகிதம் நுழைகிறார்கள்.
 
கண் இமைக்கும்  நேரத்தில் காவலாளிகளையும், டைம்கிப்பரையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்கள்.
 
சிங்கள வெறியன் சிரில் மாத்தி யூவின் அமைச்சில் அடங்கும் இந்த சீமெந்துத் தொழிற்சாலையின் காவலாலிகல் அனைவரும் சிங்களவர்கள்.
 
நீர்கொழும்பில் நீண்ட காலம் வாழ்ந்ததால் சரளமாகச் சிங்களம் பேசும் ஆற்றல் கொண்ட ஆனந் நடுநடுங்கிக் கொண்டிருந்த காவாலாளிகளை நோக்கிச் சிங்களத்தில் கதைத்தான்.
 
“நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிரிகள் இல்லை. சிங்கள அரசின் அடக்குமுறையைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் சிங்களவர்களுக்குத்தான் எதிரிகள் என்றால் உங்களை வெடிவைத்துத் தீர்க்க எங்களுக்கு அதிக நேரம் எடுக்காது”
 
சிங்களவர்களின் நாளாந்த அடக்குமுறைக்கும் அடாவடித் தனத்திற்கும் இலக்கான நீர்கொழும்பு போன்ற பகுதியில் வாழ்ந்த, வளர்ந்த ஆனந்திற்கு சிங்களவர்களை நோக்கிய ஒரு வெறுப்பு வளர்ந்திருந்ததால் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை பற்றி அவன் மிகத் தெளிவான கருத்துக்கள் கொண்டிருந்தான். விடுதலைப்புலிக இயக்கத்தின் கொரில்லா வீரர்களில் சிங்கள நண்பர்களுடன் கூடிய பரிச்சயம் கொண்டவம் ஆனந். இது ஆனந்தின் சிறப்பம்சம். வெற்று மேடைப் பேச்சின் கூச்சங்க்களால் இவன் தமிழீழ அரசியலுக்கு ஈர்க்கப்படவில்லை. வேறு சிலரிடம் காணப்படுகின்ற குடா நாட்டுக் குறுகிய மனோபாவத்தின் சாயல் கூட இவனிடம் இல்லை. நீர்கொழும்பில் சாதாரணச் சிங்கள மக்களுடன் ஆனந் நிறையப் புழங்கியிருக்கிறான். அவன் சிங்களம் போசும்போது மிக இயல்பாக சிங்களவர்கள் பேசுவது போல இருக்கும் என்று அவனுடைய நெருங்கிய நண்பர்கள் கூறியிருகிறார்கள். தமிழ் மக்களின் தேசிய சுய நிர்ணய உரிமைக்காக களத்திலே குதித்த ஆனந் சிங்களத் துவேஷியாக இருந்ததில்லை.
 
 
 
 
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இருந்து எக்ஸ்புளோடர்களையும் மற்ற உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு விடுதலைப்புலிகள் நள்ளிரவைத் தாண்டிய அந்தப் பொழுதில் கொக்குவிலுக்கருகில் டெலிக்கா வானிலவந்து கொண்டிருந்தபோது வானில் பின் சில்லுக்குக் காற்றுப் போய்விட்டது.
 
இந்நேரம் காங்கேசன்துறைத் தொழிற்சாலையிலிருந்து பொலிஸ் நிலையங்களுக்கு இந்தச் சம்பவம் அறிவிக்கப்பட்டிருக்கும்.
 
எக்ஸ்புளோடர்களைத் தங்களது இருப்பிடத்திற்குக் கொண்டுபோய் சேர்த்துவிட்டு, டெலிக்கா வானை அதன் சொந்தக்காரரிடம் கொண்டு போய்ச் சேர்த்தாக வேண்டும்.
 
ஜாக் அடித்து டயரைக் கழற்றி மாற்ற ஏதுமில்லை. “இத்தனைபேர் இருக்கிறோம். ஆளுக்கு ஆள் வானைத் தூக்கிப் பிடியுங்கள். நான் டயரை மாற்றிவிடுகிறேன்” என்று சொல்லி முன் வருபவன் ஆனந்.
 
ஆம், சில நிமிஷங்களில் புதிய டயரைப் பொருத்திக் கொண்டு வான் மின்னலாய் விரைந்து மறைகிறது.
 
 
 
 
1983 மே மாதம் சிறீலங்கா அரசு நடத்திய உள்ளூராட்சித் தேர்தல்களைப் பகிஷ்கரிக்கும் பணியில் சீலனோடு துணை நின்று செயற்பட்டான் வீரன் ஆனந்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட முன்வந்த மூன்று வேட்பாளர்கள் மீது இயக்கம் இராணுவ ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஆனந்திற்குப் பெரும் பங்குண்டு.
 
 
 ஆனந் இறந்தபிறகு அவனை இன்னாரென அடையாளம் கண்டுவிட்ட இராணுவ மிருகங்கள் ஆனந்தின் தந்தையைக் கண்டு சினந்தன.
 
“பிசாசு போலப் பிள்ளை பெற்றிருக்கிறாய்?” என்று சிங்களத்தில் அந்த மிருகங்கள் கத்தின.
 
“பிறக்கும் போது அவன் அப்படியில்லை” என்று அமைதியோடு பதில் சொல்கிறார் ஆனந்தின் தந்தை.
 
சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் காலில் குண்டு பாய்ந்து காலை இழுத்து இழுத்துக்கொண்டு திரிந்த சீலனை ஆனந்தான் தனது சைக்கிளில் வைத்துக்கொண்டு திரிவான்.
 
அந்த சீலனோடு சாவிலும் இணைந்து போனான் ஆனந்.
 
இயக்கத்திலே ஆனந் இணைந்த காலம் சொற்பமானாலும் இறுதிவரை உருக்குப் போன்ற மன உறுதியுடனும், உயிர் கொடுத்தான் இயக்கத்தின் இரகசியத்தைப் பேணும் திடத்துடனும் அவன் செயற்பட்டிருப்பது கெரில்லாப் போராளிகளுக்கு முன் மாதிரியாகவே அமைந்திருக்கிறது.
 
ஆனந்!
உனக்கு வயது பத்தொன்பது தான்.
ஆனால்….
நீயோ
புரட்சி கனலும் உள்ளங்களிலே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய்!
 
வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ்  (ஆவணி 1984)