அதியுச்ச அதிகார பகிர்வின் அடிப்படையில் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும், தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் விதத்தில் அதிகாரங்களை வழங்குவோம் எனவும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தான் முன்னர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாம் மீண்டும் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரோதயநகர் பரப்புரைக்கூட்டம் நேற்று இடம்பெற்ற வேளையில் அவர் இதனைக் கூறியிருந்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

ஆயுத போராட்டம் ஆரம்பிக்க முன்னரும், ஆயுத போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் தமிழர் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நாம் எமது  போராட்டத்தை கைவிடவில்லை. அரசியல் தீர்வு குறித்த எமது கருமங்களை உறுதியாக பின்பற்றி முன்னகர்த்தி வந்துள்ளோம். அதுமட்டும் அல்ல நாம் தமிழர் உரிமைகளுக்காக போராட ஆரம்பித்த காலம் தொடக்கம் ஆட்சியாளர்கள் எமக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தனர்.

அதில் முக்கியமாக இப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். அதியுச்ச அதிகார பகிர்வின் அடிப்படையில் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார். தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் விதத்தில் அதிகாரங்களை வழங்குவோம் என்றார்.

அவர் அன்று கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா இல்லையா என நான் மீண்டும் அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் மௌனம் காத்தார். இன்றுவரை மௌனம் காத்தே வருகின்றார். ஆனால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்காது அவர்களால் ஆட்சி செய்ய முடியாது.

சர்வதேசம் இந்த விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. இந்தியாவின் அழுத்தங்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் சமத்துவத்தின் அடிப்படையில் நீதியின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்த நாட்டில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக வாழ முடியாது என்பதில் சர்வதேசத்தின் அழுத்தம் தொடர்ந்தும் உள்ளது.

ஆட்சி முறையில் அடிப்படை மாற்றங்கள் உருவாக்க வேண்டும். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற கருமத்தை நிறைவேற்ற தொடர்ச்சியாக உழைத்தவர்கள் நாம், சகல தரப்புடனும் பேசி நகர்வுகளை கையாண்ட நபர்கள். எனவே நாம் தொடர்ந்தும் இந்த வேலைத்திட்டத்தை கொண்டுசெல்ல பலமான அணியொன்று எமக்கு வேண்டும் என்றார்.