கண்டுபிடிக்கப்பட்ட பருந்து போதைப் பொருள் கடத்தல் மன்னன் அங்கோடா லொக்காவினுடையது

breaking
  சிறிலங்கா- மீகொட, நாவலமுல்ல பகுதியில் அமைந்துள்ள விலங்குப் பண்ணையொன்றில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் பருந்து ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போதே இந்த பருந்து கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை விநியோகிக்க பாதாள உலக குழு தலைவராக கருதப்படும் "அங்கோடா லொக்கா" என்பவரால் பருந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சோதனையின் போது குறித்த பண்ணையின் பணியாற்றிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து துப்பாக்கியும், வெடி மருந்துப் பொருட்களையும் அத்துருகிரிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் அங்கொடா லொக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. "குசா அலி சீ ஹாக்" என்று அழைக்கப்படும் இந்த பருந்து சுமார் 15 கிலோகிராம் எடையைச் சுமக்கும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. அத்துருகிரியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.