Take a fresh look at your lifestyle.

விடுதலை அரசியலை விளங்கிக்கொள்ளல்

ஈழத்தமிழர்களின் அரசியல் குறைந்தது நான்கு வகையான அரசியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டு நகர்ந்துவருகிறது. அவையாவன, விடுதலை அரசியல், எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் மற்றும் சரணகதி அரசியல் ஆகும். விடுதலை அரசியலுக்கும் எதிர்ப்பு அரசியலுக்கும் ஒரு பொதுத்தளம் உள்ளது போல, இணக்க அரசியலுக்கும் சரணகதி அரசியலுக்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு தொடுகைப் புள்ளி உண்டு. அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களைப் பொறுத்து அவர்களின்; கொள்கைகளும் கோட்பாடுகளும் இலக்குகளும் மாறுபடும்.

அரசியல் என்பது சாதாரணமானவர்களின் பார்வையில் சாத்தியமற்றது என எண்ணுபவற்றை சாத்தியமாக்கி காட்டுவது. சாணக்கிய பண்புகளை கொண்;ட அரசியலானது பெட்டிக்கு வெளியே ( (Thinking outside the box) ) சிந்திக்கும் தன்மை கொண்டது. அதாவது, கிடைப்பதை வாங்குதல் அல்லது தருபவற்றை பெற்றுக்கொள்ளும் சாத்தியமானவற்றை அடையும் மனப்பாங்கை தாண்டி, விவேகத்தோடும் தூரநோக்கோடும் உரித்துடைய இலக்கினை அடைவதற்காக காய்களை நகர்த்துவதாகும். தனது தேசத்தின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தரப்புகள் பெட்டிக்கு வெளியே சிந்திப்பதன் ஊடாக தமது தேச நலனை பூர்த்தி செய்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இமாலய சாதனைகள் புரிந்தார்கள் என்று தமிழ்த் தேசம் பெருமையோடு இன்றுவரை பேசிக்கொள்கிறது. இது எப்படி சாத்தியமானது? ஒரு கைக்குண்டோடு திரியும் நான்கைந்து பள்ளிக்கூடப் பெடியளென அடையாளப்படுத்தப்பட்டவர்கள் எவ்வாறு எதிரியை திகைக்க வைத்து உலகையே வியக்க வைக்கும் சாதனைகளைப் புரிந்தார்கள்?

எமக்கு உரித்துடையவற்றை நாம் அடைந்தே ஆகவேண்டும் என்ற இலட்சியத்தில் உறுதியாக இருந்து சமரசமின்றி, அர்ப்பணிப்போடு போராடியதால் அவர்களால் அளப்பரிய சாதனைகளைப் படைக்க முடிந்தது. பெட்டிக்கு வெளியே சிந்திக்கும் தன்மை கொண்டதனால், மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு மட்டற்ற சாதனைகளை புரிந்தார்கள். பலரால் எண்ணிப்பார்க்க முடியாததை அவர்களால் செயற்படுத்திக் காட்டினார்கள். ஆதலாலேயே அவர்களை அசாதாரணப் பிறவிகளாக எமது தேசம் நோக்குகிறது.
சவால் நிறைந்த பயணம், இலக்கினை எட்டுவது சாத்தியப்படாது என எண்ணியிருந்தால் எவரும் புதிய வரலாறுகளை உருவாக்கியிருக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆயுதப் போராட்டம் என்பது ஈழத்தமிழர்களின் பன்னெடுங்கால அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான ஒரு தவிர்க்க முடியாத பாதை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனமாகிய பின்னர் ஈழத்தமிழர்களின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது. சுமார் நாற்பது ஆண்டுகள் தடுத்து நிறுத்தப்பட்ட இனஅழிப்பு துரிதகதியில் நடந்தேறி இன்று கட்டமைப்பு சார் இனஅழிப்பாக தமிழர் தாயகத்தில் தொடர்கிறது. தமிழ்த் தேசத்திற்கு எதிராக நிகழும் அநீதிகளையும் கட்டமைப்புசார் இனஅழிப்பையும் தடுத்து நிறுத்துவதற்கு தேர்தல் அரசியலிலும் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகளுக்கு சர்வதேச சமூகம் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதனால், விடுதலைப் புலிகளின் தியாகத்தால் சர்வதேசமயப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை அடைவதற்கு, அதனை திறமையாக கையாளக்கூடிய தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தேவை.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு பின்னர் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தமிழர் தாயகத்தில் வாழும் மக்கள் ஆணை வழங்கினார்கள். ஆனால், பதிலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது. அவர்கள் கொள்கைத் தவறி போனது மட்டுமன்றி, தமிழர் தரப்பிடம் இருந்த பேரம் பேசும் பலத்தையே வீணடித்துவிட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதனை முற்றுமுழுதாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குப் பின்னர் கைவிட்டது. அத்துடன், உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு முற்றுமுழுவதும் எதிரான பாதையில் பயணிக்கிறது. அதனை உருவாக்கியவர்களையே பயங்கரவாதிகளாகவும், ஜனநாயகத்தை மதிக்கத் தெரியாதவர்களாகவும் கொச்சைப்படுத்தியது.

வல்லரசுகளை வளைப்பதாக மக்களை ஏமாற்ற முற்பட்ட கூட்டமைப்புக்கு பெரும்பான்மையை ஆசனங்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் ஆட்சியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. ஏன், வெறும் ஒரு பிரதேச சபையக்கூட தரமுயர்த்துவதற்கு கூட பேரம்பேச முடியவில்லை. இறுதியாக, அரசியலமைப்பு உருவாக்கம் என்றும், அரசியல் தீர்வென்றும் மாயைக் காட்டி, தமிழ்த் தேசத்திடமிருந்துவரும் பேராயுங்களில் ஒன்றான பொறுப்கூறல் முன்னெடுப்புகளையே நீர்த்துபோகச் செய்து சிங்களத் பேரினவாதத்தை பாதுகாத்தது. தமிழ் மக்களுக்கு இவ்வாறான தோல்விகளை ஏற்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொதுத் தேர்தல் நெருங்கியதும் பேரம்பேசும் பலத்தை தருமாறு மீண்டும் பிதற்றத் தொடங்கியுள்ளது. தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி, சிங்கள பேரினவாதிகளுக்கு ஆதரவாக சரணகதி அரசியல் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இனி வாக்களிக்கக் கூடாது. கொலைவெறியர்களின் கூடாரத்தில் கூடிக்குலாவி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வோருக்கு தமிழ் மக்கள் பாடம் படிப்பிப்பதற்கான நேரம் வந்துள்ளது. தமிழர்களுக்கு துரோகம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பது மட்டுமன்றி, இலட்சியத்தில் உறுதியுடைய அரசியல் கட்சிக்கு மானமுள்ள தமிழர்கள்; இம்முறை வாக்களிக்க வேண்டும்.

சரணகதி அரசியல் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்யப் போவதில்லை. மாறாக, ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ் மக்களை சிக்கவைத்து எமது இருப்பையும் எதிர்காலத்தையும் இல்லாது செய்துவிடும்.

ஆதலால், தமிழ்த் தேசத்தின் உயிர்ப்பை தக்கவைத்து தமிழர்களுக்கான மறுமலர்ச்சியை உருவாக்க விடுதலை அரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். விடுதலை அரசியல் என்பது கரடுமுரடான பாதையில் மேற்கொள்ளும் நீண்ட பயணம். சவால்களும் சதுரங்க ஆட்டங்களும் நிறைந்த நெருக்கடியாக களம். ஆனால், இனத்தின் நலனுக்கான கொள்கை உறுதியோடு, விட்டுக்கொடுப்பின்றி தூரநோக்கோடு காய்களை நகர்த்துபவர்கள் இறுதியில் வெல்வார்கள். விடுதலை அரசியலில் பற்ற வைக்கும் பொறி நீண்ட காலத்தில் எமது தேசத்தின் சுதந்திரத்துக்கு வழிகாட்டும் ஒளியாக மாறும்.

சிங்கள ராணுவம் ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை மூலம் வடமராட்சி பிரதேசத்தை ஆக்கிரமித்து தமிழ் தேசத்தின் அடையாளத்தை அவமானப்படுத்த முயன்றபோது, ஜூலை 5 1987 ஆம் ஆண்டு நெல்லியடியில் நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் மூலம் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து வடமராட்சி மண் மீட்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நில ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்திய போது, அதனை எதிர்ப்பதற்கு திரணியற்று தமிழ்த் தேசம் அச்சத்தில் மூழ்கியிருந்தது. அச்சூழலில், துணிகரமான முடிவை எடுத்து தடை உடைக்கப் புறப்பட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. அதன் நிமிர்த்தமே முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னரான நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை, ஒரு ஜூலை மாதத்தில் அதுவும் நெல்லியடி மண்ணில் தொடக்கி வைத்தது. தமிழ்த் தேசத்தின் நிலத்தை மீட்பதற்கான போராட்டம் அத்துடன் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது. முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு பின்னர் நிலமீட்புப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, கூட்டு நினைவுகூரலுக்கும், குறிப்பாக மாவீரர்களை நினைவுகூருவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆதலால்தான், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், மாவீரர் நாள் போன்ற காலப்குதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் போன்றவர்களின் வீடுகளை சிங்கள இராணுவம் முற்றுகையிட்டு அவர்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்தது. அதனையும் தாண்டி அவர்கள் நினைவுகூரல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள். இதனாலேயே, அவர்களுக்கு எதிரான இராணுவ கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அங்கமாகவே, முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 11ஆவது ஆண்டை, ஒரு புறம் கொரொனா மறுபுறம் அதனை விடப் பயங்கரமான சிங்கள ஆட்சிபீடத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நடாத்தினார்கள். இதனால், அவர்கள் ஒரு சட்டப்போருக்கும் முகம்கொடுத்து வெற்றிகண்டார்கள். இதனால், ஆத்திரமும் அச்சமும் அடைந்த சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களது படைகளும், கரும்புலிகள் நாளன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் தலைமையகத்தை சுற்றிவளைத்து அச்சுறுத்தினார்கள்.

அதுமட்டுமின்றி, வலிந்து காணமற் போகச்செய்யப்பட்டோருக்காவும், அரசியற் கைதிகளின் விடுதலைக்காகவும் சர்வதேச ரீதியில் குரல்கொடுத்து வருகிறார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இத்தகைய செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசத்தின் நலனை முன்னிறுத்தி, தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் அவர்கள் வரிந்துகொண்ட இலட்சியம் அடித்தளமாகவுள்ளது. சிங்கள தேசத்தினை எதிர்க்க தயங்காத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அந்நிய சக்திகளின் பாரிய அழுத்தங்களுக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. இதனால், நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்தவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்தை தடுக்க முனைந்ததார்கள். அதனையும் தாண்டி தோற்றம் பெற்ற போது, அவர்களை கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் நயவஞ்சகமான முறையில் தோற்கடித்து, அவர்களின் பயணங்களை நிறுத்த முனைந்தார்கள். இதனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் நெருக்கடிகளையும் அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. ஆயினும் தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக நெருக்கடிகளுக்கும் அவமானங்களுக்கும் முகம் கொடுத்த படியே தமிழ்த் தேசத்திற்கான விடுதலை அரசியலை முன் நகர்த்தி வருகிறார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்க போகிறது என்பதை கண்டறிந்து, அதனை அம்பலப்படுத்தி கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானவர்கள் வெளியேறியது சரி என்பது இன்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதலால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சியென்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்கு வழியமைத்து விடக்கூடாது என்பதற்காக, விடுதலைப் புலிகளை அழிக்க காரணமாக இருந்த தரப்புகள் தேர்தலுக்கு முன்னரே ஒரு கூட்டணியை உருவாக்கி விட்டுள்ளார்கள். இது தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்கொண்டுள்ள புதிய சவால்.

பாரிய சவால்கள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்களுக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி, அடிமை விலங்குகளை உடைக்கும் தூரநோக்குள்ள விடுதலை அரசியலை முன்னெடுத்து வருகிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. அத்தகையவர்களை மக்களின் பிரதிநிகளாக தெரிவுசெய்யவேண்டியது மானமுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வரலாற்றுப் பொறுப்பும் கடமையுமாகும்.

சுதந்திரன்

%d bloggers like this: