பலாலி விமானத்தள மையம் நோக்கிய கரும்புலிகள்…….!

breaking
சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்புலி. காவல் உலா சுற்றிக்கொண்டு வந்த படைப்பிரிவு ஒன்றிலிருந்து எவனோ ஒரு சிங்களப் படையால் எதேச்சையாக “ரோச்” அடித்தான். வெளிச்சம் சரி நேராகத் தெறித்து அவனிலேயே பட்டது. உறுமத்தொடங்கின துப்பாக்கிகள்; தாவிப்பாய்ந்தன எம் வீரன். தலைதெறிக்க ஓடத்தொடங்கினான். எதிரியின் காணிக்குள்ளேயே ஒரு கலைபாடு விடயம் என்னவென்றால், ஏற்கனவே இரு நாட்களாக அவனுக்குச் சீரான சாப்பாடு இல்லை கலைத்துச் சுட்ட பகைவனுக்குத் தப்ப அவன் இளைத்து இளைத்து ஓடினான். உடல் ஒத்துழைக்க மறுத்தது. கால் சோர்ந்து கொண்டே போனது; ஆனாலும் எங்கோ அவன் தீடிரென மறைந்து விட, துரத்தியவர்கள் தடுமாறிப் போனார்கள். பிடிக்க முடியவில்லை. ஆற்றாமையால் கண்டபடி சுட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அப்படியே மறைந்திருந்தவன் , இரவானதும் மெல்ல மெல்ல ஊரத் துவங்கினான். இஅயலாமையொடு ஊர்ந்தவன், எதிரியின் அரணைக் கடந்து வந்து சற்றுத் துரத்துக்குள்ளேயே மயங்கிப் போனான். பாவம் முகாமிற்குத் தூக்கிவந்து ‘சேலைன்‘ ஏற்றியபோது கண்திறந்தவன். தப்பித்து வந்தது ஒரு அதிஷ்டம் என்று தான சொல்லவேண்டும். இப்படியாக….. எத்தனையோ மயிரிழைகளில் தப்பி, அதிஸ்டவசமாக மீண்டவர்கள் கொண்டுவந்த தரவுகள்தான் , பலாலிப் பெருந்தலத்தின் மையத்தில் குறிவைக்க எங்களுக்கு அத்திவாரமாக அமைந்தன. பலாலித் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால், எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் தாக்குதல்களையும் போலவேதான் அதுவும்! வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அது. எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான் மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது; அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி! தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது; உன்னதமானது! தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே…. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல்; தளர்ச்சியற்ற பிணைப்பு! அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக்கொண்டிருந்த உந்துவிசை. அவர்களுடைய அந்த “மனநிலை” தான். எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான தலமென்ற பெருமையுடையது பலாலி முக்கூட்டுப் படைத்தளம். வடபுலப் போர் அரங்கின் பிரதான கட்டளைத் தலைமையகமும் அதுவேதான். தனிக்காட்டு ராயாவாக ஒரு சிங்கம், கால்களை அகல எறித்துவிட்டு அச்சமற்ற அலட்சியத்தோடு படுத்திருப்பதைப் போல …. 30 சதுர மெயில் விஸ்தீரணத்தில் …. அகன்று நீண்டு விரிந்து கிடக்கிறது அந்தப் பெருந்தளம். இவை தெரியாத விடயங்களல்ல; ஆனால், ஆச்சரியம் என்னவெனில்… “என்னை எவரும் ஏதும் செய்துவிட முடியாது” என்ற இறுமாப்போடு நிமிர்ந்திருக்கும் அந்த முக்கூட்டுத்தளத்தினுள் நுழைந்து, எங்களது வேவுப்படை வீரர்கள் குறிவைத்த இலக்கு, அதன் இதயமாகும். அது, சிறீலங்கா விமானப்படையின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைமையகம் என்ற கேந்திர மையமாகும். இந்த முப்படைக் கூட்டுத்தளத்தை சுற்றி வர, பலமான் உருக்குக்கவசம் போன்று, உள்ள அதன் முன்ன்னணிப் பாதுகாப்பு வியூகத்தை ( Front Defence line ) ஊடுருவி நுழைவதென்பதே, ஒரு இமாலயக் காரியம்தான. இமையாத கண்களுடன் , துயிலாமல் காத்திருக்கும் பகைவனின் பத்து ‘பற்றாலியன்‘ படைவீரர்கள். சரசரப்புக்கெல்லாம் சடசடத்து, சள்ளடையாக்கிவிடத் தயாராக அவனது சுடுகருவிகள். உலகெங்கிலும் இருந்து போறிக்கண்ணிகளையும், மிதிவெடிகளையும் வாங்கி வந்து, விதைத்து உருவாக்கியிருக்கும் அவனது கண்ணிவெடி வயல் ( Mines field ). வானுலக நட்சத்திரங்களின் ஒளிர்வினைக் கொண்டே, பூவுலக நடமாட்டங்களைத் துல்லியமாய்க் காட்டும் அவனது ‘இரவுப் பார்வை‘ சாதனங்கள் ( Night vision ). தேவைக்கேற்ற விதமாகப் பயன்படுத்தவென, தேவைக்கேற்ற அளவுகளில் கைவசமிருக்கும் அவனது தேடோளிகள் ( Search Lights ). அடுக்கடுக்கான சுருள் தடைகளாயும், நிலத்துக்கு மேலால் வளைப்பின்னலாயும் குவிக்கப்பட்டிருக்கும் அவனது முட்கம்பித் தடுப்புகள். வன்னிப் பக்கத்துக் குளங்களைப் போல, உயர்ந்த அரண்களாக எழுப்பப்பட்டுள்ளன அவனது அணைக்கட்டுகள். உள்ளுக்கிருப்பதைக் கண்டு அறிவதற்கு வெளியில் இருந்து பார்க்க முடியாமல், நிலத்திலிருந்து வானுக்கு எழும்புகின்ற அவனது தகரவேலி. எங்கிருந்து எங்கு என்று இடம் குறியாது, எப்போதிருந்து எப்போதுக்குள் என்று காலம் குறியாது, ரோந்து சுற்றிக்கொண்டு திரியும் அவனது ‘அசையும் காவலணிகள்’ ( Mobile Sentries ). அத்தனை பலங்களினாலும் பலம் திரட்டி அரசு பலத்தோடிருந்தனர் எங்கள் பகைவர். “எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும், தேடுங்கள்” என்றார் எங்கள் தேசியத்தலைவர். நூல் நுழையும் ஊசிக்கண் துவாரம் தேடிய எம் வேவுவீரர்கள், அந்த ‘மரண வலயத்தை‘ ஊடுருவிக் கடந்து, சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தார்கள். வெளியில் தனது முன்னணிக் காவலரண்களிலிருந்து, அசைக்க முடியாத தன்னுடைய பலத்தை எண்ணிப் பகைவன் இருமாந்துகொண்டிருக்க. உள்ளே, சுமார் பத்து மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனது மையத்தலத்தில், விமான ஓடுபாதைகளில், நடந்து வானுர்திகளை வேவு பார்த்துக்கொண்டிருந்தனர் எம் வீரர்கள். அவர்களுடைய முயற்சிதான் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கான திட்டத்திற்கு கருக்கொடுத்தது. அவர்களது ஓய்வற்ற கடும் உழைப்பு, அந்தத் திட்டத்தை படிப்படியாக வளர்த்து முழுமைப்படுத்தியது. தாக்குதல் இலக்கை வேவு பார்த்து. தாக்குதலணி நகரப் பாதை அமைத்து, தாக்குதல் பயணத்தில் ‘தரிப்பிடம்‘ கண்டு தாக்குதலுக்கான நாள் குறித்த அவ் வேவுப்புலி வீரர்கள். கரும்புலி வீரர்களுக்கு உறுதுணையாக வழிகாட்டிச் செல்லத் தயாராகி நின்றார்கள். தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது. பெரிய நோக்கம்; அரசியல்ரீதியாகவும், படையியல்றீதியாகவும் முக்கியத்துவத்தைப் பெறக்கூடிய ஒரு நடவடிக்கை. எமது மக்களின் உயிர்வாழ்வோடு பினைந்ததும் கூட. ஆனால், அது ஒரு பலமான இலக்கு; உச்சநிலைப் பாதுகாப்புக்கு உட்பட்ட கேந்திரம். செல்பவர்கள் வேலமுடியும்; ஆனால் திரும்ப முடியாது. சிங்கத்தின் குகைக்குள் நுழைந்து அதனை எதிர்கொள்வதற்கு நிகரான செயல் அது. இருப்பினும் தாக்குதல் தேவையானது. வேவு அறிக்கைகளின் அடிப்படையில் தாக்குதலுக்கான வழிமுறை தீர்மானிக்கப்பட்டது. அது ஒரு கரும்புலி நடவடிக்கை. நான் முந்தி நீ முந்தி என்று நின்றவர்க்குள் தெரிவாகியவர்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது ஒரு தாக்குதலணி. கெனடி அதன் களமுனைத் தளபதி; அவனோடு இன்னும் 6 வீரர்கள். சிர்ருருவி மாதிரிப் படிவமாக ( Model ) அமைக்கப்பட்டிருந்த பலாலி வான்படைத் தளத்தையும், அதன் ஓடுபாதைகளையும் சுற்றி அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். தளபதி கடாபி அவர்களுக்குரிய தாக்குதல் வழிமுறைகளைத் தெளிவுபடுத்தினார். ஒவ்வொருவருக்குமுரிய இலக்குகளைக் காட்டி விளக்கினார். ஒவ்வொருவரும் எவ்விதமாகச் செயற்ப்படவேண்டும் என்பதை அவர் சொல்ல்லிக் கொடுத்தார். அவர்களுக்குரிய ஒத்திகைப் பயிற்சிகள் ஆரம்பித்தன. ”பயிற்சியைக் கடினமாகச் செய்; சண்டையைச் சுலபமாகச் செய்” என்பது ஒரு படையியல் கோட்பாடு. அந்தக் கோட்பாட்டின்படியே அவர்கள் செயற்ப்பட்டார்கள். ஆகா…..! அந்த நேரத்தில் நீங்கள் பார்த்திருக்க வேண்டும் அவர்களை; மெய்யுருகிப் போயிருப்பீர்கள். எவ்வளவு உற்சாகம்; எவ்வளவு ஆர்வம்; ஓய்வற்ற பயிற்சிகளில் அவர்கள் காட்டிய மனமார்ந்த அந்த ஈடுபாடு….. ! ‘எப்படி வாழவேண்டும் ?‘ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிற எங்களுக்குல்லிருந்து தானே அவர்கள் போனார்கள்! உயிரைக் கொடுத்துவிட்டு எப்படி வெற்றியைப் பெறவேண்டும் என்றல்லவா ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் இருந்திருக்கக்கூடிய தேசாபிமானத்தை நினைத்துப் பாருங்கள்; அவர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய தமிழபிமானத்தை எண்ணிப் பாருங்கள். எங்கள் தலைவன் ஊட்டி வளர்த்த மேன்மை மிகு உணர்வு அது. தங்கள் கடைசிக் கணங்களில். தங்களின் உயிர் அழிந்துவிடப் போவதைப் பற்றியல்ல; தங்களின் இலக்குகள் அழிக்கப்பட வேண்டியதைப் பற்றியே அவர்கள் சதா சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்களிடம் போய், “நீங்களில்லையாம்; ஆட்களை மாத்தப்போகினமாம்” என்று சொன்னால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு கதை, கதையோடு கதையகா வந்து காதில் விழுந்தது. “குழுக்கள் போட்டு புதுசா ஆக்களைத் தெரிவு செய்யப் போறேனேன்று சொர்ணம் அண்ணன் சொன்னவராம்” என்றது அந்தத் தகவல். கெனடி குழம்பிவிட்டான். அவனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தளபதியிடம் போய் சண்டை பிடித்தான். “நான் கட்டாயம் போக வேணும்” என்று விடாப்பிடியாய்ச் சொன்னான். “வேணுமென்றால் அவர் மற்ற ஆட்களை மாத்தட்டும். குழுக்கள் தெரிவுக்கு என்ற பெயரைச் சேர்க்க வேண்டாம்” திட்டவட்டமாகக் கூறினான். எந்த மாற்றமும் செய்யப்படாமலேயே எல்லா ஒழுங்குகளும் பூர்த்தியாகிவிட்டன. அவர்களுடைய நாள் நெருங்கிவிட்டது. கடைசி வேவுக்குப் போனபோது, அசோக்கிடம் ஜெயம் சொன்னானாம். “கரும்புலிக்குள்ளேயும் நாங்கள் வித்தியாசமாகச் செய்யப்போகின்றோம்; இது ஒரு புது வடிவம். நாங்கள் இவற்றை அழிக்கும்போது சிங்களத் தளபதிகள் அதிர்ச்சிக்குள்ளாவார்கள்.” தேசியத்தலைவர் வந்து வழியனுப்பிவைத்தார் ; அவர்களுக்கு அது பொன்னான நாள். ஒன்றாயிருந்து உணவருந்திய தேசியத்தலைவர், கட்டியணைத்து முத்தமிட்டு விடை தந்தபோது. கரும்புலிகளுக்குள்ளே உயிர் புல்லரித்தது. “நான் நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றேன்”, தேசியத்தலைவர் வழியனுப்பி வைத்தார். மேலே, வானத்துக்கும் பூமிக்கும் இடையில். வெகு உல்லாசத்துடன். உலங்கு வானூர்த்தி ஒன்று பலாலிப் பக்கமாகப் போய்க்கொண்டிருந்தது. அட்டகாசமாய் சிரித்துவிட்டு நவரட்ணம் சொன்னான். “இன்றைக்கு பறக்கிறார் , நாளைக்கு நித்திரை கொள்ளப் போகிறார்.” நீண்ட பயணத்திற்குத் தயாராகி, சிரித்துக் கும்மாளமடித்துக் கொண்டு நின்றவர்களிடம், “எல்லோரும் வெளிக்கிட்டு வீட்டீர்கள் ….. துரதேசத்துக்குப் போல இருக்கு……” தளபதி சொர்ணம் கேட்க்க, கண்களால் புன்னகைத்து ரங்கன் சொன்னான். “ஓமோம் ….. கிட்டண்ணையிட்ட…. திலீபண்ணை…. இப்படி நிறைய தெரிஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம்.” பள்ளிப் பெருந்தளத்தின் முன்னணிக் காவலரன்களுக்கு மிகவும் அருகில் எங்கள் தளபதிகளிடம் விடைபெற்றுச் செல்லும் போது, நின்று திரும்பி தளபதி செல்வராசாவிடம் “அண்ணன்மார் கவனமாகப் போங்கோ ‘செல்; அடிப்பான்” என்று சொல்லிவிட்டுப் போனான் திரு. கைகளை அசைத்து அசைத்துச் சென்ற கரும்புலிகள் இருளின் கருமையோடு கலந்து மறைந்தார்கள். தாக்குதலணி, தாக்குதல் மையத்தைச் சென்றடைவதே ஒரு பெரிய விடயமாகக் கருதப்பட்டது. தாக்குதலைச் செய்வது இன்னொரு பெரிய காரியம். புறப்பட்டுப் போகும் போது அவர்களிடம் இருந்தது தளராத உறுதி, தணியாத தாகம், எல்லாவற்றையும் மேவி, அசையாத தன்னம்பிக்கை. “அம்மா ! நான் உங்கள் பிள்ளைதான்; ஆனால், தமிழீழத் தாய்மார்கள் எல்லோருக்கும் நான் ஒரு பிள்ளை….. ….. அம்மா ! என்னுடைய ஆசை மக்கள் மகிழ்ட்சியாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதுவே. அதனால்தான் உயிரைப் பெரிதாக நினையாமல் நான் போராடப் போனேன். அதனால், எனக்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்; நீங்களும் சந்தோசமாக இருக்க வேண்டும். …. எமது மண் சுதந்திரமடைய வேண்டும். அது நடைபெற வேண்டுமானால் மக்கள் எல்லோருமே தாயகத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகக் கிளர்ந்தெழ வேண்டும். இதுதான் என் கடைசி விருப்பம்” ஒகஸ்ட் திங்கள் முதலாம் நாள். பகற்பொழுது பின்வாங்கிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டை இருள் விழுங்கிக்கொள்ள, பலாலிப் பெருந்தளத்தை, மின்னாக்கி ஒளிவெள்ளத்தில் அமிழ்த்தியது! மாலை 6.30 மணியைக் கடந்துவிட்டிருந்த நேரம். தங்கள் இலக்கை நோக்கி அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். வேவுப் புலி வீரர்கள் முன்னே; கரும்புலி வீரர்கள் பின்னே. மாவிட்ட புரத்தையும், தெள்ளிப்பளையையும் இணைக்கும் பிரதான் வீதியும், தச்சன்காட்டிலிருந்து வந்து அதனைச் சந்திக்கும் குறுக்கு வீதியும் இராணுவச் சப்பாத்துக்களால் மிதிபட்டு பேச்சு மூச்சற்றுக் கிடந்தன. வீதியோரமாக, தட்ச்சன்காட்டடியில் அணி நகர்ந்துகொண்டிருந்த சமயம் , அவதானமாக; மிக அவதானமாக அவர்கள் ஊர்ந்துகொண்டிருந்த போது. தீடிரென தெல்லிப்பளை பக்கமகாகக் கேட்டது ‘ட்ரக்‘ வண்டிகளின் உறுமல். பயங்கர வேகத்தோடு அது நெருங்கிக்கொண்டிருந்தது. “நேராக மாவிட்டபுரம் பக்கம்தான் போகப்போறான்” என நினைத்த வேளை, தட்ச்சன்காட்டுப் பக்கமாகவே திரும்பினான். வந்த வேகம் தனியாமலேயே. நல்ல காலம்… பளீரென அடித்த ஒழி வெள்ளத்தினுள் மூழ்கிப் போகாமல், பக்கத்திலிருந்த காணிக்குள், எல்லோரும் சம நேரத்தில் பாய்ந்து மறைந்து விட்டார்கள். அவர்களைக் கடந்து நேராகச் சென்று, சந்திக் காவலரனடியில் நின்றவன், நின்றானா …..? அந்த வேகத்திலேயே திரும்பி வந்தான். ‘என்ன நசமடாப்பா …. ? ‘ என நினைத்த வேளை ‘ட்ரக்’ வண்டிகள் இரண்டும் அவர்களுக்கு நேர் முன்னே வந்து சடுதியாய் தரிக்க …. சில்லுகள் கிளப்பிய புழுதியோடு, புற்றீகலாய்க் குதித்தனர் சிங்களப் படையினர். குழல் வாய்கள் தணலாக துப்பாக்கிகள் பேசத்துவங்கின. ‘பொம்மருக்கென்று‘ காவி வந்த நவரட்னத்தின் “லோ” ஒன்று, ‘ட்ரக்‘ வண்டியைக் குறிவைத்து முழக்கியது. எல்லோரும் ஓடத் துவங்கினர். அது சண்டை போடக்கூடிய இடமல்ல; சண்டை பிடிப்பதற்குரிய நேரமுமல்ல. அவர்கள் அங்கே போனது இதற்காக்கவுமில்லை. எங்கே தவறு நடந்தது ……? எங்காவது சுத்துச் சென்றிக்காரன் கண்டானோ….? ‘டம்மி‘ என்று நினைத்த பொயின்ரிலிருந்து பார்த்துச் சொன்னானோ? எங்காவது வீடு உடைத்து சாமான் எடுக்க வந்த ஆமி கண்டு அறிவித்தானோ….? என்னவாகத்தான் இருந்தாலும், அவர்கள் சென்ற சொக்கம் கெட்டுவிட்டது. தட்சன்காட்டில் நிகழ்த்த அந்த துரதிர்ஷ்டம்தான், எங்களது தாக்குதல் திட்டத்தையே திசைமாற்றியது. “திரு” இல்லை “ரங்கன்” இல்லை; “புலிக்குட்டிக்கு” என்ன நடந்ததென்று தெரியவில்லை; ராஜேஷ் ஒரு வழிகாட்டி. அவனையும் காணவில்லை. எங்கள் தாக்குதலணி சேதாரப்பட்டுவிட்டது. ஏனையோர் ஒரு பக்கமாக ஓடியதால் சிதறாமல் ஒன்றாயினர். தாம் வந்த காரியத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயம் எழுந்துவிட்டத்தை, எஞ்சியவர்கள் உணர்ந்தனர்; இந்தச் சண்டையோடு எதிரி உசாரடைந்துவிடுவான். கரும்புலி வீரர்கள், வேவுப்புலி வீரர்களை அவசரப்படுத்தினர். “உடனடியாக எங்களைத் தாக்குதல் முனைக்குக் கூட்டிச் செலுங்கள்.” அடுத்த சில மணி நேரங்களின் பின் பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில்….. அவர்கள், வான்படைத் தளத்தின் முட்கம்பி வேலிக்கருகில் தயாராகிக்கொண்டிருந்தனர். பிரதான கட்டளையகத்தோடு கெனடி தொடர்பு எடுத்தான். நடந்து முடிந்த துயரத்தை அவன் அறிவித்தான். “7 பெருக்கென வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தில் எஞ்சியிருப்பது 4 பேர் மட்டுமே” என்பதை அவன் தெரியப்படுத்தினான். “எதிரி முழுமையாக உசார் அடைந்துவிட்டதால், இருக்கிரவர்களுடன் உடனடியாக தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினான். “தாமதிகின்ற ஒவ்வொரு நிமிடமும் இலக்குகள் தப்பிப் போக நாங்கள் வழங்குகின்ற சர்ந்தப்பங்கள்” என்பதை விளக்கினான். “தாக்குதலை நிகழ்த்தாமல் திரும்பி, தப்பித்து வெளியேறுவதும் சாத்தியப்படாது” என்பதையும் சொன்னான். அவனிடம் சற்று நேரம் அவகாசம் கேட்க பிரதான கட்டளையகம், பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு கட்டளைகத்தோடு கலந்து பேசியது. கெனடி சொல்வதே சரியானது எனவும், அதைவிட வேறு வழியில்லை எனவும் பட்டது. தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. முட்கம்பி வேலிகளை நறுக்கி அறுத்த வேவுப்புலி வீரர்கள் பாதை எடுத்துக் கொடுக்க, வான்தளத்தில் இலக்குகளைத் தேடி கரும்புலி வீரர்கள் உள்ளே நுழைந்தனர். நவரட்ணம் கடைசியாய் வரைந்த மடலிலிருந்து…. அம்மா! அப்பா! இனத்துக்கு சுதந்திரமாக ஒரு நாடு இருந்தால்த்தான், எங்களுக்கு நிரந்தரமாக ஒரு வீடு இருக்கும். சுதந்திரமான ஒரு நாடு அமைக்கவே நான் போராட வந்தேன். இனித் தமிழீழத்தில் குண்டுகள் விழக்கூடாது; இதற்காகவே நான் இன்று கரும்புலியாய்ச் செல்கின்றேன். என் ஆசை தங்கச்சி! உனது அடுத்த பரம்பரை, எம் எதிர்கால சந்ததி, மிக மகிழ்ட்சியோடு வாழவேண்டும் என்பதற்காகவே, நான் கனவிலும் நினையாத களம் நோக்கிப் புறப்படுகின்றேன். வெல்க தமிழீழம் ! அசொக்கிடமும், ரஞ்சனிடமும் விடைபெற்று அவர்கள் உள்ளே சென்றுவிட, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, இவர்கள் வெளியே திரும்பிக்கொண்டிருந்தனர். விடி சாம நேரம். படு இருள். மிகக் குறுகிய துரத்திர்க்குள் தான் எதனையும் மங்கலாய்த் தன்னும் பார்க்க முடியும். மாவிட்டபுரத்திற்க்கு பக்கத்தில் ஒரு குச்சொழுங்கையால் அவர்கள் திரும்பிகொண்டிருந்த போது, ஒரே ஒரு மணித்துளி…… இருந்தாற் போல்….. அந்த இருளுக்குள் இருளாக …. அவர்களிற்கு முன்னாள்….. அதென்ன……? நில்லாக் எதோ அசைவது போல உள்ளது! ரஞ்சனின் கைகளைச் சுரண்டி மெதுவாக, “ஆமி நிக்கிறான் போ ……”, அசோக் சொல்லிமுடிக்கும் முன் தீப்பொறி கக்கிய சுடுகுழழிளிருந்து காற்றைக் கிழித்துச் சீரிய ரவைகள், அசோக்கின் தசைநார்களையும் கிழித்துச் சென்றன! தலையோ…. கழுத்தோ….. நெஞ்சுப்பகுதியாகவும் இருக்கலாம ….. சரியாகத் தெரியவில்லை….. சன்னங்கள் பாய்ந்து சல்லடையாக்கிச் சென்றன. “அம் ….” முழுமையாக வெளிவராத குரலுடன், குப்பற விழுந்தான் அந்த வீரன். அடுத்த நிமிடத்தில்…. கொஞ்சம் ரவைகளையும் ஒரு கைக்குண்டையும் பிரயோகித்து, அசோக்கையும் பறிகொடுத்துவிட்டு, பக்கத்துக் காணிக்குள் பாய்ந்து ரஞ்சன் ஓடிக்கொண்டிருந்தான். முன்பொரு நாள் …. மயிலிட்டிப் பக்கமாக வேவுக்குச் சென்ற ஒரு இரவில், இராணுவம் முகாமிட்டிருக்கும் பாடசாலை ஒன்றை ரஞ்சனுக்குக் காட்டி, அசோக் மனக்குமுறலோடு சொன்னானாம். “இதுதான்ரா நான் படிச்ச பள்ளிக்கூடம்; இண்டைக்கு இதில சிங்களவன் வந்து குடியிருக்கிறான் மச்சான்…… வீட்டுக்கு ஒரு ஆளேண்டாலும் போராட வந்தா இந்த இடமேல்லாத்தையும் நாங்கள் திருப்பி எடுக்கலாம் தானேடா…..” ரஞ்சனது நெஞ்சுக்குள் இந்த நினைவு வந்து அசைந்தது. தொடர்ந்து நகருவது ஆபத்தாயும்முடிந்துவிடக்கூடும் என்பதால், அருகிலேயே ஒரு மரைஇவிடம் தேடி அவன் பதுங்கிக்கொண்டான். இப்போது அவன் தனித்த்துப்போனான்; கூடவந்த தோழர்கள் எல்லோரினதும் நினைவுகள், இதயமெல்லாம் நிறைந்து வாட்டின. இனி எப்படியாவது அங்கிருந்து அவன் வெளியேற வேண்டும். வந்தவர்களில் எஞ்சியிருப்பது அவன் மட்டும்தான். நடந்தவற்றைப் போய் சொல்வதற்காவது, அந்த மரணக்குகைக்குளிருந்து அவன் பாதுகாப்பாகத் தப்பிக்க வேண்டும். எனவே அவன் இனி மிக அவதானமாக இருக்கவேண்டியது கட்டாயமாகிறது. மெல்ல விடிந்தது. அவன் தொடர்ந்து நகர்ந்து வெளியேற நினைத்த போது, மின்னலென ஒரு யோசனை மூளைக்குள் பொறிதட்டியது. ‘தச்சன்காட்டில் யாரவாது அதிஷ்டவசமாகத் தப்பியிருக்கலாம். அவர்கள் பாதை தெரியாமல் மாறுபட்டு, வேவு வீரர்கள் திரும்பி வருவார்கள் என நம்பி உள்ளே நுழைந்த முதல் நாள் இரவு அவர்கள் தங்கிய தரிப்பிடத்தில் போய் நிற்கக்கூடும். நப்பாசைதான்; ஒரு மன உந்துதலோடு அவன் போனான். அவன் அங்கே செல்ல…… அங்கே …..! என்ன அதிசயம்! அவன் நினைத்து வந்ததைப் போலவே அவர்கள்…. ஆனால் நால்வருமல்ல . ரங்கனும் , புலிக்குட்டியும் மட்டும் நின்றார்கள்; ராஜேஷ் இல்லை, ‘திரு‘ வும் இல்லை. அவனைக் கடந்தும் அவர்கள் மட்டற்ற மகிழ்ட்சி ‘போன உயிர் திரும்பி வந்தது போல’ என்பார்களே, அப்படி ஒரு மகிழ்ட்சி. “உடனே எங்களைக் கொண்டுபோய் கெனடி அண்ணனிட்ட விடு; இண்டைக்கு இரவுக்காவது அடிக்கலாம்” என்று அவர்கள் அவசரப் படுத்திய போது, ரஞ்சன் நடந்தவற்றைச் சொன்னான். அந்தக் கரும்புலி வீரர்களால் அதனைத் தாங்கமுடியவில்லை. தாங்கள் பங்கு கொள்ளாமல் அந்தத் தாக்குதல் நடந்து முடிந்ததை அவர்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. தங்களது கைகளை மீறி எல்லாம் நடந்து முடிந்துவிட்டதை எண்ணி, அவர்கள் மனம் புழுங்கினார்கள். எல்லாம் முடிந்தது. “இனி நாங்கள் எப்படியாவது, எந்தப் பிரசினையும் இல்லாமல் வெளியில் போய்விட வேண்டும்” என்றான் ரங்கன். போகத்தானே வேண்டும் , பிறகென்ன…..? ஆனால், ரங்கன் அதற்க்குக் காரணம் ஒன்றைச் சொன்னான். “இதற்குள் நிற்கும்போது எங்களுக்கும் ஏதாவது நடந்தால், இயக்கம் எங்களையும் கரும்புலிகள் என்றுதானே அறிவிக்கும். அப்போது விமானங்களை அழித்தவர்கள் என்ற பெயர்தானே வரும். ஆனால், அவர்களுடைய தியாகத்தில் நாங்கள் குளிர்காயக்கூடது.” இதுதான் அவனுடைய மனநிலை. மிகவும் பாதுகாப்பானது என்று கருதிய பாதை ஒன்றினால் வெளியேற அவர்கள் முடிவு செய்தனர். ரஞ்சன் வழிகாட்டினான் ; கூட்டிவந்த வேவு வீரர்களில் இப்போது எஞ்சியிருப்பது அவன்மட்டும்தான். பகற்பொழுது , எனவே ஆகக்கூடிய அவதானத்துடன் அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தனர். மெல்ல மெல்ல சூரியன் உச்சியை நோக்கி உயர்ந்துகொண்டிருந்தான். அப்போது அவர்கள் சீரவளைக்குப் பக்கத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள். சரியாக நினைவில் இல்லை, ஒரு பதினோரு மணியிருக்கும் . ஒரு பற்றைக்குள்ளிருந்து “கதவு …. ?” என ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஒரு சிங்களப் படையால் குந்திக்கொண்டிருந்தான்; தங்களுடைய ஆட்கள் என்று நினைத்திருப்பான் போலும். என்ன பதிலி சொல்வது ….? அவர்கள் யோசிக்க, அவனுக்குள் சந்தேகம் எழுந்துவிட்டது. சற்று உறுத்தலாக, “ஓயா கவுத …..?” கேட்டுக்கொண்டே துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு அவன் எழ, ரஞ்சனின் கையில் இருந்த “ரி – 56” அவனுக்கு பதில் சொல்லியது. “நாங்கள் புலிகள்.” வெடித்தது சண்டை … அவர்கள் ஓடத் துவங்கினர் ; மொய்த்துக்கொண்டு கலைத்தனர் சிங்களப் படையினர். கணிசமானதொரு துறை இடைவெளியில் அந்தக் கலைபாடு நடந்தது. பகைவனின் சன்னங்கள் அவர்களை முந்திக்கொண்டு சீறின. திடிரென ரங்கன் கத்தினான், “டே! என்ற காலில் வெடி கொளுவிற்றுதடா ….” ஓடிக்கொண்டே பார்த்தவர்கள், வலது கால் என்பது தெரிகிறது; எந்த இடத்தில் என்பது தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் வந்துவிடப் போவதுமில்லை. ரங்கன் ஓட ஓட அவனது காலிலிருந்து ரத்தம் தெறித்துக்கொண்டிருந்தது. இவர்களால் எதுவுமே செய்ய முடியாது. எதனையும் செய்ய வேண்டுமென அவனும் எதிர்பார்க்கவும் இல்லை. “என்னால் எலாதடா….. என்னை சுட்டுப்போட்டு நீங்கள் ஒடுங்க்கோடா!” ரங்கன் கத்தினான். அவன் ஓட முடியாமல் பின்வாங்கிக்கொண்டிருந்தான். ரஞ்சன் சொன்னான். “குப்பியைக் கடித்துக் கொண்டு….. ‘சாஜ்ஜரை‘ இழு மச்சான் …..” “சாஜ்ஜர்” உடலோடு இணைக்கும் வெடிகுண்டு. தாக்குதலுக்குப் புறப்படும்போது கரும்புலி வீரர்களுக்கு வழங்கப்பட்டது. சண்டைக்களத்தில் எதிரியிடம் பிடிபடக்கூடிய சர்ந்தபம் வருமானால், ஆகக் கடைசி வழியாக அவர்களைக் காக்கும். ரங்கன் குப்பியைக் கடித்துக்கொண்டே “சாஜ்ஜரின்” பாதுகாப்பு ஊசியை இழுத்து எறிந்தான். மெல்ல மெல்ல அவன் பின்தங்கி விழ, கலைத்துக்கொண்டு வந்த படையினர் அவனை நெருங்க….. சாஜ்ஜரும் ரங்கனும் வெடித்துச் சிறரிய சத்தம், ஓடிக் கொண்டிருந்தவர்களின் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தார்கள்….. புகையும், அவனது உயிரும் தமிழீழத்தின் தென்றலோடு கலந்துகொண்டிருந்தன. அந்த வெடி அதிர்ட்சியில் குழம்பித் தடுமாறி, பகைவன் திரும்பவும் கலைக்கத் துவங்க முன், அவர்கள் ஓடி மறைந்து விட்டார்கள். எங்கோ பதுங்கியிருந்து. எல்லாம் அடங்கிய இரவாகிய பின் மெல்ல மெல்ல நகர்ந்து வெளியில் வந்தனர் ரஞ்சனும் புலிக்குட்டியும். தச்சன்காட்டில் மாறுபட்டுக் காணாமற்போன ராஜேசும் இந்து நாட்களின் பின்னர், ஒருவழியாக வந்து சேர்ந்தான். ஆனால் அசோக் வரவில்லை; ரங்கன் வரவில்லை; திருவும் வரவில்லை. நடு இரவு கடந்து போனது. ஒகஸ்ட் 2 ஆம் நாளின் ஆரம்ப மணித்துளிகள் சிந்திக்கொண்டிருந்தன. கெனடி பிரதான கட்டளையகத்துக்கு விபரத்தை அறிவித்தான். “இப்போ நாங்கள் நான்கு பேர்தான் நிற்கின்றோம். ஜெயம், நவரட்ணம், திலகன், மற்றும் நான். நாங்கள் தாமதிக்க முடியாது; மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாது; அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே நாங்கள் நால்வரும் உள்ளே இறங்குகின்றோம். எங்களால் முடிந்தளவிற்கு வெற்றி கரமாகச் செய்கின்றோம்.” தச்சன்காட்டுச் சண்டையின் செய்தி எங்கும் பறந்தது. அந்தப் பெருந்தளம், மயிர்களைச் சிலிர்த்துக்கொண்டு நிமிரும் ஒரு சிங்கத்தைப் போலத் துடித்தெழுந்தது. ஆபத்து தங்களது வீட்டுக்குள்ளேயே நுழைந்துவிட்ட அச்சம் சிப்பாய்களைக் கவ்விக்கொண்டது. சுடுகருவிகள் தயாராகின. எந்த நேரத்திலும், எந்த முனையையும் உள்ளே நுழைந்து புலிகள் தாக்குவார்கள் எனப் படிவீரர்கள் எச்சரிக்கப்பட்டனர். விமான ஓட்டிகள் வானுர்த்திகளில் ஏறித் தயார்நிலையில் இருக்குமாறு பணிக்க்க்கப்பட்டனர். வான்படைத் தளத்தைப் பாதுகாக்கும் காவலரண்களும் , வானுர்த்திகளுக்குரிய காவற்படையினரும் உசார்நிலையில் வைக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சநிலைக்கு வந்து பரிபூரணமாக ஆயத்தமாகிய பகைவன், எதனையும் எதிர்கொள்ளத் தயாராகப் போர்க்கோலம் பூண்டு நின்ற வேளை… யுத்த சன்னதர்களாகப் புறப்பட்டுச் சென்ற எங்கள் கரும்புலி வீரர்கள்….. சிங்களத்தின் சிலிர்ந்து நின்ற பிடரி மயிர்களினூடு ஊர்ந்து, அதன் முகத்தை நெருங்கினர். பிரதான கட்டளையகத்திலிருந்து “வோக்கி”யில் கெனடியின் குரல் ஒலித்தது. கெனடி நிலைமையை விளக்கினான். “நாங்கள் நல்லா கிட்ட நெருங்கிற்றம் ….” “ஏதாவது தெரிகின்ற மாதிரி நிற்கிறதா?” “நாங்கள் தேடிவந்ததில் ஒன்றுதான் நிற்குது. பக்கத்தின் ஒருத்தன் நிற்கின்றான்.” “வேறு ஒன்றும் இல்லையா …..?” “அருகில் சின்னன் ஒன்று ஓடித்திரியுது.” “நீங்கள் தேடிப்போன மற்றதுகள் …..?” “இங்கு இருந்து பார்க்க எதுவும் தெரியேல்ல, துரத்தில் நிற்கக்கூடும். இறங்க்கினதற்குப் பிறகுதான் தேடக்கூடியதாக இருக்கும்.” “இப்ப நீங்கள் இறங்கக்கூடிய மாதிரி நிற்க்கிறீங்களா…….?” “ஓமோம் ….. குண்டு எரியக்கூடிய துரத்திற்கு வந்திட்டம். நீங்கள் சொன்னால் நாங்கள் அடிச்சுக் கொண்டிறங்கிறம்.” “அபடியெண்டால் நீங்கள் அப்படியே செய்யுங்கோ.” கட்டளையகம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு என்ன நடந்திருக்கும் ……? கெனடி உத்தரவிட்டிருப்பான். “தாக்குதலை ஆரம்பியுங்கள்” நவரட்னத்தின் கையிலிருந்த “லோ” முழங்க “பெல் 212” இல் தீப்பற்றி எரியும்போது, கெனடி “டொங்கா”னால் அடிக்க திலகன் அதன் மீது கைக்குண்டை வீசியிருப்பான். அதே சம நேரத்தில்….. ஜெயத்தின் “லோ” பவள் கவச வண்டியைக் குறிவைத்து முழங்கியிருக்கும். பலாலித் தளத்தின் மையமுகாம் அதிர்ந்திருக்கும். தங்கள் அனைத்துக் கவசங்களையும் உடைத்து நுழைந்து, பாதுகாக்கப்பட்ட அதியுயர் கேந்திரத்தையே புலிகள் தாக்கிவிட்டத்தை எதிரி கண்முன்னால் கண்டு திகைத்திருப்பான். சன்னங்களைச் சரமாரியாய் வீசிரும் துப்பாக்கிகளோடு கூச்சலிட்டபடி பகைவன் குவிந்து வர….. கெனடியின் “டொங்கான்” எறிகணைகளைச் செலுத்தியிருக்கும். திலகனின் “ரி – 56” ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்க, தங்களது அடுத்த இலக்கைத் தேடி அவர்கள் ஓடிக்கொண்டிருந்திருப்பார்கள். “கெனடி…… கெனடி….. நிலைமை என்ன மாதிரிஎன்று எங்களுக்கு சொல்லுங்கோ ……” “ஒரு ஹெலியும் ஒரு பவளும் அடிச்சிருக்கிறம். ரெண்டும் பத்தி எரிக்ஞ்சுகொண்டிருக்குது…. கிட்டப் போக ஏலாம சுத்தி நிண்டு கத்திக் கொண்டிருக்குராங்கள். ” “மற்றது என்ன மாதிரி …..?” “தொடர்ந்து அடித்துக்கொண்டு உள்ளே இறங்கிக்கொண்டிருக்கிறம்….. பொம்மருகளைத் தேடுறம்….” ஆனால் 500 மீற்றருக்கு அகன்று 2600 மீற்றருக்கு நீண்டிருந்த விசாலமான ஒரு பாதை அது. மிகவும் துரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ”சியா மாசெட்டி” குண்டு வீச்சு விமானங்களில் தயாராய் இருந்த ஓட்டிகள் அவர்ரியா மேலேடுத்துவிட்டனர். கெனடியின் தொடர்பு நீண்ட நேரத்தின் பின் கிடைத்தது. “கெனடி…. நிலைமை எப்படி எண்டு சொல்லுங்கோ …..” “ஒரு ‘ஹெலி‘யும் ஒரு ‘பவளும்‘ அடிச்சிருக்கிறம்…. முழுசா எரிஞ்சு கொண்டிருக்கு ….. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” “கெனடி ….. நீங்கள் அவசரப்பட வேண்டாம். …. மற்ற ஆக்கள் என்ன மாதிரி?” “நானும் திலகனும் நிக்கிறம் …..” “கெனடி….. நீங்கள் அவசரப்படாதேங்கோ ….. தொடர்ந்து எதுவும் செய்யக்கூடிய மாதிரி இல்லையா ……?” “அண்ணை….. ….. எனக்கு ரெண்டு காலும் இல்லையண்ணா ……” “……………………………………………” “…………………………………….. …..” “…………………………………………” “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ; புலிகளின் தாகம் ……. தமிழீழ ……” “கெனடி …….. கெனடி ……” “கெனடி …….. கெனடி ……” “திலகன் …….. திலகன் ……” “கெனடி …….. கெனடி ……” ஒரு முதியவர் நீண்ட பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு….… “எண்டா தம்பி செய்கிறது…… வயதும் போகுது….” என்று கவலைப்பட்டபோது. அருகில், “ஈழநாதம்” நாளேட்டில் அவர்களின் படங்களைப் பார்த்து நின்ற அவரின் துணைவியார் ஏக்கத்தோடு சொன்னார். “நீங்கள் வயது போகுதெண்டு கவலைப்படுறியள்…. எத்தின பிள்ளைகளுக்கு வயது போறதேயில்லை …….!” வெளியீடு : உயிராயுதம் பாகம் 01 மீள் வெளியீடு :வேர்கள் இணையம் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”