தளர்வற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்: மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே அனுமதி

breaking
இந்தியாவில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.   அதற்கமைய தமிழகத்தில் 7ஆவது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.   இதனையடுத்து, இன்றைய தினம் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.   பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   அரசு வாகனங்கள் தவிர, ஏனைய அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எரிவாயு நிரப்பு நிலையங்கள் உட்பட அனைத்து எரிவாயு நிரப்பு நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.