ஹட்டனில் ஒருவரின் வயிற்றிலிருந்த 350,000 பெறுமதியுடைய தங்கம் - எக்ஸ்ரே பரிசோதனையில் கண்டுபிடிப்பு

breaking
ஹட்டனில் இளம் பெண் ஒருவரின் 350,000 பெறுமதியுடைய தங்கச் சங்கிலியை பறித்த நபர் பொலிஸாரைக் கண்டவுடன் தங்கச் சங்கிலியை விழுங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஹட்டனில் இளம் பெண் ஒருவரின் 350,000 பெறுமதியுடைய தங்கச் சங்கிலியை ஒருவர் பறித்துள்ளார். குறித்த பெண் பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து ஹட்டன் பொலிஸ் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஹட்டனில் உள்ள நகைகள் கடைகளில் விசாரித்தனர். இதன்போது ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவர் குறித்த சங்கிலியை விழுங்கியுள்ளார். இதை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் தமயந்தி பெர்னாண்டோ இன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் ஹட்டனின் வசிக்கும் 33 வயதுடைய அப்துல் முட்டாஷ் முகமது அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்வதற்காக டிக்கோயா மருத்துவமனையில் ஹட்டன் பொலிசார் அனுமதித்துள்ளனர். இதன்போது சந்தேக நபரின் அடிவயிற்றில் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதவான் தமயந்தி பெர்னாண்டோ, சந்தேக நபரை சிறை மருத்துவமனையில் அனுமதித்து, சந்தேக நபரின் அடிவயிற்றில் இருந்த தங்க நெக்லஸை வெளியே எடுக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக தங்க நகையை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சந்தேக நபரை இந்த மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதவான் தமயந்தி பெர்னாண்டோ உத்தரவிட்டார்.