டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனம்?

breaking
இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி டிக்-டாக் உள்பட சீனாவின் 106 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகமும், அந்த நாட்டின் மூத்த எம்.பி.க்கள் பலரும் வரவேற்றனர்.
அண்மையில் இதுகுறித்து பேசிய டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார். இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை உறுதி செய்தது. இந்நிலையில், டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க டிக்டாக், டுவிட்டர் மற்றும் பைட்டான்ஸ் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.