ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள்!

breaking
சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின் 2002.04.08 அன்று திறக்கப்பட்ட ஏ 9 வீதி மீண்டும் மூடப்பட்டு இன்றுடன் 14 வருடங்கள். 2006.08.11 யாழ் கண்டி நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது. யுத்த மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த காலம். விடுதலைப்புலிகளால் 2006.07.21 மாவிலாறு பூட்டப்பட்டு 2006.07.24 இல் மீண்டும் நல்லெண்ண அடிப்படையில் மாவிலாற்றை புலிகள் திறந்து விடுகின்றனர். ஆனால் அதனை விரும்பாத சிங்கள அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மாவிலாற்றை கைப்பற்றுவதற்காக படை நடவடிக்கையினை 2006.07.26 ஆம் திகதி ஆரம்பிக்கிறது. 2006.08.02 ஆம் திகதி மாவிலாறு அணைக்கட்டை இராணுவம் கைப்பற்றுகின்றது. இந்த நிலையில் மாவிலாற்றில் சண்டை நடக்கும் வேளையில் தான் யாழ்ப்பாணத்தினுள் விடுதலைப்புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்காக என்று கூறி 2006.08.11 ஏ-9 வீதி மூடப்படுகிறது. மூடப்பட்ட அன்றைய தினமே முகமாலை முன்னரங்க பகுதியில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது இராணுவம் விமான தாக்குதலை மேற்கொள்கிறது.. 2006.08.28 நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகளுக்கு போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ள சிறிலாங்கா அரசு மறுத்த நிலையில் நோர்வேயின் விசேட விமானம் மூலம் நோர்வே சென்றது அரசியல் துறைப்பொறுப்பாளர் திரு சுப தமிழ்ச்செல்வன் உட்பட்ட புலிகளின் பேச்சுவார்த்தை அணி பிரதான விடயமாக பேச்சுவார்த்தை மேசையில் ஏ 9 வீதியை திறவுங்கள் யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு உணவில்லாமல் பட்டினிச்சாவு ஏற்படப்போகிறது என்றும் திருகோணமலையில் இராணுவம் கைப்பற்றிய இடங்களை கைவிட்டு மீண்டும் பழைய நிலைகளுக்கு செல்ல வேண்டும் எனவும் இதன்பிறகே மற்ற விடயங்கள் பேசலாம் எனவும் தமிழ்ச்செல்வன் அவர்கள் பலதடவை கோரினார். ஆனால் பாதையை திறக்கவும் சண்டையை நிறுத்தி பழைய நிலைக்கு இராணுவம் திரும்பி செல்லவும் அரசு சம்மதிக்காத நிலையில் பேச்சுவார்த்தையை இடையில் முறித்துக்கொண்டு அரச தரப்பு பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறுகிறது. அத்துடன் இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிகிறது. இதன் பின்னர் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்தும் விலகுவதாக ஒருதலைப்பட்சமாக அரசு அறிவித்தது. 2006.08.15 முழுமையாக மாவிலாற்றை இராணுவம் கைப்பற்றுகிறது.. மாவிலாற்றை கைப்பற்றியவுடன் அன்றைய தினமே முகமாலையில் ஒரு படை நகர்வை மேற்கொள்கிறது இராணுவம்.. ஆனால் முகமாலையில் ஒரு இஞ்சி கூட நகரமுடியாமல் பலத்த இழப்புகளுடன் திரும்பி செல்கிறது இராணுவம். தளபதி தீபன் அவர்களில் நெறிப்படுத்தலில் முறியடிக்கப்பட்ட முதலாவது சண்டையில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவ உடல்களும் கைப்பற்றப்படுகிறது.. ஆனால் மறுபுறம் யாழ் மக்கள் பசியால் தவித்த காலமது.. உணவுப்பார்சலைக்கூட திருடும் நிலையில் பசியால் தவித்தனர் அந்த மக்கள். ஆனாலும் அந்த பசியிலும் விடுதலை உணர்வு அந்த மக்களிடம் சற்றும் குறையவில்லை. ஆனால் இன்று அதே யாழ் மக்களில் பலர் அந்த வீர வரலாறுகளை மறந்து அற்ப சலுகைகளுக்காக விலைபோய்விட்டனர் என்பது தான் கவலை. சிங்கள கட்சியில் தமிழ் வேசம் போட்டு வரும் அங்கஜனுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பதும் வன்னியில் இனப்படுகொலை புரிந்த மகிந்தவின் கட்சியான மொட்டுக்கும் இனத்துரோக ஒட்டுக்குழுவின் வீணைக்கும் சிங்கள தேசியக் கட்சியான ரெலிபோனுக்கும் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதும் வேதனைக்குரிய விடயம். சிங்கள அரசின் தமிழ்இனம் மீதான அத்துமீறல்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள் என்றுதான் இந்த தேர்தலின் முடிவுகளிலிருந்து எண்ணத் தோன்றுகிறது.. 2ஃ3 தனிச்சிங்கள பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள மகிந்தவின் ஆட்சியில் இனிவரும் காலங்கள் தமிழ் மக்களால் சமாளிக்க முடியாத காலங்களாக இருக்கும் என்பதும் வேலைவாய்ப்பை நம்பி வீணைக்கும் கையுக்கும் மொட்டுக்கும் வாக்களித்தவர்கள் வேலை வரும் வரும் என்று எதிர்பார்த்து ஏமாறப்போகின்றனர் என்பதும் நான் சொல்லி தெரிய வேண்டியதல்ல. -நிரஞ்சன் தங்கராஜ்