கூட்டமைப்புடன் இனிப் பேச்சு இல்லை: தினேஷ் குணவர்த்தனா கருத்து

breaking
  “தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசுவதற்கான எந்தத் தேவையும் அரசுக்குக் கிடையாது. எங்களுடன் இணைந்துள்ள தமிழ்ப் பிரதிநிதிகளுடனேயே நாங்கள் அது குறித்து பேசுவோம்.” இவ்வாறு ராஜபக்ச அரசின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் நாங்களே, நாங்கள் மட்டுமே தமிழ் மக்களுக்கு இருக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு பிரிவினைவாதம் பேசிக் கொண்டிருந்த கூட்டமைப்பினரைத் தமிழ் மக்களே நிராகரிக்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாக்கு வீதத்திலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் நாங்கள் மட்டுமே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என அவர்களால் கூறிக்கொண்டிருக்க முடியாது. இதனால் அவர்களுடன் எங்களுக்கு பேச வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது. தற்போது அரசில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இருக்கின்றனர். அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்போம். முதலில் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியே முக்கியம். அதனைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம்” – என்றார்.