இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஈழ அகதிகள் குறித்து கவனம் எடுக்கவும்!

breaking

இந்தியாவில் இருந்து 777 குடும்பங்கள் இதுவரை வவுனியாவிற்கு திரும்பியுள்ள நிலையில் அவர்களது தேவைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஓன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவிற்கு அகதிகளாக சென்றவர்கள் மீளத் திரும்பும்போது அவர்களுக்கான வசதி வாய்புக்கள் எவ்வாறு, என்ன விதத்தில் செய்து கொடுக்கபடுகின்றது என ஓருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் கடந்த திங்கள் கிழமை கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதன்போது இது வரை இந்தியாவில் இருந்து வவுனியாவிற்கு 777 குடும்பங்கள் வந்திருப்பதாகவும்

அவர்களில் 200 பேரிற்கு இந்திய வீட்டுத்திட்டம் அமைத்து கொடுத்திருப்பதாகவும், இந்தியாவில் இருந்து வருகைதந்து காணியற்று இருப்பவர்களுக்காக செட்டிகுளம் பகுதியில் காணிவழங்குவதற்கான திட்டம் ஒன்று இருக்கிறது என்றும், வனத் திணைக்களம் அந்தகாணிகளை வழங்கினால் அதனை மக்களுக்கு வழங்கமுடியும் எனவும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், இது தொடர்பில் ஆராய்ந்து அந்த மக்களுக்கான வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் ஒரு குழு நியமிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஓருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களால் கோரப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக இடம்பெயர்ந்து இந்தியாவில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பியுள்ள இந்த மக்கள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரச அதிகாரிகள் முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.