வடமாகண காவல்துறையின் தில்லாலங்கடி வேலை தெரியுமா?

breaking
வடதமிழீழம், ஏற்கனவே குற்றச்சாட்டு ஒன்றிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து காவல்துறை தாக்கல் செய்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் வழக்கொன்றை சோடித்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். யாழ்.நகரில் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போன சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து சந்தேகநபர் ஒருவர் மீது யாழ்ப்பாணம் காவல்துறை, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர் மற்றொரு திருட்டு வழக்கில் விளக்கமறியலில் உள்ளார் என்பது நீதிமன்று கண்டறிந்தது. காவல்துறையினரால் கூறப்பட்ட திருட்டுச் சம்பவ தினத்தில் சந்தேகநபர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்துள்ளார். அவ்வாறு இருக்கையில் அவர் மோட்டார் சைக்கிளைத் திருடியதாக யாழ்ப்பாணம் காவல்துறை வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். எனவே இவ்வழக்கை சந்தேகநபர் மீது சோடிக்கப்பட்ட வழக்காகவே நீதிமன்று கருகிறது. எனவே உரிய விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், வடக்கு மாகாண மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர், காவல்துறை ஆணைக்குழு என்பவற்றுக்கு பரிந்துரைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர் மீது வழக்கை சோடித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் ஒழுக்காற்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் மன்றுக்கு அறிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்று, வழக்கை தள்ளுபடி செய்து சந்தேகநபரை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.