அமைச்சர் விஜயகலாவின் பதவி நீக்கத்திற்கு வடக்கு முதலமைச்சா் கண்டனம்!

breaking

சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்க எதிராக தென்னிலங்கையில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக வட மாகாண முதலமைச்சர் குரல்கொடுத்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அந்த நாள் இன்று வந்திடாதோ என்று அமைச்சர் விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்கள் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தவிர, பாதுகாப்பாகவே இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை என்றும் கூறியுள்ள வட மாகாண முதலமைச்சர், அதனால் இந்த உண்மையை கூறிய விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதையோ அல்லது அவரது அமைச்சுப் பதவியை பறிப்பதோ நியாயமாகிவி முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் தற்போதைய நிலமைகள் குறித்த உண்மையை கூறுபவர்களை பயங்கரவாதிகளாக அடையாயப்படுத்துவதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ள வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவை குறித்து உண்மையான கலந்துரையாடல்களை நடத்த முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யூலை 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் போது தெரிவித்திருந்தார்.

இந்த உரை ஊடகங்களில் வெளியானதை அடுத்து தென்னிலங்கையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர் மாத்திரமன்றி தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் அதேவேளை விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சுப் பதவியை பறிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இதேவேளை மகிந்த அணியினரும் அதேபோல் அவர்களுக்கு சார்பான கடும்போக்கு சிங்கள பௌத்த அமைப்புக்களும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி சிறிலங்கா பொலிஸ் தலைமையகத்தில்முறைப்பாடுகளையும் பதிவுசெய்துள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை பயங்கரவாதியாக அடையாளப்படுத்தி அவரது அமைச்சுப் பதவியை பறிக்க வேண்டும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆவேசமாக கூறிவருவது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாழ் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

( வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரித்துண்டு. நான் அண்றைய கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை.

முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு இருள் வந்த பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன.

இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள்; காவல்துறை அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன். நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது.

அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக தென்னிலங்கை அரசியல் களத்தில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புக்களும், வெறுப்புக்களும் வெறுமனே அவருக்க எதிரானவை அல்ல என்றும் குறிப்பிடும் வட மாகாண முதலமைச்சர், தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கம் வெறுப்பும், சந்தேகமும், அச்சமுமே வெளிப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் கௌரவ விஜயகலாவிற்கு எதிரானவை அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையூம் பிரதிபலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல் வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது.

புலிகள் காலத்தில் எம் மக்கள் (யூத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக சேவைகள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சர், விஜயகலா மகேஷவரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது தொடர்பிலும் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

( உண்மையை உணர்ந்த பின்னரே ஒருவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க இரஞ்சன் இராமநாயக்க அவர்களை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன். இரத்தினப்பிரிய பந்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார்.

எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும்இ சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள். எமது மக்களுக்குப் பாதுகாப்பில்லை; எமக்கு அதிகாரங்கள் இல்லை; எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லைஇ எமக்கு மதிப்பில்லை; புறக்கணிக்கப்படுகின்றோம்; ஆக்கிரமிக்கப்படுகின்றோம். ஆகவே இரத்தினப்பிரிய பந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க இரஞ்சன் இராமநாயக்க முன்வரவேண்டும்.

எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசாங்கத்தின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம். வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல கௌரவ பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிசாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வூ அளிக்க வேண்டும் என்று.