அச்சத்தில் வாழும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதி மக்கள்!

breaking
யாழ். குடா நாடு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்திருப்பது தொடர்பில் மக்கள் அச்சமும், கவலையும் வெளியிட்டுள்ளனர். சிறிதுகாலம் ஓய்ந்திருந்த வாள்வெட்டுக் கும்பல்களின் வன்முறைகள் யாழ் குடா நாட்டில் கடந்த இருவாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்தே மக்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதேவேளை  (03.07.2018)  அன்று மாத்திரம் யாழ்ப்பாணத்தின் இருவேறு இடங்களில் வாள்வெட்டுக் கும்பல்களின் வன்முறைகளில் காயமடைந்த பாடசாலை மாணவன் உட்பட இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றுக்குள் நேற்றிரவு 8 மணியளவில் புகுந்த இருவர், குடும்பத்தலைவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இலக்கத் தகடு இல்லாத ஈருளிலில் முகத்தை துணியால் கட்டிவந்த இருவரே இந்த குற்றச்செயலைச் செய்துவிட்டு தப்பித்தனர் என்று காவல்துறையின்  விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் ஹரிதாஸ் சத்தியதாஸ் என்ற குடும்பத்தலைவரே காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிடுகின்றனர். தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக காவலர்கள்  தெரிவித்தனர். இதேவேளை தெல்லிப்பளை காவல் நிலைய  பிரிவுக்குட்பட்ட விளான் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள்   புகுந்து  முகத்தை மூடி அணிந்துவந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று 15 வயது மாணவனைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 15 வயதான சிவராசா சாரூஜன் என்ற மாணவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர்  தெரிவித்தனர். காயமடைந்த மாணவன், ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் தனு ரொக்கின் உறவுமுறை இளைய சகோதரன் என்று காவல்துறை தரப்பில்  தெரிவித்தனர். மானிப்பாயிலுள்ள தனு ரொக்கின் வீட்டில் கடந்த வாரம் தாக்குதல் நடத்திய கும்பல், அவரை அச்சுறுத்தும் வகையில் அவரது உறவுமுறைச் சகோதரனையும் தாக்கியுள்ளனர் என்றும் காவல்துறை தரப்பில் கூறினர். இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட காவல்  நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள்  உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களாக இடம்பெறும் வாள்வெட்டு கும்பல்களின் அடாவடித்தனங்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.