காற்றுப் போனதால் காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட  கும்பல்

breaking
வடதமிழீழம், மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது எனவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கொடிகாமம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மிருசுவில் வடக்கு வீதியில் உள்ள தம்பு ஜெயானந்தம் என்பவரது வீட்டுக்குள் நேற்று வியாழக்கிழமை இரவு வாள்கள் பொல்லுகளுடன் பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் புகுந்து, வீட்டில் இருந்தவர்களையும் அயல் வீட்டில் வசித்தவர்களையும் சரமாரியாக தாக்கியது. அப்போது அயலில் உள்ளவர்கள் கூக்குரல் இட்ட போது , கிராம மக்கள் திரட்டனர். அதனால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர் அவர்களை மக்கள் விரட்டிச்சென்றனர். இதன்போது கும்பலைச் சேர்ந்த சிலர் பயணித்த காரினுடைய சக்கரம் ஒன்று காற்றுப்போனதனால் அதனைக் கைவிட்டுவிட்டு அதில் பயணித்தோர் தப்பிச்சென்றுவிட்டனர். கார் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டு கொடிகாமம் காவற்துறை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.அதனை அடுத்து கார் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் அந்தக் காரினுடைய உரிமையாளர் சாவகச்சேரி சரசாலை வடக்கைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டு உரிமையாளரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது, கார் வாடகைக்கு கொடுக்கப்பட்டதாக உரிமையாளரினால் தெரிவிக்கப்பட்டது.அதனை அடுத்து வாடகைக்கு காரினை பெற்று சென்றவரை இன்று வெள்ளிக்கிழமை கொடிகாமம் காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவரிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.