திமுக தொண்டர்கள் 12 பேர் அதிர்ச்சியில் மரணம்.!

breaking
திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடம், மரணம் செய்தி அறிந்து திமுக தொண்டர்கள் 12 பேர் அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும் இறந்துள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு: மொழிப்போர் தியாகி மரணம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ராயம்பட்டியை சேர்ந்தவர் சந்தியாகு (75), மொழிப்போர் தியாகியான இவர் ராயம்பட்டி திமுக கிளை அவைத்தலைவராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு டிவி பார்த்து கொண்டிருந்தபோது திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதை பார்த்ததும் திடீரென சந்தியாகு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.கலசபாக்கம்: கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(45). 3வது வார்டு திமுக ஊராட்சி செயலாளர். கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு செய்தி அறிந்து மனவேதனையில் இருந்த வெங்கடேசனுக்கு நேற்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்தார். வேலூர்: வேலூர் அடுத்த அரியூர் காந்தி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(42). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 25 ஆண்டுகளாக திமுகவில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பின்னடைவு குறித்த செய்தி கேட்ட ராஜ்குமார் மயங்கி விழுந்து இறந்தார். தூக்கிட்டு தற்கொலை: தேனி மாவட்டம், போடி அருகே கரியப்பகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (எ) முருகேசன் (48). டெய்லர். திமுக தொண்டர். நேற்று கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடம் செய்தியை கேட்டு, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (55). கூலித்தொழிலாளி. சுமார் 40 வருடங்களாக திமுகவில் உறுப்பினர். நேற்று மாலை 4 மணியளவில், டிவியில் வந்த கருணாநிதி கவலைக்கிடமான செய்தியை பார்த்து கொண்டிருந்தவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் சரோஜினி நாயுடு தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (41). ஆட்டோ டிரைவரான இவர், திமுக மாணவரணி துணை அமைப்பாளராக இருந்தார். நேற்று டிவி.யில் கருணாநிதி தொடர்பான செய்தியை பார்த்துக் கொண்டிருந்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் தெற்கு ஒன்றியம் சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(55). முன்னாள் திமுக கிளை அவைத் தலைவர். இவர் கருணாநிதி உடல் நிலை குறித்து டிவியில் செய்தி பார்த்து கொண்டிருந்தார். அப்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் கனகராசு (58). நெசவு தொழிலாளி. திமுக தொண்டர். நேற்று மாலை தொலைக்காட்சியில் கருணாநிதி கவலைக்கிடமான செய்தியை பார்த்துக் கொண்டிருந்த கனகராசு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அடுத்த  தேவலம்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிம்மாளி (43). திமுக தொண்டர்.  இவர், நேற்று காலை கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக    தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.* இதேபோல, டிவியில் கருணாநிதி உடல்நலம் குறித்த செய்தி பார்த்துக்கொண்டிருந்த பள்ளிப்பட்டை அடுத்த நொச்சிலி பகுதியை சேர்ந்த திமுக தொண்டர் துரைராஜ் (35) நேற்று காலை மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார். மாமல்லபுரம்:  தேவனேரி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (71). இவர், தேவனேரி கிராம 3வது வார்டு தி.மு.க. கிளைச் செயலாளராகவும், தேவனேரி மீனவர் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தார்.  நேற்று முன்தினம் இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற தகவலை தொலைக்காட்சியில் பார்த்ததும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 16வது வார்டு சட்டையம்புதூரை சேர்ந்த நெசவுத்தொழிலாளி மாரிமுத்து(62). திமுக வார்டு பிரதிநிதி. இவர் நேற்று மாலை 4 மணியளவில் கருணாநிதி கவலைக்கிடம் பற்றிய செய்தியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். தீக்குளிப்பு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த மேலவாசல் குமரபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). விவசாயியான இவர் பல ஆண்டுகளாக தீவிர திமுக தொண்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதி மறைந்த தகவல் கிடைத்தவுடன், வீட்டில் இருந்த ேகாவிந்தராஜ், வேதனை தாங்காமல் கதறி அழுதபடி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.