தமிழால் தமிழுக்காக தமிழாய் வாழ்ந்த தலைவரை தமிழ் சமூகம் இழந்து நிற்கிறது!

breaking

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவு குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கும், அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கும், கலைஞரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் க.பிறேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

உலகெங்கிலும் வாழும் கோடானுகோடி தமிழ் மக்களின் உள்ளங்களை தம் தமிழ் இலக்கிய அறிவால் ஆட்கொண்டிருந்த தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவரும் அனைவராலும் முத்தமிழ் காவலர், டாக்டர் கலைஞர் என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தனது தொன்னூற்றைந்தாவது அகவையில் இயற்கை எய்தினார் என்ற விடயம் 07.08.2018 செவ்வாயன்று மாலை தொலைக்காட்சி ஊடாக வெளிவந்ததும் நாம் அதிர்ச்சி அடைந்தோம்.

தமிழ் மொழியின் மீது அவர் கொண்ட பற்றின் காரணமாகவும் தமிழ் மக்களின் அடையாளத்தைக் காப்பதற்காகவும், அவர் தமிழகத்தில் நிகழ்த்திய போராட்டங்கள் ஏராளம். அத்துடன் அவர் ஈழ மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் விமர்சனங்களுக்கு அப்பால் போற்றப்பட வேண்டியதே. இலங்கை சுதந்திரம் பெற்ற காலம்தொட்டு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழகம் தொடர்ந்தும் குரல்கொடுத்தே வந்துள்ளது. இவைகளுக்கு சிகரம் வைத்தாற்போல் 1983ஆம் ஆண்டு தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உடனடியாகவே பதிலளிக்கும் வகையில் கலைஞர் அவர்கள் சென்னையில் அறிவாலயத்திற்கு முன்னால் குறுகியகால அழைப்பில் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்களை அணிதிரட்டி இலங்கை அரசிற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உலகறியச் செய்திருந்தார்.

கலைஞர் அவர்களுடன் 1983ஆம் ஆண்டிலிருந்து நெருங்கிப் பழகியவர்கள் என்ற அடிப்படையில் அவர் எமது மக்கள்மீது கொண்டிருந்த அனுதாபத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. தமிழக மக்கள் தனது தலைவனை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அத்தலைவனின் குறைகளைச் சுட்டிக்காட்டுவது அரசியல் நாகரிகமாகாது.

பள்ளிப்படிப்பைக்கூட நிறைவு செய்யாத கலைஞரின் படைப்புக்கள் கலாநிதி பட்டத்திற்காக ஆய்வு செய்யப்படுகின்றன. நாம் அவரிடம் இருந்து கற்பதற்கு நிறையவே இருக்கின்றது.

கட்சி கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்பட வேண்டும் என்பதையும், கட்சித்தலைமை ஒன்றிய, வட்ட, நகர, மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து செயற்படவேண்டும் என்பதையும், கட்சியின் கிளைகள் ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதையும் நடைமுறையில் செய்து காட்டி கட்சியை ஐம்பதாண்டுகாலமாக வழிநடத்திக் காட்டியவர்.

தனது நாவன்மையாலும், அறிவாற்றலாலும், இலக்கிய ரசனையினாலும் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர். படிப்பறிவு என்பது வெறும் பாடசாலைக் கல்வியின் ஊடாக மட்டுமே வந்து விடுவதில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர். அறுபதுகளில் பராசக்தி தொடக்கம் சமகாலத்தில் வெளிவந்த பாசப்பறவைகள்வரை பல திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். நல்ல கவிஞர்.

குறளோவியம், பண்டாரவன்னியன், தொல்காப்பிய உரை போன்ற எண்ணற்ற நூல்களை எழுதியதுடன், முரசொலியில் நாளாந்தம் அன்பு உடன்பிறப்பே என்று விலித்து தொண்டர்களுக்கு முரசொலி நாளேட்டின் மூலம் நாட்டு நடப்பைச் சொல்லி அரசியல் வகுப்பு எடுத்தவர். நல்ல நினைவாற்றல் உடையவர். மேடை நாகரிகம் தெரிந்தவர். மேடையில் வீற்றிருப்போரை விளிக்கும்போது கூட அவர்களின் உரையை மேற்கோள்காட்டி அதனூடாகவே விளிக்கும் பண்பு கொண்டவர். கருத்துக்களை செவிமடுத்து கிரகித்து சமயோசிதமாக அவற்றை அந்த மேடையிலேயே பிரயோகித்து அதனூடாக தமது கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் ஆற்றல் படைத்தவர்.

தொண்டர்களின்மீது அளவற்ற அன்புகொண்டவர். கறுப்பு ஜூலை நிகழ்வைத் தொடர்ந்து தமிழகத்தில் தடம் பதித்திருந்த அனைத்து போராட்ட அமைப்புக்களுக்கும் தனது கிளைகளினூடாக தொழிற்சாலை ஊழியர்களிடமிருந்தும் உழைக்கும் வர்க்கத்தினரிடமிருந்தும் கிராம மக்களிடமிருந்தும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். ஈபிஆர்ஆல்எவ், ஈரோஸ் மற்றும் ரெலோ ஆகிய போராட்ட இயக்கங்கள் 1984இல் ஒன்றிணைந்து ஈழ தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கிய வேளையில் அன்று மாலை சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் மிகப் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தைக் கூட்டி அந்த ஐக்கிய முன்னணியை பிரகடனப்படுத்தினார்.

பின்னைய நாட்களில் அவர் எம்மீது உரிய அக்கறை செலுத்தவில்லை என்ற போதிலும் கடந்த காலங்களில் அவர் எம்மீது காட்டிய அன்பையும், அக்கறையையும், ஆதரவையும் நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். இனி வருங்காலத்தில் எமக்கிடையிலான உறவுகள் ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

திமுக தலைவர் கலைஞரின் இழப்பு அந்தக் கட்சிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. கலைத்துறை, அரசியல்துறை, இலக்கியத்துறை என்று அனைத்துத் துறைகளிலும் அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஈடுசெய்வது கடினம். அன்னாரின் துயரத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் பங்கெடுத்துக்கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சித் தொண்டர்கள் உற்றார் உறவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.