மழையில் தத்தளிக்கும் கேரளா ;மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம்.!

breaking
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இங்கு தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் முகாம்கள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வீடு, வாசல்களை இழந்த இவர்களின் கைகளில் ஒரு காசு கூட இல்லாததால் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் மாநிலம் முழுவதும் இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். 1,500 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 101 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. வயநாடு மாவட்டத்தில் உள்ள மனந்தவாடி, விதிரி ஆகிய மலைநகரங்களுக்கு செல்லும் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த சிறு நகரங்கள் உடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படை, நீரில் மூழ்கி தேடும் வீரர்கள் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சாலைகளை தற்காலிகமாக சீரமைத்து பொதுமக்களை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்தவண்ணம் உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டும் வருகின்றனர். அவர்கள் வளர்த்த கால்நடைகள் உணவு கிடைக்காமல் சுற்றித்திரிகின்றன. மண் சரிவு மற்றும் மழையால் ஆயிரக்கணக்கான வாகனங்களும் சேதம் அடைந்தன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி உள்ளது. இடுக்கி அணையின் துணை அணையான செருதோணி அணையின் 5 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் செருதோணி, பெரியார் ஆறுகள் வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கன மழை, வெள்ளம் மற்றும் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் கேரள மாநிலம் தனித் தீவுபோல் மாறி தத்தளிக்கிறது. தற்போது இடுக்கி, இடமலயார் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து இருப்பதால் அணைகளின் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அச்சம் அடையத் தேவையில்லை என்று மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் ஏற்கனவே மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் நேற்று காலை முதல் கனமழையும் கண்ணூர், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாநில வானிலை மையம் அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளது. தொடர் மழையால் கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டது. ஏற்கனவே வந்தவர்களும் விடுதிகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இடுக்கி மாவட்டம் வாகமன் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.   இந்தநிலையில் செருதோணி பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மீட்பு குழுவினர் முடிவு செய்தனர். ஆனால் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் செருதோணி பாலத்தை மூழ்கடிக்கும் நிலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை மீட்பு குழுவினர் தூக்கிக்கொண்டு, அந்த பாலம் வழியாக வேகமாக ஓடினர். பின்னர் அந்த குழந்தையை செருதோணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் அந்த பாலம் நீரில் மூழ்கியது. உயிரை பணயம் வைத்து குழந்தையை மீட்பு குழுவினர் காப்பாற்றியதை பொதுமக்கள் பாராட்டினர்.