சூரியனை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் ‘பார்க்கர்’ விண்கலம்.!

breaking
சூரியனை நெருங்கி ஆய்வு செய்வதற்காக ‘பார்க்கர்’ என்ற விண்கலத்துடன் அலையன்ஸ் டெல்டா 4 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனின் ஒளிவட்டத்திலிருந்து சூரியப்புயல் அவ்வப்போது வெளிப்படுகிறது என்பதை இயற்பியல் விஞ்ஞானி யூஜீன் பார்க்கர்(91) என்பவர் கடந்த 1958ம் ஆண்டு கூறினார். அதை அப்போது சில விஞ்ஞானிகள் நம்பவில்லை.  விண்ணுக்கு அனுப்பப்பட்ட சில செயற்கைகோள்கள் பாதிப்புக்குள்ளானபோதுதான், சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பக் காற்று மற்றும் மின்னணு துகள்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பது உணரப்பட்டது.பூமியில் ஏற்படும் வானிலை மாற்றங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதுபோன்று, விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே அறிய வேண்டிய தேவை விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு சூரியனின்  ஓளிவட்ட பகுதியை மிக நெருங்கி சென்று ஆராய்ந்து அதன் ரகசியங்களை ஆராய வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்ட விண்கலத்துக்கு, சூரியப்புயல் பற்றி முதலில் கருத்து கூறிய விஞ்ஞானி பார்க்கரின் பெயர் வைக்க முடிவு  செய்யப்பட்டது. இதற்காக 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில், ‘பார்க்கர்’ என்ற விண்கலம் தயாரிக்கப்பட்டது. ஒரு கார் அளவுக்கு பெரிதாக இருக்கும் இந்த விண்கலத்தை, அதிக எடையை தூக்கிச் செல்லும் உலகின் சக்தி வாய்ந்த  ‘அலையன்ஸ் டெல்டா-4 ராக்கெட்’ மூலம் அனுப்ப நாசா முடிவு செய்தது.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கெனவரல் ஏவுதளத்திலிருந்து நேற்று முன்தினம் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான கவுன்ட்  டவுன் தொடங்கப்பட்ட நிலையில், ஹீலியம் கேஸ் சென்சார் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட் விண்ணில் செலுத்துவது பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் கவுன்ட் டவுன் தொடங்கியது. வானிலை 60 சதவீதம் சாதகமாக இருந்ததால் இந்த ராக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணை சென்று அடைந்ததும், பார்க்கர் விண்கலத்தை வீனஸ் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் ராக்கெட் செலுத்தும். அதன்பின், வீனஸ் கிரகத்தின் ஈர்ப்பு விசை மூலம் இந்த விண்கலம் சூரியனை நெருங்கும். ஒவ்வொரு சுற்றுவட்ட பாதையை கடக்கும்போதும் விண்கலத்தின் வேகம் அதிகரிக்கும். மணிக்கு 6.92 லட்சம் கிமீ வேகத்தில் இந்த விண்கலம் பயணிக்கும் என கூறப்படுகிறது. விண்ணுக்கு மனிதன் அனுப்பிய விண்கலங்களில்  மிக வேகமாக சுற்றும் விண்கலம் இதுதான். 2024ம் ஆண்டு டிசம்பருக்குள் சூரியனின் 21 சுற்று வட்டப்பாதைகளை கடந்து சூரியனின் மையப் பகுதியிலிருந்து 6.4 மில்லியன் கிமீ தூரத்துக்கு பார்க்கர் விண்கலம் சென்றுவிடும். சூரியனிலிருந்து மிக அதிகமான வெப்பம்  வெளிப்படும் என்பதால் 1370 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் விதத்தில் விண்கலத்தை சுற்றி வெப்ப பாதுகாப்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. விண்கலத்தின் சோலார் பேனல்கள் சூரியனின் வெப்பத்தில் கருகி விடாமல் இருக்க, விண்கலம் 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் விதத்தில் இதனுள்ேள குளிர்வூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.அடுத்த 7 ஆண்டுகளில் இந்த விண்கலம் சூரியனின் ஒளிவட்டம், அதிலிருந்து வெளிப்படும் வெப்பக் காற்று, வெப்ப துகள்கள் உட்பட சூரியனை பற்றிய பல ரகசியங்களை ஆராய்ந்து, அதன் தகவல்களை பூமிக்கு அனுப்பும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ஹீலியஸ் சாதனையை முறியடிக்கும் சூரியனின் செயல்பாடுகளை ஆராய ஹீலியஸ் 1 என்ற விண்கலம் 1974ம் ஆண்டும் ஹீலியஸ் 2 என்ற விண்கலம் கடந்த 1976ம் ஆண்டும் அனுப்பப்பட்டுள்ளது.  சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள தூரம் 150 மில்லியன் கி.மீ.  ஹிலியஸ் விண்கலங்கள், சூரியனிலிருந்து 43 மில்லியன் கி.மீ தூரம் வரை சென்றது. கடந்த 1985ம் ஆண்டு வரை இந்த விண்கலங்கள் தகவல்களை அனுப்பியது. தற்போது இவைகள் செயல்படாமல் சூரியனை சுற்றிக்  கொண்டிருக்கின்றன. தற்போது அனுப்பப்படும் பார்க்கர் விண்கலம் சூரியனின் மையப் பகுதியிலிருந்து 6.4 மில்லியன் கி.மீ தூரத்திலிருந்து ஆராயும்.