ஐ.நா சபையே …!

breaking
ஐ.நா சபையின் அடுக்குமாடி உறுதியாக உயர்ந்து நிற்கிறது மனித எலும்புகளின் மகத்தான உறுதியினால் வானைப் பிடிக்க வளர்ந்து வருகிறது பட்டொளி வீசி பறக்கின்ற கொடியினை எட்டிப் பாருங்கள் – தொகை வகையாய் சேர்ந்த உயிர்கள் ஆடித்துடிக்கின்றன. மேடைமீது ஏறி இருந்து ஏற்றம் பற்றி பேச்சு நடத்தும் தேசத்துரைமாரே குனிந்து பாருங்கள் பூவாய் இருக்கும் கம்பளம் கீழே புழுவாய் நெளியும் மனித உடல்கள் அவை உங்கள் குருட்டுக் கண்களை வெருட்டி திறக்கும்.
கோழிச் செட்டைக்குள் குஞ்சுகள்தன் பாதுகாக்கப்படும் ஆனால் இங்கே பருந்துகள் தானே பாதுகாக்கப்படுகின்றன. ஐ.நா சபையே உன் ஏமாளித்தனத்தை என்னென்று சொல்ல – கோடி கோடியாய் ஏழை உயிர்களை ஏப்பம் விட்ட வல்லூறுகளின் வண்டி ஊதிப்பெருத்து உள்ளுக்குள் அடங்காது செட்டைக்குள்ளே சின்னதாய் தெரியுது ‘உலக சமாதானம் – இந்த உன்னத கோட்பாட்டிற்குள் தலையைப் புதைக்கும் தீக்கோழி நீ முகம் தெரியாவிட்டாலும் – சீ… முழு உடலும் அம்மணமாய் தெரிகிறது.
உரிமைப்போர் எல்லாம் உன்னால் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாம் உலகம் சொல்கிறது. சுதந்திரத்தின் சுகம் பற்றி சொல்வதற்கு சொந்தமாய் உனக்கேதும் அனுபவம் உண்டா? இல்லையே எங்கள் தேசம் எங்கள் மக்கள் எமதே உரிமை எனவே நாம் சுதந்திரப் பிரகடனம் செய்து முடித்திடுவோம். நாளை தியாகமும் திறமையும் திடமாய் எமை வளர்க்கும் – அப்போது சமநிலையை சரிப்படுத்த எம்மை நீ சந்திக்க வேண்டிவரும். அக்கணத்தில் சுதந்திரம் பற்றிய சொந்த அனுபவத்தை நாங்கள் சொல்லித் தருவோம். -ஆக்கம் :மேஜர் பாரதி  வெளியீடு :வெளியீட்டுப்பிரிவு – விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு, காதோடு சொல்லிவிடு நூல் பக்கம் (45- 46) ”,  மீள் வெளியீடு :வேர்கள்  தமிழ்த் தேசிய ஆவணக் கீற்று 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “