கடற்தொழிலாளர்களுக்காக இந்தியாவை பகைக்க முடியாது?

breaking
வட தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா, யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கத்தினரை நேற்று இரவு யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த  கலந்துரையாடலின் போது, யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்தினர் தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு மகஜர் கையளித்ததுடன், தமது தேவைகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்கள். இதன்போது கருத்துரைத்த அமைச்சர், இந்திய இழுவைப்படகு விவகாரம் தொடர்பாக இந்தியா  அரசாங்கத்தைப் பகைக்க முடியாதென கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். ”கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். வடபகுதியில் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியாகவும், பல வகையிலும் பின்னடைவினை எதிர்நோக்கியிருந்தார்கள். வடபகுதியில் வாழ்ந்த மக்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நம்பிக்கை இழந்தவர்களாக இருந்ததுடன், எதிர்காலம் பற்றி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத காலகட்டத்தினை கடந்து வந்துள்ளார்கள். எனவே, தார்மீக ரீதியாக பார்க்கப்பட வேண்டிய விடயம். வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும். இந்தப்பிரதேசங்கள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மத்தியில் நல்லாட்சியை ஏற்படுத்த ஜனாதிபதியும், பிரதமரும் இயன்றளவு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். மக்கள் சுவீட்சத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளோம். இந்த நிலமைகளில் தாக்கங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது.   மேலும், யாழ்.மாவட்டத்தில் 5 துறைமுகங்களை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறியதுடன், 20 இடங்களில் இறங்குதுறைகளையும், ஆழப்படுத்தப்படவுள்ள பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம் என்றார். இந்தியாவிற்கும் இலங்கைக்கும்  நீண்டகால தொடர்புகள் இருப்பதனால், மீனவர்களின் பிரச்சினைகளைத் தொடர்புபடுத்தி இந்தப்பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிக்க கூடாது. இந்திய அரசாங்கத்துடனும், இந்த மீனவ அமைப்புக்களுடனும் சுமூகமான பேச்சுக்களை நடாத்துவோம். அத்துமீறும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம். ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி நல்லிணக்கத்தினை உருவாக்க வேண்டுமென்பதே எமது நோக்கம் என்றார்”