200 ஆண்டு பழமையான பிரேசில்அருங்காட்சியகம் தீ :அரிய பொருட்கள் சேதம் .!

breaking
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள 200 ஆண்டு பழமையான அருங்காட்சியகம்  தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமானது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 1818ம் ஆண்டு கட்டப்பட்ட தேசிய அருங்காட்சியகம் உலகப் பிரசித்திப் பெற்றது. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகப்பழமையான, அரிய, அபூர்வ வகை தொல்லியல் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவின் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு, 1784ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட விண்கல், டைனோசர் படிமங்கள், கி.பி.750ம் ஆண்டை சேர்ந்த எகிப்து மம்மி என காணக்கிடைக்காத வரலாற்று அபூர்வங்கள் அருங்காட்சிகயத்தில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 2ம் தேதி இரவு பார்வையாளர்கள் நேரம் முடிந்து, அருங்காட்சியகம்  மூடப்பட்ட பிறகு  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென மியூசியத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் கையில் கிடைத்த பொருட்களை மீட்டு கொண்டு வந்தனர். ஏறக்குறைய மியூசியம் முற்றிலும் எரிந்து நாசமானது. அங்கிருந்த சுமார் 2 கோடி அரிய பொருட்கள் தீயில் கருகி உருக்குலைந்தன. இச்சம்பவம் தொல்லியல் துறையினர், ஆய்வாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தீ விபத்து குறித்து பிரேசில் அதிபர் மைக்கேல் டீமர் கூறுகையில், ‘‘இந்த இழப்பு கணக்கிட முடியாதது. 200 ஆண்டு பணியையும், அறிவாற்றலையும் நாம் இழந்து விட்டோம்’’ என்றார். அருங்காட்சியகத்தை  பராமரிக்க அரசு போதிய நிதி ஒதுக்காததே இப்பெரும் இழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.