சுமந்திரனின் கருத்துக்களிற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் ரெலோ

breaking
சுமந்திரனின் அண்மைய கருத்துக்களுக்கும் ஆட்சேபம் தெரிவித்த ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா, வாயில் வந்ததை பேசும் கஜேந்திரகுமாரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இன்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது ஊடகவியலாளர்களின் கருத்துக்களுக்கு அவர் பதிலளித்தார். கேள்வி: வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அதில் நீங்களும் உள்வாங்கப்படவுள்ளதாக கருத்துப்பட கூறியுள்ளமை தொடர்பாக உங்கள் கருத்து என்ன? சிறிகாந்தா: வடமாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஆரம்பிக்கையில் எங்களை உள்வாங்குவது போன்ற கருத்துப்பட கூறியிருந்தால், அதனை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என தெரியவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களால் நன்கு அறியப்பட்டவர். நேற்றுத்தான் அரசியலிற்கு வந்தவர். அவர் விரும்பினால் கட்சியை தொடங்கலாம். அது அவருடைய உரிமை. ஆனால் அவருடன் நாங்கள் இணைந்து கொள்வோம் என்று எதிர்பார்த்தால் அது என்னைப்பொறுத்த மட்டிலே சிறு பிள்ளைத்தனமானது. ஏனெனில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டுடன் கூட்டமைப்பிற்குள் பயணிக்கின்றோம். இதே நேரத்தில் ஒரு விடயத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். உங்களை நம்பித்தான் முதலமைச்சராக முன்னிறுத்தினோம். எங்கள் மக்களும் அபரிமிதமான ஆதரவை தந்ததுடன் உங்கள் மீது மதிப்பையும் வைத்துள்ளனர். ஆனால் அந்த மதிப்பை நீங்கள் தவறாக எடைபோட்டுவிடக் கூடாது. யார் உங்களிற்கு என்ன சொன்னாலும், எந்த போதனையை கொடுத்தாலும், சரியாக அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுத்து எமது இனத்திற்கு எது நல்லது என்பதை தீர்மானித்து கூட்டமைப்பின் ஒற்றுமை எந்தவித செயற்பாடும் பாதிக்காத வகையில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது மக்களுடைய எதிர்பார்ப்பாகும். கேள்வி: ரெலோ நீண்ட அரசியல் வரலாற்றை கொண்டவர்கள், கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இணைந்து செயற்பட்டு வருகின்றீர்கள். இந்நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் வந்ததாக தெரிவித்திருக்கின்றீர்கள். இதேவேளை உங்களது ஊடக பேச்சாளர் சுமந்திரனும் அண்மைக்காலங்களில்தான் அரசியலுக்கு வந்தவர். அவர் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எடுப்பதற்கு அனுமதிக்கின்றீர்களா? சிறிகாந்தா: கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எந்தவொரு தனி மனிதனும் எடுக்கலாம் என்று எவருக்கும் அனுமதி கொடுத்ததாகவும் இல்லை, கொடுக்கப் போவதும் இல்லை. கூட்டமைப்பிலே மூன்று கட்சிகள் பிரதான அங்கத்துவ கட்சிகளாக இருக்கின்றதுடன் அக்கட்சிகளில் பல்வேறு தலைவர்கள் இருக்கின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் சில கருத்துக்கள் வெளிவரத்தான் செய்கின்றது. கருத்துரிமை என்பது இருக்கின்றது. ஆனால் கருத்து என்பது ஒன்று, முடிவு என்பது வேறொன்று. வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இணைந்திருக்கின்ற கூட்டமைப்பு அல்லது சார்ந்திருக்கின்ற கூட்டமைப்பு உரிய நேரத்தில் முடிவெடுக்கும். கேள்வி: ஓற்றையாட்சி முறையை ஏற்றமையினாலேயே கூட்டமைப்பு குழுக்களின் பிரதி தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? சிறிகாந்தா: தற்போது இருப்பது ஒற்றையாட்சி அரசியல் முறையாகும். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிலான பாராளுமன்றத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் என்ற பொறுப்புக்களுக்கு அடுத்த படியாக குழுக்களின் பிரதி தலைவர் என்ற பதவியை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டதன் மூலமாக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டதாக கஜேந்திரகுமார் சொல்லியிருக்கின்றார். அவரிடம் ஒன்றை கேட்கின்றேன் நீங்களும் இரு தடவை பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்தீர்கள் அப்படியானால் நீங்களும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுதான் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தீர்கள். சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை சட்டம் படித்த கஜேந்திரகுமார் எழுப்பக்கூடாது. கஜேந்திரகுமார் அரசியலிலே நீண்டகாலம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. அத்துடன் நல்லபடியாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பமாக இருக்கின்றது. அதற்காக வாயில் வந்ததெல்லாவற்றையும் கஜேந்திரகுமார் பேசுகின்றார் என்றால் அவரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்காக தமிழ் கட்சிகள், சில தமிழ் உறுப்பினர்கள் செயற்படுவதாக நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கின்ற கருத்துக்கள் அண்மைக்காலமாக பங்காளிக்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதனால் அவர் கூட்டமைப்பினை உடைப்பதற்காக செயற்படுகின்றாரா? சிறிகாந்தா: சுமந்திரனின் செயற்பாடு நிச்சயமாக அவ்வாறில்லை. சுமந்திரனின் கருத்து ஆட்சேபகரமாக இருக்கும் போது நாங்கள் எங்கள் கருத்துக்களை சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம். குறிப்பாக ரெலோ தலைமை மற்றும் புளொட் தலைமையை பற்றி கூறிய கருத்துக்களிற்கு எங்களுடைய கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருக்கின்றோம். ஆனால் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உள்நோக்கம் கொண்டவை என நாங்கள் கருதவில்லை என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற ரீதியில் எதையும் பேசலாம் என்று நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவரினால் வெளியிடப்படும் கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு சார்பான கருத்துக்களாக அமைய வேண்டும். சுமந்திரன் நினைக்கின்ற கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக சொல்லக்கூடாது என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பு என்பதோடு இதனை அவரிடமும் வலியுறுத்தியுள்ளோம். மேலும் சுமந்திரனுடைய கருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக வருகின்ற போது அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகதான் அமைய வேண்டும். கேள்வி: முப்பதாண்டு கால யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்களின் பல்வேறு சமய ஸ்தலங்கள், தொழில் ஸ்தாபனங்கள் என்பன ஆக்கிரமிக்கின்ற நிலைமை காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இருந்து வெளிவருவதற்கு கூட்டமைப்பு ஏதேனும் பொறி முறைகளை வைத்திருக்கின்றதா? சிறிகாந்தா: தமிழ் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வெற்றி பெற்றிருந்தார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆக்கபூர்வமான ஆதரவு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசிற்கு வழங்கப்பட்டு வந்திருந்தாலும் கூட அவர்கள் சிங்கள பேரினவாதிகளின் கட்சிகளின் தலைவர் என்பதையும், ஆட்சி நடாத்துவது சிங்கள பேரினவாத கட்சிகள் என்பதனையும் நாங்கள் மறந்துவிடக்கூடாது. இந்த நாட்டிலே அரசியல் சார்ந்த அல்லது அரசியலோடு இணைந்த சிங்கள இனவறி சக்திகள் பல்வேறு அமைப்புக்களிலும், துறைகளிலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சிங்கள பௌத்த நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றனர். இதன் விளைவாகத்தான் அரசாங்கத்தின் ஆதரவோடு விகாரைகள் முளைக்கின்றன. எங்களுடைய மக்களுடைய புராதண வரலாற்று ஆலயங்களில் வழிபடுவதற்கான உரிமை கூட மறுக்கப்படுகின்றன. அரசாங்கம் விரும்பினால் இவற்றை எல்லாம் நிறுத்த முடியும். ஆனால் அரசாங்கம் விரும்பவில்லை என்பது ஒன்று அரசினால் முடியாமல் இருப்பது வேறு ஒன்று. ரணில் விக்ரமசிங்கவின் கட்சியோ, மைத்திரி பால சிறீசேனவின் கட்சியின் ஒரு பிரிவோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியோ ஆட்சிக்கு வருவதற்கு அல்லது வந்த பின்னர் ஆட்சியை தக்க வைப்பதற்கு சிங்கள பெரும்பான்மை இனத்தினுடைய ஆதரவுதான் தேவை என்ற யதார்த்தத்தை உணர்ந்தவர்களாகவே செயற்படுகின்றனர். இன்னமும் இந்த நாட்டிலே இனவாதம் முற்றாக அணைக்கப்படவில்லை இதனாலேயே அவ்வப்போது அது கொழுந்துவிட்டு எரியச்செய்கின்றது. எங்களிற்கு இணைப்பாட்சி முறையின் கீழான அரசியல் தீர்வு வேண்டும்.  அத்தகைய தீர்வின் ஊடாக சுயாட்சியை பெறமுடியுமாக இருந்தால் எங்களது மரபு வழி தாயகத்தில் எங்களை நாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்படுமேயானால், எங்களுடைய விவகாரங்களை நாங்களே கையாளுகின்ற நிலைமை ஏற்படுமேயானால் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அரசியல் அதிகாரம் இல்லாத நிலையிலே சிங்கள பேரினவாத கட்சிகள் எவையாக இருந்தாலும் ஆட்சிக்கு வரும் போது எங்களது ஆதரவு தேவைப்படுகின்றது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுகின்றனர். எனவே சிங்கள பேரினவாதிகளின் தயவிலோ இரக்கத்திலோ தங்கி நிற்கின்ற நிலைமை நீடிக்க முடியாது என தெரிவித்தார்.