காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

breaking

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 7 ஆவது பற்றாலியனின் கட்டளை அதிகாரியான, லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் என்ற அதிகாரியே நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த லெப்.கேணல் ஏரந்த பீரிஸ், பின்னர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் ஏரந்த பீரிஸ் இன்று கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

2010ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.