ஓமந்தை தொடருந்து விபத்தில் சிக்கிய சிறுமியை சுவீடன் மருத்து குழு அழைத்துச் சென்றது

breaking
ஓமந்தை தொடருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் செல்வதற்காக விசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கார் மீது தொடருந்து மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு வைத்தியர் குழாம் விசேட உலங்குவானூர்தி மூலம் இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர். யாழில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி காலை 10.20 மணியளவில் பாதுகாப்பற்ற ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுவீடன் நாட்டில் இருந்து வருகைதந்தவர் உட்பட நான்கு பெண்கள் மரணமடைந்ததுடன், சுவீடன் நாட்டைச் சேர்ந்த தந்தையும், மகளும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் எஸ்.கமலநாதன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த சிறுமி க.ஜெசிக்கா (வயது 6) மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் அழைத்துச் செல்லப்படுகிறார். சுவீடன் நாட்டில் இருந்து வருகை தந்த விசேட வைத்தியர் குழாம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று பகல் 3.30 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற அவர்கள் சிறுமியை பொறுப்பேற்று சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்ததுடன், அவருக்கான மேலதிக சிகிச்சைகளை வழங்கி அம்பியூலன்ஸ் வண்டி மூலம்  சிறுமியை வவுனியா நகரசபை மைதானத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து விசேட உலங்குவானூர்தி மூலம் கட்டுநாயக்காவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து இந்தியா, சிங்கப்புர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக சிறுமியின் உறவினர்கள் இதன்போது தெரிவித்தனர்.