தமிழர்களிற்கு கதிரையால் கண்டமா?: சம்பந்தருக்கு முன்னாலுள்ள சவால்களும், சிக்கல்களும்!

breaking
  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் யார் என்பதற்கு முன்பாக, அந்த வேட்பாளரை தெரிவு செய்வதில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு உள்ள சவால்கள் மிகப்பெரியவை. இன்றைய திகதியில் சம்பந்தனிற்கு உள்ள மிகப்பெரிய தலையிடிகளில் அதுவும் ஒன்று. தற்போதைய நிலவரப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசாதான். தமிழரசுக்கட்சி அந்த முடிவில் இருக்கிறது. தமிழரசுக்கட்சியின் தீர்மானம்தான் செல்வாக்கு செலுத்தும், வெற்றியளிக்கும் என்றால்- மாவை சேனாதிராசாதான் சந்தேகமில்லாத அடுத்த முதலமைச்சர் வேட்பாளர். ஆனால், இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியவர் இரா.சம்பந்தன். அவரது  முடிவு இன்னும் வெளியாகவில்லை. யாராலும் நாடி பிடித்தும் பார்க்க முடியவில்லை. கூட்டமைப்பிற்குள் எப்படியான அலை வந்தாலும், அதற்கு எதிராக அவரால் துடுப்பு வலித்துக் கொண்டு எதிர்முனையில் பயணம் செய்ய இதுவரை முடிந்துள்ளது. இப்பொழுது தமிழரசுக்கட்சி ஒரு அணியாகவும், ரெலோ மற்றும் புளொட் இன்னொரு அணியாகவும் இருவேறு முடிவுகளுடன் கூட்டமைப்பிற்குள் இருக்கின்றன. மாவையா, விக்னேஸ்வரனா என இரண்டில் எந்த முடிவையெடுத்தாலும் கூட்டமைப்பிற்குள் அவர் ஓரளவு சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். 2013 வட மாகாணசபை தேர்தலின் போதும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது கூட்டமைப்பிற்குள் இருந்த புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியன மாவை சேனாதிராசாவை ஆதரித்தன. அப்போது தமிழரசுக்கட்சி தலைவர் இரா.சம்பந்தன். அதனால் சம்பந்தனின் நிலைப்பாடே தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடாக அறியப்படும். ஆனால் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் பெரும்பாலானவர்கள் மாவையைத்தான் ஆதரித்தார்கள். அப்போது கிட்டத்தட்ட ஒரு பெரும் அலையை எதிர்கொண்டு, தனது முடிவை சம்பந்தன் வெல்ல வைத்தார். அப்போது நடந்த சுவாரஸ்ய சம்பவமொன்றை குறிப்பிட வேண்டும். அடுத்த முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்க கூட்டமைப்பின் கட்சி தலைவர்களை அழைத்து சம்பந்தர் கூட்டம் வைப்பார். எல்லோரும் ஆர்வமாக கருத்து சொல்ல சம்பந்தர் மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார். ஆனால் தனது முடிவை நோக்கி அவர்கள் வரவில்லையென்றதும், கூட்டத்தை முடிவின்றி தள்ளி வைத்து விடுவார். மீண்டும் கூட்டம். அதே சம்பவங்கள்தான். இப்படியே கூட்டங்களை கூட்டிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் களைத்துப் போன தலைவர்கள் சம்பந்தரின் முடிவுடனேயே சமரசமாகி விட்டார்கள் என நகைச்சுவையாக கூறப்படுவதுண்டு. நகைச்சுவைக்கும் அப்பால் சம்பந்தரின் சளைக்காத விடா முயற்சியையும் கவனிக்க வேண்டும். ஆனால் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் ஒப்பிட முடியாது. பின்புலங்களில் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டு விட்டன. முதலாவது- சம்பந்தரின் முடிவு இனி தமிழரசுக்கட்சியின் முடிவாக இருக்காது. தமிழரசுக்கட்சி மாவையை முன்மொழிந்து விட்டது. தமிழரசுக்கட்சியை பிறிதொரு தரப்பாக வைத்தே அவரால் விடயங்களை கையாள முடியும். அப்போது கூட்டமைப்புக்கு வெளியில் பெரிய சவால்கள் இருக்கவில்லை. இன்று அப்படியல்ல, கூட்டமைப்புக்கு வலுவான சவாலை முதலமைச்சர் அணி உருவாக்கலாமென கருதப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி, தேசிய கட்சிகள் என்பவற்றின் வாக்கு வங்கியில் சடுதியான ஏற்றம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் சேதமுள்ளது. 2013இல் கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகளின் அணுகுமுறைக்கும், 2018 இல் அவற்றின் அணுகுமுறைக்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த ஐந்து வருட இடைவெளியில் கூட்டமைப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டமைப்பாக திரண்டதை விட, தனித்தனிக் கட்சிகளாகவே அதிகமாக திரண்டுள்ளனர். இந்த பின்னணியில், முன்னரை போல எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவுகளை எடுக்க முடியாது. கட்சி அரசியலையும் கடந்து, இன அரசியலையும் காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு சம்பந்தனிடம் உள்ளது. அவர் அதை உணர்ந்திருக்கிறார், அந்த பொறுப்பை காப்பாற்ற பாடுபடுவார் என ஊகிக்கும் விதமாகவே அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எந்த அணிக்குள்ளும் அவர் இழுபடாமல் இருப்பது, அவரது நிதானத்தை காட்டுகிறது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என கட்சிகள் பிடுங்குப்பட்டு கொண்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் கவனிக்கப்பட வேண்டிய வேறு பல விசயங்களும், பொறுப்பும் உள்ளது. தமிழ் தேசியம் என ஒரு வார்த்தை பரவலாக புழக்கத்தில் உள்ளது. (தற்போதைய நிலைமையில் அப்படித்தான் குறிப்பிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் சார்பில் சிந்திக்கும், செயற்படும் கட்சிகள், மக்கள் மன்னிக்க) அதன் நிலைப்பட்டு மக்கள் சிந்தித்தார்கள், செயற்பட்டார்கள். ஆனால் யுத்தத்தின் பின்னர் என்றுமில்லாத அளவில் இன்று அந்த கூட்டு சிந்தனை முறைமை சிதைந்து வருகிறது. மஹிந்த ராஜபக்ச, மைத்திரி, ரணிலை கட்சி தலைவர்களாக கொண்டவர்கள் எல்லோரும் அதிதீவிர தமிழ் தேசியவாதிகளாக தம்மை காட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். விடுதலைப்புலிகளின் பாடல்களை ஒலிபரப்புவது, சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது, பிரபாகரனை பற்றி பேசுவது, இருப்பவர்கள் இருந்தால் இப்படியெல்லாம் ஆகுமா என போதைப்பொருளை பற்றி விசனப்படுவது ஆகியவற்றை செய்தால் மட்டுமே போதும், அவர் ஒரு தமிழ் தேசியவாதியாக தன்னை நிறுவிக் கொள்ளலாமென்ற நிலைமை உருவாகிவிட்டது. இதில் ஆகப்பெரிய துயரம், இப்படி தமிழ் தேசியவாதிகளாக தம்மை காண்பித்து கொள்பவர்கள் எல்லோருடனும் போட்டி போட்டு தம்மையும் தேசியவாதிகளாக நிரூபிக்க நிலைமை தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தற்கால தமிழ் தேசியம் பேசும் தமிழ் தரப்புக்களிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பங்களால் தமிழ் தேசிய மையப்புள்ளியில் மக்களை அணிதிரள வைப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வீழ்ச்சி தமிழ் தேசிய அரசியலுக்கு நிச்சயம் பாதிப்பானது. இதை சரி செய்ய வேண்டும். தமிழ் தேசியமென்பது வார்த்தைகளிலும், பாடல்களிலும், வர்ணங்களிலும் மட்டுமே தங்கியதல்ல என்பதை செயலளவில் உணர்த்தி, மக்களை ஒருங்கிணைப்பதில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் தங்கியுள்ளது. இதையெல்லாம் செய்யவல்ல... அபிவிருத்தி, அரசியலுரிமை என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்யும் ஒரு நூதன அணுகுமுறையை கூட்டமைப்பு கண்டடைய வேண்டும். வடக்கு முதல்வர் பதவியென்பது தனியே அபிவிருத்திக்கானது என்றால், மக்கள் 2013இல் அதை கூட்டமைப்பிற்கு கொடுத்திருக்க வேண்டியதில்லை. மஹிந்த- டக்ளஸ் கூட்டணியிடம் கொடுத்திருந்தால், இப்போதிருப்பதை விட அதிக அபிவிருத்தி நடந்திருக்கும். அதேபோல, இன்றைய மாகாணசபையை போல தனியே அரசியலுரிமையை பேசிக்கொண்டிருந்தால், மக்கள் தேசிய கட்சிகளின் பின்னால் செல்வதும் நடக்கும். அபிவிருத்தி, அரசியலுரிமை என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நுணுக்கம் கூட்டமைப்பிடம் கைவரவில்லை. அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு அந்த குறையை சரி செய்ய வேண்டிய தேவையுள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்யும்போது, கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் விதமான தெரிவாக இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டியது சம்பந்தரின் அடுத்த பொறுப்பு. விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக்கினால், தமிழரசுக்கட்சி என்னவிதமான முடிவெடுக்குமென ஓரளவு எதிர்பார்க்கலாம். முதலமைச்சருடன் வெளிப்படையாக மோதலில் ஈடுபட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் தாங்கள் கட்சியை விட்டு ஒதுங்கியிருப்பதென முடிவெடுத்துள்ளனர். வடமாகாணசபையின் மாகாணசபை உறுப்பினர்களும், தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அதை வெளிப்படையாக கட்சிக்குள் பேசியதாக தகவலுள்ளது. தமிழரசுக்கட்சியை ஆட்டம் காணவைக்கும் அப்படியொரு முடிவிற்கு சம்பந்தர் போவாரா என்பது கேள்விக்குறிதான். அதேபோல, மாவை சேனாதிராசாவை ரெலோ, புளொட் உள்ளூர ஆதரிக்கவில்லை. விக்னேஸ்வரனிற்கு சவாலளிக்க கூடிய வெற்றி வேட்பாளர் அல்ல, நிர்வாக ஆளுமையிலும் விக்னேஸ்வரனை மிஞ்சியவர் அல்ல என அந்த கட்சிகள் நினைக்கின்றன. மாவை சேனாதிராசாவா, விக்னேஸ்வரனா என்ற நிலைமை ஏற்பட்டால், அந்த இரண்டு கட்சிகளும் விக்னேஸ்வரனிடமே போவதற்கு வாய்ப்புள்ளது. மாவை சேனாதிராசாவை வேட்பாளராக்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து பங்காளிக்கட்சிகள் வெளியேறும் நிலைமை ஏற்படலாம். தமிழரசுக்கட்சி தனித்து தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். தமிழ் தேசிய நோக்கில் அது மிக மோசமான வீழ்ச்சியாக அமையும். இப்படி தேர்தலை சந்தித்தால் நிச்சயம் எந்த அணியும் தனித்து ஆட்சியை பிடிக்கும் நிலைமை உருவாகாது. ஈ.பி.டி.பி, தேசிய கட்சிகளின் ஆதரவில்லாமல் எந்த அணியும் ஆட்சியமைக்க முடியாது. இந்த இடத்தில் இரண்டு விதமாக யோசிக்க முடியும். முதலாவது- மாவை சேனாதிராசாவையும் வேட்பாளராக்க வேண்டும், கூட்டமைப்பையும் உடைக்க கூடாது என்றால், விக்னேஸ்வரனை வீட்டில் உட்கார வைக்க வேண்டும். விக்னேஸ்வரனை அதற்கு சம்மதிக்க வைக்க சம்பந்தனால் முடியுமா? அவரை உட்கார வைக்க முடியாதென்றால், தமிழரசுக்கட்சியில் சிலர் வீட்டுக்கு போவதை அனுமதிக்கலாமா? அடுத்தது- உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்த போது, ஈ.பி.டி.பி, தேசிய கட்சிகளுடன் வைத்த சகவாசத்தை போல, மாகாணசபையிலும் வைக்கலாமென யோசிக்கலாம். அப்படி யோசித்தால், எதைப்பற்றியும் சிந்திக்காமல் தனித்து களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மாவை, விக்கி என்ற இரண்டு வேட்பாளர்களுமே அடுத்த தேர்தலில் களமிறங்குவதென முடிவெடுத்து விட்டதால், இலகுவில் ஒதுங்குவார்கள் என இனி எதிர்பார்க்க முடியாது. அதனால், மூன்றாவதாக ஒருவரை வெளியிலிருந்து கொண்டு வருவதிலும் இதேயளவு சிக்கல்கள் உள்ளன. மூன்றாவது ஒருவரை வேட்பாளராக்குவதில், தமிழரசுக்கட்சியை சமரசப்படுத்தினாலும், தனித்து செல்லும் விக்னேஸ்வரனை சமரசப்படுத்த முடியுமா என்பது கேள்வியே. அதைவிட, மேலுள்ள சவால்களை சமாளிக்கத்தக்க வேட்பாளர் ஒருவர் கட்சிக்கு வெளியிலும் இருப்பதாக தெரியவில்லை. கட்சிக்கு ஒட்சிசன் கொடுக்கக்கூடிய வேட்பாளர் யாரையாவது  வெளியில் கண்டறிந்த முடிந்தாலும், இந்த நெருக்கடியிலிருந்து தமிழ் தேசியத்தை பிறிதொரு வடிவத்திற்கு நகர்த்தவல்ல புதுமுகமெதுவும் கட்சிக்கு வெளியிலும் இருப்பதாக தெரியவில்லை. விக்னேஸ்வரனா, மாவையா, கட்சியா, இனமா என்ற பெருங்கேள்விகளுடன் அடுத்து வரும் வாரங்களை சம்பந்தர் கழிக்க வேண்டியதாக இருக்கும். யாரை முதலமைச்சர் வேட்பாளராக தீர்மானித்தாலும், கூட்டமைப்பிற்குள் ஒரு சலசலப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. யாராவது ஒரு தரப்பு அரசியலில் இருந்து ஒதுங்கினால்தான் நிலைமையை சமாளிக்கலாமென்பது சம்பந்தனை சங்கடப்படுத்தக் கூடிய நிலைமைதான். 1990இல் முதலாவது வடக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் தனிநாட்டு பிரகடனத்துடன் நாட்டைவிட்டு தப்பியோடினார். 2013 இன் முதலாவது மாகாணசபை முதலமைச்சர் கட்சியை விட்டு வெளியேறி, கூட்டமைப்பிற்குள்ளும் குழப்பங்கள் ஏற்பட்டன. மொத்தத்தில் வடக்கு முதலமைச்சர் கதிரையென்பது, தமிழர்களிற்கு சாபக்கோடோ தெரியவில்லை. எப்படியோ, சாதகமற்ற களச்சூழலில் சம்பந்தன் எடுக்கப் போகும் முடிவிற்காக தமிழ் அரசியல் உலகம் காத்திருக்கிறது.