மாற்றுத் தலைமையொன்றின் தேவையுடன் தமிழ் மக்கள்: சங்கரி கருத்து

breaking
  தமிழ் மக்களுக்கு தன்னலமற்ற மாற்றுத்தலைமை ஒன்று தேவைப்படுவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகமான வீ.ஆனந்தசங்கரியினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதலமைச்சர் சி.வி. விக்ணேஸ்வரனை நான் விமர்சித்ததாக சில ஊடகங்கள் சிங்கள ஊடகமொன்றினை மேற்கோள்காட்டி, வெளியிட்ட செய்தி என்னை வேதனைப்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதாகவே உள்ளது. நானும் முதலமைச்சரும் இதுவரை அரசியல் சம்மந்தமாக எதுவித உரையாடலையும் மேற்கொள்ளவில்லை. அவரின் செயற்பாடுகளை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விமர்சித்ததுமில்லை. இருந்தும் அவர் அரசியலுக்கு வந்தவுடன் நான் அவரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்கு அவரும் பதில் அனுப்பியிருந்தார். இவை அனைத்தும் அந்த நேரத்தில் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இப்படி நான் அவர்மீது நம்பிக்கை வைத்திருக்கும் போது, எப்படி என்னால் அவர் அரசியலுக்கு பொருத்தமற்றவர் என்ற கருத்தை வெளியிட முடியும்? இது ஒரு திட்டமிடப்பட்ட சதி என்றே நான் கருதுகின்றேன். இப்போது வடக்கு கிழக்கிலுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு தன்னலமற்ற மாற்றுத்தலைமை ஒன்று தேவைப்படுகின்றது. அதன் காரணமாக ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் ஒருசிலர் திட்டமிட்டு செயற்படுவதாகவே நான் எண்ணுகின்றேன். எது எப்படியோ நானும், அவரும் சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். ஒருவர் மீது ஒருவர் மதிப்பாகவும், அன்பாகவும் பழகி வருகின்றோம். இந்த நிலையில் என்னைப்பற்றி அவரோ, அவரைப்பற்றி நானோ எதுவிதமான அரசியல் கருத்துக்களையும் கூறுவதில்லை. எனவே, தயவு செய்து இவ்வாறான செய்திகளை வெளியிடும் போது, சம்மந்தப்பட்டவர்களிடம் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொண்டு, வெளியிடுமாறு ஊடகங்களிடம் அன்பாக வேண்டுகின்றேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.