பிரதேச செயலகம் அனுமதித்தும் மீள் குடியேற்றத்தை தடுக்கும் வனவள பாதுகாப்புப்பிரிவு

breaking
  வவுனியா நெடுங்கேணி பிரதேச செலயகப் பிரிவில் உள்ள காஞ்சூரமோட்டை கிராமத்தைச் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள்குடியேறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பியுள்ள இந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் உரிய அனுமதியை வழங்கியுள்ள போதிலும், வனவளத்துறை அதிகாரிகள் அதற்குத் தடை விதித்துள்ளதாகவும் சுட்டிக்கட்டியுள்ளனர். இது குறித்து வனவளத்துறை அதிகாரிகள், காஞ்சூரமோட்டை கிராமத்தில் அத்துமீறி குடியேறுவதற்கு அனுமதிக்க முடியாது. அங்குள்ள காணிகளுக்கு உரிமை கோருபவர்கள் அதற்குரிய காணி அனுமதிப்பத்திரங்களின்றி அங்கு குடியேறுவது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளனர். குறித்த குடும்பங்கள் 1986 ஆம் ஆண்டளவில் இடம்பெயர்ந்து தமிழகத்திலும் நாட்டின் வேறு பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்தனர். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சொந்தக் காணிகளுக்குத் திரும்பியுள்ள 37 குடும்பங்களுக்கே மீள்குடியேற்றத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.