அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து முக்கிய பேச்சு

breaking

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று மாலை முக்கிய பேச்சு நடத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கும் இடையில் இந்தப் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது போன்று, தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று, இரா.சம்பந்தன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

தற்போது நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், இதுபற்றி ஆராயப்படும் என்று சிறிலங்கா பிரதமர் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் 9 தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நடவடிக்கைகளை எடுப்பதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உறுதி வழங்கினார்.

போர்க்காலத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டதாகவும், எனினும் தற்போது தடுத்து வைக்கப்பட்டவர்கள் பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களை விடுதலை செய்வது கடினம் என்றும் சட்டமா அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார்.