அரசாங்கமும் இராணுவமும் தவறிழைக்காவிட்டால் ஏன் உங்களுக்கு பயம்?

breaking

இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தவறிழைக்காவிட்டால், சர்வதேச பொறிமுறையை அனுமதிக்க எதற்காக மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றியிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடுகள் அவசியமில்லையென்றும், உள்நாட்டிற்குள்ளேயே தீர்த்துக்கொள்ள இடமளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இலங்கை ஜனாதிபதியின் இந்தக் கருத்து தொடர்பாக கருத்துத் தெரிவித்த மயூரன் மேற்குறித்தவாறு வினா எழுப்பியுள்ளார்.

இழப்பின் வலியை உணர்ந்த மக்களுக்கு உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையற்றுப் போயுள்ளது. அதன் காரணமாகவே சர்வதேசத்தை நாடி நிற்கின்றார்கள் எனக் குறிப்பிட்ட மயூரன், இழப்புக்கான நீதியை சர்வதேசமே பெற்றுத்தர முடியுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அதிகாரங்களையும் அமைச்சுக்களையும் தக்கவைத்துக்கொள்வதற்காக அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை செய்யக்கூடாதென்றும் மயூரன் கேட்டுக்கொண்டார்.