தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

breaking

வழக்குகளை துரிதப்படுத்தக்கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலி முகத்திடல் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுவருகிறது.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய மாணவர்கள் இணைந்து இன்று (வியாழக்கிழமை) இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இப்போராட்டத்தில் பிக்கு மாணவர்கள் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

தற்போது ஜனாதிபதி செயலகத்தை இப்போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், அங்கு கலகம் அடக்கும் பொலிஸாருடன் நீர் பாய்ச்சும் இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது விடுதலையை வலியுறுத்தி, அநுராதபுரம் சிறைச்சாலையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் 14ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இலங்கையின் பல பக்கங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.