பணமோசடி தொடர்பில் ஆராயும் பொறுப்பு வடமாகாண அவைத்தலைவரிடம்.!

breaking
வட தமிழீழம் யாழ். மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசம் மற்றும் கிளிநொச்சி பனை, தென்னைவள கூட்டுறவு சங்கம், விசுவமடு ப.நோ.கூ சங்கம் ஆகியவற்றில் இடம்பெற்ற 1 கோடிக்கும் மேற்பட்ட பணமோசடி தொடர்பில் ஆராயும் பொறுப்பு அவை தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 132வது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்படத்தில் இடம் பெற்றிருந்தது. இதன்போது யாழ்.மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத்தினால் மேற்கொள்ளப்பட்ட சீமெந்து விநியோகத்தில் இடம்பெற்ற 1 கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணமோசடி தொடர்பாக அறிக்கை ஒன்றிணை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபைக்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக சபையில் பேசப்படுகையில் சிங்கள அரசின் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா இந்த மோசடி சம்பவத்திற்கு கூட்டுறவுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சரும், அமைச்சர் சபையும் பொறுப்பேற்கவேண்டும் எனவும், மாகாணசபையின் விசாரணை குழு ஆராய்ந்தபோது 27 லட்சமாக இருந்த மோசடி அதற்கு பின்னர் 1 கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது என்றால் அது அமைச்சருடையதும், அமைச்சர் சபையுடையதும் பிழையாகும் என கூறியிருந்தார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் குறிப்பிடுகையில் ஏர் பிடிக்கிறவன் சொறிஞ்சால் எருது மச்சான் கொண்டாடும். என ஒரு பழிமொழி உள்ளது. அந்த பழ மொழிக்கு ஒப்பான சம்பவமே இந்த சீமெந்து விநியோகத்தில் இடம்பெற்றிருக்கும் மோசடியாகும் என கூறியதுடன் அவை தலைவர் பெயர் குறிப்பிட்டு ஒரு அதிகாரியை நியமித்து அதனடிப்படையில் அவை தலைவர் தொடர் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை மற்றும் எஸ்.புவனேஸ்வரன் ஆகியோர் இந்த மோசடி சம்பவத்துடன் சேர்த்து விசுவமடு ப.நோ.கூ சங்கத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பாகவும், கிளிநொச்சி பனை, தென்னை வள கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும் கூட ஆராயப்படவேண்டும் என கேட்டிருந்தனர். இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில் இந்த விடயம் தொடர்பாக அவை தலைவர் பெயர் குறிப்பிட்டு ஒரு விசாரணை அதிகாரியை நியமிப்பதுடன் அதனடிப்படையில் தொடர் நடவடிக்கையினையும் அவர் எடுக்கவேண்டும் என கூறி தனது கருத்தை பிரேரணையாக முன்மொழிந்தார். அதனை ப.அரியரட்ணம் வழிமொழிந்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.