ஐநா பேரவை கூட்டத்தில் உலக தலைவர்கள் சிரித்தார்களா?

breaking
ஐநா பொது சபை கூட்டத்தில் உலக தலைவர்கள் தன்னை பார்த்து சிரித்ததாக கூறுவது தவறான தகவல் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த செவ்வாய்கிழமை  ஐநா சபையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டு பிரதமர்கள், அதிபர்கள் கலந்துகொண்டனர். அப்போது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். தன்னுடைய  2 ஆண்டுக்கால ஆட்சிக்காலத்தில் பெரும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற உலகத்தலைவர்கள் ‘கொல்’ என்று சிரித்ததாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பான  வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி: ஐநாவில் நான் பேசியபோது, பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள், உயரதிகாரிகள் என்னை பார்த்து சிரிக்கவில்லை. என்னுடன் சேர்ந்து சிரித்தார்கள். அவர்களது கவனத்தை ஈர்க்கவே நான் அவ்வாறு பேசினேன். கடந்த 2  ஆண்டு கால அமெரிக்க ஆட்சியில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  பங்கு சந்தை முன்னெப்போதையும் விட அதிகபட்ச உயரத்தை தொட்டுள்ளது. 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லையின் பாதுகாப்பு  கருதி சுவர்கள் கட்டும்பணி தொடங்கியுள்ளது. முன் எப்போதையும் விட நமது ராணுவம் மிக சக்திவாய்ந்ததாக மாறியுள்ளது. இவ்வாறு டிரம்ப் பேசினார்.