Take a fresh look at your lifestyle.

குருந்தூர் மலை விவகாரம்: நீதி மன்றிடம் வாங்கிக் கட்டிய தொல்லியல் திணைக்களம்

வடதமிழீழம், குருந்தூர் மலையில் ஆய்வு செய்ய பௌத்த பிக்குகளுக்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியமை அதிகார துஸ்பிரயோகமாகும் இனி இவ்வாறான நடவடிக்கையில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட கூடாது என முல்லைத்தீவு எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் தமிழ் மக்கள் குறித்த மலையில் வழிபாடுகளை நடாத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது; தொல்லியல் திணைக்களம் தான் பிக்குகளை குருந்தூர் மலையில் ஆய்வு செய்வதற்கு அனுப்பியதாக தொல்லியல் திணைக்களம் சார்பில் ஆயராகிய சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதன் போது கிராம மக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.புவிதரன் தலைமையில் ஆயராகிய சட்டத்தரணிகள்,
குருந்தூர் மலைப்பகுதியினை அண்மித்த பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகள் அனைத்தும் 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டதற்கான பத்திரங்கள் வைத்துள்ளார்கள். அவர்களின் காணிகளையும் தொல்பொருள் திணைக்களம் எல்லைப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் அங்கு தமிழர்கள்தான் பாரம்பரியமாக வாழ்ந்து வந்தார்கள் என்றும் அந்த மலையில் சிவன் மற்றும் ஜயனார் ஆலயங்கள் வைத்து பலநூறு ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

அந்தவகையில் அங்கு தொல்பொருள் திணைக்களம் குறிப்பிடுவது போன்று பௌத்த விகாரை அமைந்திருந்தமை தொடர்பில் அதனை கண்டு பிடிக்க வேண்டும் என்பதாக இருந்தால் அதனை தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ளலாம் அதற்கு பௌத்த மதகுருமார்கள் அங்கு சென்று ஆய்வு செய்ய என்ன தகமை உண்டு இந்த அதிகாரம் அவர்களுக்கு யார் வழங்கியது இவ்வாறு செயற்பாட்டு தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்வது தவறாகும் என தமிழ் மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் அனைவரும் தமது வாதத்தினை முன்வைத்தார்கள்.
இன்னிலையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் எவ்வாறு பௌத்த மதகுருமார்களை தொல்பொருள் திணைக்கள ஆய்விற்கு பயன்படுத்துவீர்கள்? என மன்று கேட்ட போது தொல்பொருள் திணைக்களத்திடம் நிதி பற்றாக்குறை காரணத்தால் குறித்த விகாரை தொடர்பில் ஆய்வு பணியினை பௌத்த குருமார்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கு பதில் வழங்கிய மன்று பௌத்த மதகுருமார்களுக்கு இந்த ஆய்வினை நடத்தும் அதிகாரம் யார் வழங்கியது என்றும் அவர்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள என்ன தகைமை உண்டு இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் தமது அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்முடியாது என மன்று எச்சரிக்கை செய்துள்ளது.

இந்த ஆய்வு பணியில் எவ்வாறு பௌத்த மாதகுருமார்களை தொல்பொருள் திணைக்களம் ஈடுபடுத்தியுள்ளது என்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான விளக்கத்தினை அடுத்த வழக்கில் தொல்பொருள் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ஆயராகி மன்றில் தெரிவிக்குமாறு தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கு நீதிமன்றால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்த வழக்கு எதிர்வரும் 22.10.2018 ஆம் திகதிக்கு தவனையிடப்பட்டுள்ளது.