Take a fresh look at your lifestyle.

மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையால் கடிதங்கள் அனுப்பிவைப்பு

மகாவலி தொடர்பிலான அரசின் கொள்கைத்தீர்மானத்திற்கு பாராளுமன்றிலும் வெளியிலும் காத்திரமான அழுத்தங்களை பிரயோகிக்கக் கோரி இலங்கை பாராளுமன்றத்ஹில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினரால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கபட்டுள்ளது .

எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பி வைக்கபட்டுள்ளது.

கடிதம் அனுப்பி வைக்கபட்டுள்ளது.

மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையை சேர்ந்த இணைத்தலைவர்களான வணபிதா லியோஆம்ஸ்றோங் வி. நவநீதன் கை.சுதர்சன் ஆகியோர் இணைந்து இந்த கடித்ததை அனுப்பி வைத்துள்ளனர்.

அனுப்பி வைக்கபட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடபட்டுள்ளதாவது,

மகாவலியை அபிவிருத்திதிட்டம் வடக்கு மாகாணத்திற்கு தேவை இல்லை என்பதையும் அத்திட்டம் தொடர்பான அதற்கு பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி திட்டம் பற்றியும் மகாவலி எதிர்ப்பு மரபுரிமை பேரவை தமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் மிக ஆணித்தரமாக தெரிவித்துவந்துள்ளது.

கடந்த 28.08.2018 அன்று ஏறக்குறைய 5000 ற்கு மேற்பட்ட மக்கள் திரண்டெழுந்து தங்களுடைய எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிக்காட்டி இருக்கின்றனர்.

வட தமிழீழம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ஊடாக மகாவலி எதிர்ப்பு மரபுரிமை பேரவை 06 கோரிக்கைகளை முன் வைத்து மகஜர் ஒன்றையும் ஜனாதிபதி அவர்களுக்கு கையளித்திருந்தது. அக்கடிதத்திற்கு எந்த வித எழுத்து மூல பதிலும் கிடைக்காத நிலையிலும் இத்திட்டம் தொடர்பான கொள்கை தீர்மானம் எடுக்கும் இத்தருணத்திலும் மக்களின் பிரதிநிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள் மக்களின் கண்டனத்தையும் அதற்கான காரணத்தையும் பாராளுமன்றத்திலும் அமைச்சர்களின் கூட்டத்திலும் மகாவலி அதிகார சபை மட்டத்திலும் தெரிவித்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

கீழ்வரும் கோரிக்கைகள் கண்டன பேரணியில் முன்வைக்கப்பட்டது.

  1. வடமாகாண எல்லைக்குட்பட்ட மகாவலி அதிகாரசபை நிகழச்சிதிட்டங்கள் யாவும் நிறுத்தப்படவேண்டும்.
  2. கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் அத்துமீறிகுடியேறிய சிங்கள மீனவர்களின் நில அனுமதிப்பத்திரம் மீளப் பெறப்படவேண்டும்.
  3. 1984ம்;ஆண்டு இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக வெளியேற்றப்பட்ட2000 ஏக்கர்; காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டும்.
  4. தொல்லியல் திணைக்களத்தால் தமிழர் இருப்பு,மரபுசார் இடங்கள் அபரிக்கப்படுதலும், சாட்சியங்கள் திரிவுக்குட்படுதலும் உடனே நிறுத்தப்படவேண்டும்.
  5. வடக்கு,கிழக்கு நிலத்தை சிங்கள குடியேற்றங்களுக்கு ஊடாக துண்டாடும் முயற்சிகள் நிறுத்தப்படவேண்டும்.
  6. நாயாறு,நந்திக்கடல் கடல்நீரேரிகளில் தங்கி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

மகாவலி அதிகார சபை சட்டம் 1979ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான முன் ஆயத்தம்1979ற்கு முன்னரே தொடங்கப்பட்டது என்பதை சொல்லி விளங்க வேண்டியதில்லை.

மகாவலி கங்கையை மையப்படுத்தி வரட்சியான விவசாய நிலங்களுக்கு நீர் வழங்குவதற்காக ஐ.நா மற்றும் வெளிநாட்டுநிதி உதவியின் மூலம் உருவாக்கப்பட்டு தென்னிலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு காலப்போக்கில் தமிழர் பூர்வீகநிலமான மணலாற்று பகுதியில் முந்திரிகைக்குளம், ஆமையன்குளம், சூரியனாறு, கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுகேணி நிலங்களிலிருந்து மக்களை விரட்டிவிட்டு இனப்படுகொலையாளி ஜெ .ஆர்  .ஜெயவர்த்தனா அரசால் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர்.

இவ்வாறு மகாவலி அபிவிருத்திதிட்டம் தனது கால்களை தமிழர் நிலங்களுக்குள் பரப்பிக்கொண்டதுடன், இப் பிரதேசங்களில் தமிழர் மரபுரிமையின் எச்சங்களையும் சிதைக்கும் விதமாக இக் கிராமங்களின் தூய தமிழ் பெயர்கள் சிங்கள் பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன உதாரணமாக முந்திரிகை குளம் ‘நெலும்வவ’ எனவும், ஆமையன்குளம் ‘கிரிபென்வௌ’ எனவும் மண்கிண்டிமலை ‘பன்சல்கந்த’ எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மணலாற்றில் ஏற்கனவே தமிழர் நிலங்கள் பறிக்கப்பட்ட நிலையில் தற்போது இவ் ஆக்கிரமிப்புத்திட்டமானது தமிழர் பூமியான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி,

நாயாறு ஆகிய பிரதேசங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  இவ்  ஆலய நிர்வாகம் முல்லைத்தீவு நகர எல்லைகளையும் தொட்டு நிற்கின்றது. மகாவலி அதிகார சபை ஏற்கனவே 2000 ஏக்கர் தமிழர் காணிகள் உள்ளடங்கலாக 6000 ஏக்கர் காணிகள் இப் பிரதேசத்தில் சிங்கள குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது.

இது வரைக்கும்   மகாவலி அபிவிருத்திதிட்டத்தினால் தமிழர்களுக்கு ஒரு தமிழ் மகன் கூட பலன் அடைந்ததாக இல்லை. இது வரைக்கும் அநுராதபுர மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட மகாவலி நீர் அங்குள்ள விவசாயநிலங்களுக்கே போதாத நிலையில் வடக்கு மாகாணத்தில் மகாவலி டு வலய அபிவிருத்தி முயற்சிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவது பல சந்தேகங்களை எழுப்புகின்றது. இப் பூர்வீக தமிழ் கிராமங்களில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்களுக்கு அண்மையில் மகாவலி அதிகார சபை காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ளது.

அரச காணியில் அடாத்தாக குடியேற்றப்பட்ட இவர்கள் நீதிமன்ற ஆணையின் மூலம்; வெளியேறுமாறு கட்டளையிடப்பட்ட நிலையிலும் அந்நீதிமன்ற ஆணையை மீறி மகாவலி அதிகாரசபை அந்நபர்களுக்கு காணி அனுமதி;ப்பத்திரத்தை வழங்குவதானது மகாவலி அதிகாரசபையின் மீஉயர் அதிகாரங்களை அம்பலப்படுத்துகின்றது. இது ஒட்டு மொத்த நீதிதுறையின் அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளதோடு சட்டபூர்வமற்ற காணி அபகரிப்பை சட்டபூர்வமாக்கியுள்ளது.
மகாவலி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ள மீஉயர் அதிகாரங்கள் ஏற்கனவே உள்ள அரச கட்டமைப்பின் நிர்வாக அலகுகளின் அதிகார மைய செயற்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

குறிப்பாக இவ் அதிகாரசபைக்கு காணி மீது கொடுக்கப்பட்டுள்ள மீஉயர் அதிகாரங்கள் இதை ஒரு ‘அதி உன்னத கட்டமைப்பாக அல்லது அலகாக’ (SUPER STRUCTURE) சுட்டிநிற்கின்றது.

மகாவலிக்கு பொறுப்பான இனப்படுகொலை அரசின் அமைச்சர் ஜனாதிபதியின் அனுமதியோடு நாட்டின் எப் பிரதேசத்தையும் மகாவலி விசேட அபிவிருத்தி வலயமாக பிரகடப்படுத்துவதற்கும் காணிகளை சுவீகரிப்பதற்கும் கட்டற்ற அதிகாரங்களை வழங்குவதன் ஊடாக மகாவலிச் சட்டம் ஏனைய சட்ட நடைமுறைகளை கேள்விக்கு உட்படுத்துவததோடு தான்தோன்றி தனமான ஆக்கிரமிப்பு செயற்பாடுகளுக்கும் துணைபோகின்றது.

இவ் அதிகார சபை அரசகாணி தொடர்பில் எந்தவொரு உள்ளூர் கட்டமைப்பிடமூம் ஆலோசனை கேட்கவோ அனுமதி பெறவோதேவை இல்லை. இதுதற்போது ஜனாதிபதிக்கு மட்டுமே பொறுப்புக் கூற வேண்டியுள்ளது.

13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு மாகாணசபை எல்லைக்குட்பட்ட அரசகாணிகள் தொடர்பில் மத்திய அரசு,மாகாண அமைச்சை கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் மகாவலி அதிகார சபை அவ்வாறு கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதன் ஊடாக வடக்கு கிழக்கை துண்டாடுவதன் மூலம் தமிழர் தாயக பூமியான வடக்கு, கிழக்கு தமிழரிடமிருந்து பறிபோவதுடன் தமிழரின் அரசியல் கோரிக்கையான வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதற்கான அலகுகள் திட்டமிடப்பட்டு இல்லாதொழிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் குளங்களை மையப்படுத்தி மேற்கொண்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தான் செய்யவேண்டு மென்றில்லை, அவ் அபிவிருத்திதிட்டங்கள் மாகாண நீர்ப்பாசன அமைச்சுக் கூடாக மேற்கொள்ளப்படலாம். மகாவலி L வலயம் தவிர்ந்த K,J வலயங்கள் வடமாகாணத்தில் அறிமுகப்படவுள்ளன. K வலயம் கனகராயன் குளத்தைமையப்படுத்தியும் J வலயம் பறங்கி ஆறு, பாலி ஆற்றைமையப்படுத்தியும் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலே கூறப்பட்டுள்ளது போல இவ்வலய அபிவிருத்திக்கு உட்பட்ட பிரதேசங்களில் எந்தவொரு உள்ளூர், அரச, மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட கட்டமைப்புக்களின் காணி அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசு தமிழரின் குடிப்பரம்பலை மாற்றியமைப்பதற்காக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை இவ் அபிவிருத்திதிட்டத்தினூடாக முன்னெடுக்கின்றது. இது தமிழரின் இருப்பை கேள்விக்குரியதாக்குகின்றது. இது தொடர்பில் மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள் நீதி மன்ற ஆலோசனைக்கு அமைவாக அரசினால் மேற்கொள்ளப்படவுள்ள மகாவலி தொடர்பான கொள்கை தீர்மானம் எடுத்தலில் செல்வாக்கு செலத்த கூடிய காத்திரமான அழுத்தத்தை அரசுக்கு வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

என அக்கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது .

முக்கிய குறிப்பு:

%d bloggers like this: