டெனீஸ்வரனின் அமைச்சின் கதிரை வழங்களில் முறைகேடு! இரண்டு மடங்காக திருப்பிப் கொடுப்பாரா அமைச்சர்.

breaking
  வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. விவசாய அமைச்சராக இருந்த பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சராக இருந்த த.குருகுலராஜா ஆகியோர் பதவியை விட்டு விலகினார்கள். ஆனால் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீதான முறைப்பாட்டாளர்கள் விசாரணைக்கு வரவில்லையென்பதும் இதற்கு ஒரு காரணம். ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் ஆகியோர் தம் மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். தான் முறைகேடுகளில் ஈடுபடவில்லை எனவும் முடிந்தால் நிரூபித்து காட்டுமாறும் சவால் விடுத்துள்ளதுடன், நிரூபித்தால் முறைகேடு இடம்பெற்ற பணத்தின் இரண்டு மடங்கு பணத்தை மீள செலுத்துவதாகவும் அப்போது சொல்லியிருக்கிறார் டெனீஸ்வரன். இந்த நிலையில் பா.டெனிஸ்வரனின் பொறுப்பில் கீழான அமைச்சின் கீழ் நடந்த முறைகேடு ஒன்று பற்றிய ஆதாரம் சிக்கியுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் வடமாகாண போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற பா.டெனீஸ்வரன் அந்த அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருந்தார். குறிப்பாக கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மாகாண சபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கழங்கள், சமூக அமைப்புக்களுக்கு கதிரைகள் வழங்கப்பட்டன. மாகாண சபை உறுப்பினர் தனது நிதியில் உதவி செய்வதற்கு தெரிவு செய்ய அமைப்பின் பெயரையும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது ஒதுக்கும் கதிரைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு வழங்க பா.டெனீஸ்வரனின் கீழ் உள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக அந்த அமைப்புக்களுக்கான கதிரைகள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அமைச்சின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர் வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர். குறித்த அமைச்சின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கதிரைகளில் கதிரை ஒன்றின் விலை ஆயிரம் ரூபாய் வீதம் மகாணசபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அறவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அமைச்சினால் வழங்கப்பட்ட குறித்த கதிரை ஒன்றுக்கான சாதாரண சில்லறை விலை வெறும் 590 ரூபாய் மட்டுமே. அப்படி இருக்கையில் ஒரு கதிரைக்கு 410 ரூபாய் வீதம் மாகாண சபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து அதிகமாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அவர்களால் வழங்கப்பட்ட கதிரைகளில் சில குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே உடைந்திருந்த போதும் பல கதிரைகள் இன்றும் சாட்சியங்களாக இருக்கின்றன. அத்துடன் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் நூற்றுக்கணக்கான கதிரைகளை கொள்வனவும் செய்தும் இருந்தனர். சாதாரணமாக 12, 15 கதிரைகளை கொள்வனவு செய்கின்ற போதே ஒரு கதிரை அல்லது ஒரு சிறிய மேசை இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் இவ்வாறு வழங்கப்பட்ட கதிரைகள் எவற்றுக்கும் அவை வழங்கப்படவில்லை. வடமாகாண சபையில் செலவு செய்யப்படும் பணம் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அவை வீண் விரயம் செய்யப்படக் கூடாது. இங்கு அவர்களால் வழங்கப்பட்ட குறித்த கதிரைகள் குறைந்த விலையில் இருக்கும் போது அதே கதிரைகளை எவ்வாறு அதிக விலைக்கு வழங்க முடியும்? அப்படியாயின் அங்கு இடம்பெற்றது முறைகேடு தானே. வடமாகாணத்தின் ஏனைய அமைச்சுக்களின் கீழ் சில உறுப்பினர்களுக்கு குறித்த கதிரைகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டும் உள்ளன. ஆனால் கிராமிய அபிவிருத்தி அமைச்சில் மட்டும் கதிரைக்கான அதிக கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2016 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகாராசா மாகாணசபையில் பேச இருந்த சமயத்தில், அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவரை சமரசம் செய்து தடுத்து நிறுத்தியுள்ளார். குறித்த முறைகேடு தொடர்பில் அமைச்சருக்கும், குறித்த திணைக்களத்திற்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் 2016, 2017 ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் குறித்த அமைச்சினால் வழங்கப்பட்ட கதிரைகளுக்கான விலைகள் குறைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியாயின் முதல் நடந்த வீண்விரயத்திற்கு யார் பொறுப்பு? அது ஊழல் இல்லையா? அதற்கு நடவடிக்கை என்ன? குறித்த அமைச்சின் கீழ் கிராம மட்ட அமைப்புக்களுக்கு கதிரைகள் வழங்கிய போது 2015 ஆம் ஆண்டு முறைகேடுகள் இடம்பெற்றிருக்கிறது. இதனால் பல மாகாணசபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த உறுப்பினர்களால் மக்களுக்காக வழங்கப்பட்ட நிதி முழுமையாக மக்களை சென்றடையாது இடையில் ஆட்டையைப் போட்டுள்ளார்கள். இதற்கு காரணமானவர்களை கண்டறிய வேண்டும். இதேவேளை, தமது நிதியில் அதிக விலைக்கு கதிரைகள் வாங்கப்பட்டுள்ளதென்பதை சம்பந்தப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த உறுப்பினர்கள் விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்காமைக்கு காரணம் என்ன? முறைகேட்டை மௌனமாக பார்த்திருப்பதும் கண்டனத்திற்குரியதே. மக்களது நிதியை மீள மக்களுக்கு வழங்க இவர்கள் முன்வர வேண்டும். இவர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் குறித்த 2015 ஆம் ஆண்டு கிராமிய அமைச்சின் ஊடாக கதிரைகளைப் பெற்ற அனைத்து மாகாண சபை உறுப்பினர்களின் நிதிக்கும் இந்த கதிதான் நடந்திருக்கிறது. வடக்கு கிராமிய அபிவிருத்தி அமைச்சருக்கு இந்த முறைகேடு தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை இனிமேல் வராமல் தான் பார்த்து கொள்வதாக முறைப்பாட்டாளர்களை போக்குவரத்து அமைச்சர் சமரசம் செய்துள்ளார். இந்த விவகாரத்தை வெளிக்கொணர விடாமல் அமைச்சர் எதற்காக சமரசம் செய்தார்? இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று உண்மை வெளிக் கொணரப்பட வேண்டும். அமைச்சர் இதில் தொடர்புபட்டாரா அல்லது அதிகாரிகள் தொடர்புபட்டார்களா என்பது கண்டறியப்பட வேண்டும். தன் மீதான மோசடி நிரூபிக்கப்பட்டால் இரண்டு மடங்கு பணத்தை தருவதாக போக்குவரத்து அமைச்சர் கூறியிருக்கிறார். தனது அமைச்சின் கீழ் நடந்த ஒன்றிற்கு அவர் பொறுப்பாளி இல்லையா? அமைச்சர் கூறியதைச் செய்வாரோ பொறுத்திருந்து பார்ப்போம்!