துண்டுப் பிரசுரங்களுடன் யாழில் விழிப்புணர்வூட்டும் ஜே.வி.பி

breaking
  பொருட்களின் விலையேற்றம் மற்றும் சமகால அரசியல் நிலை தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மக்கள் விடுதலை முன்னணி யாழ். நகரில் இன்று காலை துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா, யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். கடந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்தவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை, தலைவர் பதவிகளை வழங்கினர். யுத்தத்தின் போது இளைஞர்களை செயற்படுத்தியவர்களுடன் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றனர். வழக்குத் தாக்கல் செய்யாது அமைச்சுப்பதவிகளை வழங்க அரசாங்கத்திற்கு முடியும் எனின், அவர்களின் வேண்டுகோளினால் சாதாரண விடயங்களுடன் தொடர்புடையவர்களை விரைவில் சமூகமயப்படுத்த வேண்டும். நீண்ட காலமாக இந்த இளைஞர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அதனை சிந்தித்து சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விரைவில் சமூகமயப்படுத்தி, சுதந்திரமாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என நாம் எண்ணுகின்றோம். என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறி 3 வருடங்கள் கடந்த நிலையில், தொடர்ச்சியாக மக்கள் மீதான வரிச்சுமை, விலையேற்றம் போன்றவற்றால் மக்களை வதைக்கின்ற அரசாங்கமாக மாறியிருக்கின்றது. இவர்கள் மக்கள் நலனுக்காக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக தாங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக்கொள்கின்ற போக்கையே முன்னெடுத்து வருகின்றார்கள். இவர்களுக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி உண்மையான மக்கள் எதிர்ப்பை வௌிப்படுத்துகின்ற வகையில், கொழும்பு நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம். என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிட்டார். இதேவேளை, யாழ். நகரில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன