பிக்குவை கைதுசெய்யுங்கள் - த .தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

breaking
தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்க முற்பட்ட மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பிக்குவை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் சிங்கள காவல்துறை  அதிகாரிகளையும் தொடர்புகொண்டு முறையிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மயிலம்பாவெளியில் குழப்பத்தை ஏற்படுத்திய அம்பிட்டியே தேரர், தங்களை விடுதலைப் புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்த புல்லமலைக்கே செல்லுமாறு எச்சரித்ததாக மீளக்குடியேறிய மக்கள் தெரிவித்திருக்கின்றனர். தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதேசத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றுக்குள் நின்றிருந்த அரசமரமொன்றின் கிளைகளை உரிய அனுமதியுடன் காணியின் உரிமையாளர் வெட்டியதால் நேற்றைய தினம் அங்கு முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டது. குறித்த காணி உட்பட அங்குள்ள பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தி இராணுவ முகாமொன்றை அமைத்திருந்த இராணுவத்தினர் 30 வருடங்களுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறிய நிலையிலேயே மயிலாம்பாவெளி மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் குடியமர்ந்துள்ளனர். எனினும் சிங்கள அடக்குமுறை  இராணுவத்தினர் முகாம் அமைத்திருந்த போது குறித்த முகாமில் அரச மரமொன்றையும் நட்டு, அதற்கு அருகில் சிறிய புத்தர் கோயிலொன்றையும் அமைத்துச் சென்றுள்ளனர். இராணுவத்தினரால் நடப்பட்ட அரச மரம் தற்போது விசாலமான விருட்சமாக வளர்ந்துள்ள நிலையில், அதன் கிளைகளை மீளக்குடியேறிய மக்கள் உரிய அனுமதியுடன் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனை அறிந்த மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பிக்கு அம்பிடியே சுமனரத்ன தேரர் அங்கு சென்று அரச மர கிளைகளை வெட்ட எவருக்கும் அனுமதி இல்லை என்று கோசமிட்டதுடன், பௌத்தர்களின் புனித மரம் என்று கூறி குழப்பம் விளைவித்துள்ளார். பின்னர் அனுமதி வழங்கிய ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணத்தை வரவழைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன் தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளார். எனினும் அங்கு நின்றிருந்த சிங்கள காவல்துறை பிரதேச செயலாளரை தாக்க விடாது தடுத்துள்ளனர். ஆனால் தமிழரான ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் சிங்கள பௌத்தர்களின் உரிமைகளை அழிக்க முற்படுவதாக இனவாதத்தை தூண்டும் வகையில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி திட்டித் தீர்த்த மங்களாராமய விகாரையின் தலைமை பிக்கு, அவரை அரச பதவியில் இருந்தே நீக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோசமிட்டார். இதன்போது இந்தியாவில் இருந்தோ சிங்கப்பூரில் இருந்தோ கொண்டுவந்த காணிகள் இங்கில்லை என்றும் குறிப்பிட்டுள்ள அம்பிட்டியே சுமனரத்தின தேரர், இது சிங்கள பௌத்த நாட்டின் காணிகள் என்றும் கூறியவாறு கோசமிட்டுள்ளார். இதனால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையோரமாக ஏறாவூர்  பிரிவிலுள்ள மைலம்பாவெளியில் பெரும் பதற்றம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில்   முறுகல் நிலை ஏற்படாதிருக்க அரச மரக்கிளைகள் வெட்டுவதை தற்காலிகமாக நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கமைய அரச மரக் கிளைகள் வெட்டும் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு குறித்த இடத்தில் சிங்கள காவல்துறை அணியொன்றும் பாதுகாப்புக் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் மங்களாராமய விகாரையின் தலைமை பிக்குவின் முறைப்பாட்டை அடுத்து உரிய அனுமதியுடன் அரச மரக் கிளைகளை அகற்றியதற்காக தாங்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறினார். பூர்வீக இடங்களில் மீளக்குடியேறிய இந்த மக்களை வெளியேறுமாறும் அச்சுறுத்தியுள்ள அம்பிட்டியே சுமனரத்ன தேரர், அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டையா விளங்கிய புல்லுமலைக்கு சென்று வாழுமாறும் பணித்ததாக மற்றுமொரு பெண் கவலையுடன் தெரிவித்தார். அம்பிட்டியே சுமனரத்தின தேரர் குழப்பம் விளைவித்த மயிலாம்பாவெளி சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து சிறிநேசன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் நிலமைகளை கேட்டறிந்துகொண்டதுடன் உதவிப் பொலிஸ் அத்தியசகரை தொடர்பு கொண்டு அம்பிட்டியே சுமனரத்தின தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் வாழும் இனங்களுக்கிடையில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுவரும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர், இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளது இது முதற்தடவையல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம்சாட்டுகின்றார். எனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள அம்பிட்டியே சுமன ரத்ன தேரர், சிங்கள பௌத்தர்களின் அடையாளங்களை அழிக்கும் பாரிய சதித்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளதுடன், இதனை தடுக்க சிங்கள பௌத்த மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் தனது சமூக வலைத்தளம் ஊடாக அழைப்பு விடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.