கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமெரிக்கா அறிவிப்பு

breaking
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), சவுதி அரேபிய மன்னராட்சியைப் பற்றியும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இந்த நிலையில் அவர் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்றிருந்தபோது, அங்கு வைத்து படுகொலை செய்யப்பட்டார். முதலில் இதை ஒப்புக்கொள்ள மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது. கசோக்கியின் படுகொலை, பல நாட்களுக்கு முன்பே சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று துருக்கி அதிபர் எர்டோகன், தன் கட்சி எம்.பி.க்கள் மத்தியில் பேசுகையில் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டதற்கு வலுவான ஆதாரங்கள் துருக்கியிடம் உள்ளது என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “கசோக்கியின் படுகொலை மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளது. வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட விஷயங்களில், இது மிக மோசமாக மறைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். அவரை கொலை செய்ய வேண்டும் என்று எண்ணியவர்கள், மிகப்பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ உறுதியான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- கசோக்கி படுகொலையில் தொடர்புடைய சவுதி அரேபிய அதிகாரிகள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. அவர்கள் மீது பொருளாதார தடை விதிக்க பரிசீலிக்கப்படுகிறது. இந்த தண்டனை, அமெரிக்காவின் கடைசி தண்டனை ஆகிவிடாது. அவர்களை பொறுப்பேற்க வைப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் கண்டுபிடிப்போம். தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள். கசோக்கி படுகொலையில் தொடர்புடைய உண்மைகள் அத்தனையையும் கண்டறிய முயற்சிப்போம். நாடாளுமன்றத்தை கலந்து ஆலோசிப்போம். இந்த விவகாரத்தில், பிற நாடுகளுடனும் இணைந்து செயல்படுவோம். கசோக்கி படுகொலை போன்ற இரக்கமற்ற செயல்களை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்று அவர் கூறினார். இதற்கிடையே கசோக்கி படுகொலையில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. சபை எழுப்பி உள்ளது.