சுமந்திரனும் டக்ளஸும் எந்த வகையறா? - புகழேந்தி தங்கராஜ் |பகுதி இரண்டு

breaking

13 ஆண்டுகளாக நீதி கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிற இலங்கை அரசு,  தமிழருக்கான நீதியை வழங்க முடியாது என்று இப்போதும் முரண்டு பிடித்தால், அதுவும் இலங்கைக்கு நல்லதல்ல! எந்த இனத்துக்கு சொந்த நாட்டில் தொடர்ந்து  நீதி மறுக்கப்படுகிறதோ, அந்த இனம் அந்த ஒரே காரணத்துக்காகப் பிரிந்து செல்கிற உரிமையை அழுத்தந்திருத்தமாக  நிலைநாட்டிவிட முடியும். அந்த ஒரே காரணத்தை வைத்தே, ‘பிரிவதைத் தவிர வேறு வழியில்லை’ என்கிற சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும் முடியும்.

இலங்கைக்கு இரண்டே வாய்ப்புகள் தான் இருக்கின்றன இப்போது! சர்வதேச விசாரணை நடக்க வழிவிடுவதன் மூலம் தமிழீழத்துக்கு வழிவகுக்கப்  போகிறதா? நீதியை மறுப்பதன் மூலம், தமிழீழக் கோரிக்கையை உலக அளவில் வலுப்படுத்தப் போகிறதா? சிங்கள அரசு, இரண்டில் எதைச் செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படியா அப்படியா என்பதை அதுதான் முடிவு செய்யவேண்டும். 

இதெல்லாம் உடனடியாக நடந்துவிடுமா - என்கிற கேள்விக்கு ஒரே ஒரு பதில்தான் இருக்கிறது. இன்றில்லாவிட்டாலும் நாளை இதுதான் நடக்கும். நாளை நடக்காவிட்டாலும் நாளை மறுநாள் இதுதான் நடக்கும். தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக்கொள்ள நினைத்துப் புதைகுழியில் இறங்கியிருக்கிறது இலங்கை. அதிலிருந்து விடுபட வாய்ப்பேயில்லை. இனவெறியால் தன்னுடைய தலைவிதியை அது தீர்மானித்துக் கொண்டுவிட்டபிறகு யார்தான் என்ன தான் செய்ய முடியும்? அநேகமாக ஒன்றுபட்ட இலங்கையின் கடைசி அதிபர் என்கிற பெயர், குறுக்கு வழியில் அரியணையில் அமர்ந்திருக்கும் ரணிலுக்குக் கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. 



இதுதான் நடக்குமென்றாலும், இதை விரைவுபடுத்துவது  தமிழினத்தின் கையில் இருக்கிறது. இன அழிப்புக்கான சர்வதேச நீதியைப் பெற, சர்வதேசத்தின் ஒட்டுமொத்த கவனத்தை நாம் ஈர்த்தாக வேண்டும். மயிலே மயிலே இறகு போடு - என்றால் போடாது, போடு போடு என்று போட்டால்தான் போடும்! ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன், அடிவயிற்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் உரக்கக் குரல் கொடுத்தாக வேண்டும். குரல் கொடுப்பது என்றால், வெறுமனே குரல் கொடுப்பது மட்டுமல்ல…. களத்தில் இறங்கிச் செயல்படுவது! அதுதான்  முக்கியம்.

சர்வதேசப் பொறிமுறையை இலங்கை அரசியலமைப்பு ஒருபோதும்  அனுமதிக்காது -  என்று வெளிப்படையாகவே அறிவித்திருப்பதன் மூலம், இந்த நிலையில் தமிழினம் எப்படிப் போராட வேண்டும் என்பதைக் கோடுபோட்டுக் காட்டியிருக்கிறது  ரணில் அரசு. ஒன்றரை லட்சம் தமிழர்களின் உயிர்களுக்கு நீதி கிடைக்க எந்த அரசியலமைப்பு தடையாயிருக்கிறதோ, அந்த அரசியலமைப்பைச் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்குவதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். இக்கினியாகலை கரும்பாலை நெருப்பில் நூற்றுக்கணக்கான தமிழ்த் தொழிலாளிகளைச் சுட்டுப் பொசுக்கிய ஒரு பேரினவாதத்தின் அரசியலமைப்பைத் தீக்கிரையாக்குவதில் எந்தத் தவறுமில்லை.



லண்டன், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ஆப்பிரிக்கா, தமிழ்நாடு, தமிழீழம் - என்று, இந்த பூமிப்பந்தின் எட்டுத்திக்கும் தமிழர்கள் வாழ்கிற நிலத்திலெல்லாம், இலங்கைத் தூதுவரகங்களுக்கு முன் அந்த அரசியலமைப்பை நெருப்புக்கு இரையாக்குவது, அகிம்சைப் போராட்டமாகவும், அறப் போராட்டமாகவும் தான் அந்தந்த நாடுகளால் கருதப்படும். அதேசமயம், சிங்கள அரசுக்கு ஒட்டுமொத்தத் தமிழினமும் ஒருங்கிணைந்து விடுக்கிற வலுவான எச்சரிக்கையாகவும் இருக்கும். 

ஈகோ பார்க்காமல், உள் முரண்களை விவாதித்துக் கொண்டிருக்காமல், அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒரே நாளில் உலகெங்கும் இந்த அக்கினிப் பரீட்சையில் இறங்கினால், சர்வதேச அரங்கில் சிங்களப் பேரினவாத அரசு தலைகுனிந்து நிற்க நேரும். ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்த அகிம்சைப் போராட்டத்தைக் கவனமாக அவதானிக்கும். ஜெனிவாவில் நிச்சயமாக அது எதிரொலிக்கும். இதைக்காட்டிலும் எளிதாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க வேறு போராட்ட வடிவம் இருந்தால், அதைக் கடைப்பிடிக்கலாம்…. தவறில்லை! எதுவாக இருந்தாலும், எதைச் செய்தாலும், விரைந்து செய்வது நல்லது. காலந் தாழ்த்துவது, தமிழினத்தின் முயற்சியை விரயமாக்கிவிடும். 

இனவெறியை வைத்து எதையெல்லாம் அனுபவிக்க முடியும் என்பதற்கு ஜெயவர்தன என்கிற கிழட்டு ஓநாய், வரலாற்று சாட்சி. ரணில், அந்த ஓநாயின் நீட்சி. தேவைப்படுகிறபோதெல்லாம் ஆட்டுத்தோலை அணிந்துகொண்டு ஆட்டுப்பட்டிகளைச் சுற்றிவருகிற நவீன ஓநாய் இது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் அவசியம். காலதாமதமில்லாமல் களத்தில் இறங்குவதும் அவசியம்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் விஷயத்தில் வாய்திறந்து பேசுவோர்,  ஐந்து தரப்பினர். முதல் தரப்பினரான நாம், தாயக மண்ணில் பாதிப்புக்கு உள்ளான எளிய மக்களின் தரப்பு. இன அழிப்புக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் நீதி கேட்கிறோம். கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் நீதி கேட்கிறோம். சிதைக்கப்பட்ட ஒவ்வொரு சகோதரிக்கும் நீதி கேட்கிறோம். காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கேட்கிறோம். 

இரண்டாம் தரப்பு, அரசத் தரப்பு. எங்களை நாங்களே தான் விசாரித்துக் கொள்வோம் என்று முரண்டுபிடிப்பதன் மூலம், வேண்டுமென்றே  விசாரணையை இழுத்தடிக்கிறது. இப்படியே பல ஆண்டுக்காலம் இழுத்தடித்து இன அழிப்புக் குற்றச்சாட்டை நீர்த்துப் போக வைக்க முயல்கிறது.  சர்வதேசத்தையெல்லாம் அனுமதிக்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறது.   மறப்போம் மன்னிப்போம் - என்று போதிக்கிறது. சர்வதேசத்தை ஏமாற்ற, வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்கிறது. அந்தப் போர்வையில், புலம்பெயர் தமிழர்களிடம் பிக் பாக்கெட் அடிக்க முயல்கிறது.

கடைசி மூன்று தரப்பினரும், 2009ல், சொந்த மக்களின் ரத்தவாடையை உணர முடிகிற அளவுக்கு அண்மையில் இருந்தவர்கள். சொந்த உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்று குவிக்கப்பட்ட போது அதைத் தடுக்க முயலாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்தவர்கள். இப்போது, சொந்த இனத்தை அழித்த கொலைக்குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காக மணல்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தரப்பு, போர்க்குற்றம் என்கிற வார்த்தையை பாவிப்பதுதான் புத்திசாலித்தனம் என்று நைச்சியமாகப் பேசி, குற்றவாளிகளுக்கு சேஃப் பாசேஜ் கொடுக்கப் பார்க்கிறது. அடுத்த தரப்பு, ‘இன அழிப்புக்கு நீதி கேட்டால் மிச்சம் மீதி இருப்பதையும் அழித்துவிடுவார்கள்’ என்று நம்மை  மிரட்டிப் பணிய வைக்கப் பார்க்கிறது. ஐந்தாவது தரப்பு, போர்க்குற்றமென்று வந்தால் புலிகள் மீதும் சட்டம் பாயுமென்று பயமுறுத்திப் பார்க்கிறது. உண்மையில் இவர்கள் தான் ஐந்தாம்படையினர். 




இன அழிப்புக்குக் காரணமான சிங்கள அரசுத் தலைவர்களையும், அதைச் செயல்படுத்திய சிங்களத் தளபதிகளையும் அதிகாரிகளையும் ராணுவத்தினரையும் காட்டிலும் கொடியவர்கள், இன அழிப்புக் குற்றவாளிகள் மீது சர்வதேசம் பாய்ந்துவிடாதபடி பக்குவமாகப் பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுக்கிற இவர்கள் தான்!

அரசியலமைப்பைத் தீக்கிரையாக்கும் போராட்டம், அரசுக்கு மட்டுமின்றி, ஒன்றரை லட்சம் உறவுகளின் உயிருக்குப் பச்சைத் துரோகம் செய்கிற இந்த  ஐந்தாம் படையினருக்கும் விடுக்கிற எச்சரிக்கையாக இருக்கும். என்ன செய்யப் போகிறோம் நாம்? என்ன செய்வது, என்ன செய்வது…. என்கிற தன்னிரக்கத்திலேயே தலைதாழ்ந்து கிடக்கப் போகிறோமா? சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கிற அறப் போர்க்களத்தில் தலைநிமிர்ந்து நிற்கப்  போகிறோமா?


 - புகழேந்தி தங்கராஜ்