வனவிலங்குகளுக்காக வெடியில்லாத தீபாவளியை கொண்டாடும் கிராமமக்கள்!

breaking
தீபஒளி திருநாளான இன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், வனவிலங்குகளின் நலன் கருதி பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாடு  நீலகிரி மாவட்டத்தில் எழில் கொஞ்சும் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சொக்கநள்ளி, ஆனைக்கட்டி, சிறியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆதிவாசி இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை நம்பியே வாழ்ந்து வரும் இந்த மக்கள், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த செயலையும் செய்வதில்லை. குறிப்பாக வனவிலங்குகளுக்காக இந்த கிராம மக்கள் தீபாவளியன்று, பட்டாசுகள் கூட வெடிப்பதில்லை. பட்டாசுகள் வெடிக்கும் போது அந்த சத்தத்தால் வனவிலங்குகளும், பறவைகளும் அச்சமடைந்து வேறு இடங்களுக்கு செல்லும் என்பதால், பட்டாசுகள் வெடிப்பதை தவிர்ப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். புத்தாடை உடுத்தியும், பலகாரங்களை பரிமாறியும் சத்தம் இல்லாத தீபாவளியை கொண்டாடி வருவதாக ஆனைக்கட்டி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அடுத்த சென்றாயம்பட்டியை சேர்ந்த மக்களும், தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை. இந்த பகுதியில் உள்ள புளியமரத்தில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசித்து வருகின்றன. வவ்வால்களை பாதுகாக்கும் விதமாக தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் கூட பட்டாசுகளை வெடிப்பதில்லை என்கின்றனர் பொதுமக்கள். பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடு பலருக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஒருபுறம் கருத்துக்கள் எழும் அதே நேரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க கிராம மக்கள் பின்பற்றி வரும் இந்த கட்டுப்பாடுகள் பாராட்டுதலுக்கும் உள்ளாகின்றன.