கூட்டமைப்புக்கு கட்டுப்படமாட்டோம்: அடம் பிடிக்கும் சுரேஸ்

breaking
  கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டு செயற்படமாட்டார் என்று அந்தக் கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை, கூட்டமைப்பின் முடிவு கட்டுப்பட்டுத்தாது, எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்னரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். நிலைமைகளை அவதானிக்கும். நிலைமைகள் எப்படிப் போகின்றன என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தநிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான வியாழேந்திரன் அரச தரப்புக்குத் தாவி பிரதி அமைச்சர் பதவியை பெற்றுள்ளார். அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த, ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.