தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைக்க சம்பந்தன் அழைப்பு

breaking
தென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில் குதித்துள்ளன என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படுவதற்கு முன்னர், சகல தமிழ்க் கட்சிகளையும் ஓரணியின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.  “தெற்கு அரசாங்கம் இந்நாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளல், அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளல் எவ்வாறு என்பது தொடர்பிலான சிந்தனையிலேயே இருக்கின்றன. அது ஒக்டோபர் 26ஆம் திகதி முதல், இதுவரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை வைத்து பார்க்கும் போது, தெட்டத்தெளிவாகின்றது” என்றார். “தெற்கில் ஏற்பட்டுள்ள இவ்வாறான துரோகத்தனமான அரசியலுக்குள், நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அதிகாரத்துக்கான தேடலிலேயே ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்த சம்பந்தன், இந்த அரசியவாதிகள் காலையில் கூறியதை மாலையில் மாற்றிக் கூறுபவர்களாக மாறிவிட்டனர். ஆகையால், இவ்வாறானவர்கள் கூறுவதை நம்பமுடியாது” என்றார். “அரசியலில் பயணம் செய்யும் போது, அதிகூடிய நம்பிக்கையை கொண்டிருக்கவேண்டும். இது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையாக இல்லாதிருந்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் மிகவும் ஆழமாக சிந்திக்கவேண்டிய காரணமாகவே உள்ளது” என்றார். “தென்னிலைங்கை அரசியல்வாதிகளிடம், ஒற்றுமை, நம்பிக்கை, தெளிவான எதிர்கால பயணம் இல்லை என்பதால், அவர்களின் செயற்பாடுகள் மிகவும் அற்பதனமானவை. அவ்வாறானவர்கள் மிகவும் கடினமான பயணத்தை மேற்கொள்கின்றனர்” என்று தெரிவித்துள்ள அவர், “இவ்வாறான நிலைமைகளை உதாரணமாக எடுத்துக்கொண்டு, சகல பிரச்சினைகளையும் ஒருபுரத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, சகல தமிழ்க் கட்சிகளும் ஓரணியில் ஒன்றுதிரளவேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார்.