மலையக மக்களிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்-பல்கலைக்கழக மாணவர் கவனயீர்ப்பு

breaking
  மலையகத் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தி வடதமிழீழம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக ஒரு மணிநேரம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மலையக தோட்ட தொழிலாளர்கள் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டுமென வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் ஆதரவைத் தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்த போராடடத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியுருந்தனர். அதாவது, தோட்டத் தொழிலாளர்கள் கேட்பது உதவி அல்ல உரிமையை, அரசே வேடிக்கை பார்க்காதே, உழைப்பவர்களுக்கு மரியாதை வழங்கு, ஏன் இந்த தாமதம், மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும். உள்ளிட்ட பல கோசங்களை எழுப்பியிருந்தனர். அத்தோடு தமது உரிமையை கேட்கின்ற தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலுயுறுத்தியிருந்தனர். இப் போராட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பல்கலைக்கழகம் சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்