தமிழீழ தேசிய மலர்:கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை

breaking
  ஈழத் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, விழுமியத்துடன் கலந்துவிட்ட கார்த்திகைப் பூ என நாம் அழைக்கும் காந்தள் மலரினது இதழ்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் பெண்களின் கைவிரல்களுக்கு ஒப்பிட்டுக் கூறப்படுவதால் இதனைக் காந்தள் மலர் என்பர். இக்கார்த்திகைப் பூ பண்டைத் தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர் என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தை பதிற்றுப்பத்து அத்தாட்சிப்படுத்துகின்றது. மரகத மணித்தாள் செறிந்த மணிக் காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது. காந்தள் முழு முதல் மெல்லிழை குழைய முயங்கலும் இல்லுய்த்து நடுதலும்” என்று தலைவனுடைய மலையில் இருந்து மழை நீரால் அடித்து வரப்பட்ட காந்தள் கிழங்கை நட்டு வளர்த்துத் தன்னை ஆற்றுப்படுத்தும் நாயகி பற்றி குறுந்தொகை கூறுகிறது. சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்” என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது. வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை” என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க் கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப் பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது. இப்படிக் கார்த்திகைப் பூவில் வாய் நனைக்காத புலவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பழந்தமிழர் இலக்கியங்கள் எங்கும் கார்த்திகைப் பூ நிறைந்து கிடக்கின்றது. சுதந்திர தமிழீழ விடுதலையை அடி நாதமாகக் கொண்டு அதற்கான விடுதலைப் போரை முன்னிறுத்தி போரிலே தங்களுயிர்களை தாரை வார்த்து தமிழர் மானம் காத்த மாவீரர் நாளை வர்ணிக்க மனித மொழிகளில் வார்த்தையில்லை. ஏரி நட்சத்திரங்களாக விடுதலையின் விடி வெள்ளிகளாக எரிந்து எமது விடுதலை வானை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சுதந்திரச் சிற்பிகளை நினைவுகூரும் நாள் கார்த்திகை 27 ஆகும். கார்மேகம் கார்த்திகையில் கீழிறங்கி வந்து கல்லறைக் காவல் தெய்வங்களின் கால்கள் நனைக்கும் நாள். ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்தும் அளப்பரிய அற்புதங்கள் செய்தும் மயிர் கூச்செறியும் சாதனைகள் செய்து எமது விடுதலைப் போராட்டத்தை பூமிப்பந்தெங்கும் விளங்கச் செய்த இந்த மாவீரர்களின் வீரத் திருநாள் கார்த்திகை 27..!